அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா கடற்கரையோரத்தில் இருந்த ஒரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோ அரசுக்கு எதிராக அமெரிக்கா செலுத்தும் அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
“நாங்கள் இப்போதுதான் வெனிசுவேலா கடற்கரையில் ஒரு டேங்கர் கப்பலைக் கைப்பற்றியுள்ளோம். இது ஒரு பெரிய டேங்கர், மிகப் மிகப் பெரியது, உண்மையில் இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகப் பெரியது,” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட கப்பலின் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க அட்டர்னி ஜெனரல், இந்தக் கப்பல், “வெனிசுவேலா மற்றும் இரானிலிருந்து தடைசெய்யப்பட்ட எண்ணெயை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு கச்சா எண்ணெய் டேங்கர்.” என்று விவரித்தார்.
இந்த நடவடிக்கையை உடனடியாக கண்டித்த வெனிசுவேலா, இதை “சர்வதேச கடற்கொள்ளை” என்று கூறியது. முன்னதாக, அதிபர் மதுரோ, வெனிசுவேலா ஒருபோதும் “எண்ணெய் காலனியாக” மாறாது என்று அறிவித்திருந்தார்.
வெனிசுவேலா அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கடத்துவதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது. கூடவே, அதிபர் மதுரோவை தனிமைப்படுத்தும் முயற்சிகளைச் சமீப மாதங்களாகத் தீவிரப்படுத்தியுள்ளது.
உலகிலேயே மிகப்பெரியதான எண்ணெய் இருப்புகளில் சிலவற்றைக் கொண்டுள்ள வெனிசுவேலா, அமெரிக்கா தனது வளங்களைத் திருட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
கப்பல் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, குறுகிய கால விநியோகக் கவலைகளால் பிரெண்ட் க்ரூட் எண்ணெய் விலை புதன்கிழமையன்று சிறிது உயர்ந்தது.
இந்த நடவடிக்கை கப்பல் நிறுவனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதியை மேலும் பாதிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க சட்டம் ஒழுங்கு அமலாக்கத்துறைக்குத் தலைமைத் தாங்கும் அட்டர்னி ஜெனரல் பாம் போன்டீ, இந்த பறிமுதல் நடவடிக்கையை மத்திய புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்புத்துறை, உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை ஒருங்கிணைத்ததாக தெரிவித்தார்.
“பல ஆண்டுகளாக, வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சட்டவிரோத எண்ணெய் கப்பல் போக்குவரத்து வலையமைப்பில் ஈடுபட்டதற்காக, இந்த எண்ணெய் கப்பல் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டுள்ளது,” என்று நாட்டின் தலைமை வழக்கறிஞர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
போன்டீ வெளியிட்ட காட்சிகளில், ஒரு ராணுவ ஹெலிகாப்டர் ஒரு பெரிய கப்பலின் மேல் வட்டமிடுவதையும், கயிறுகள் மூலம் வீரர்கள் கப்பலின் தளத்தில் இறங்குவதும் காட்டப்பட்டது. துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய சீருடை அணிந்த வீரர்கள் கப்பலில் அசையும் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டில் இருந்து, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் ஏவப்பட்டதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தார்.
அந்த விமானம் தாங்கிக் கப்பல் கடந்த மாதம் கரீபியன் பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையில் இரண்டு ஹெலிகாப்டர்கள், 10 கடலோர பாதுகாப்பு வீரர்கள், 10 கடற்படையினர் மற்றும் சிறப்பு படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த நடவடிக்கையைக் குறித்து அறிந்திருந்தார், மேலும் டிரம்ப் நிர்வாகம் இது போன்ற கூடுதல் நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருவதாக ஒரு நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் சிபிஎஸ்ஸுக்குத் தெரிய வந்தது.
டேங்கரில் உள்ள எண்ணெயை அமெரிக்கா என்ன செய்யும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, டிரம்ப், “அதை நாங்களே வைத்துக்கொள்வோம் என நினைக்கிறேன். எண்ணெயை நாங்கள் தான் வைத்துக்கொள்ளப் போகிறோம் எனக் கருதுகிறேன்,” என்று கூறினார்.
கடல்சார் ஆபத்துகளை கண்காணிக்கும் வான்கார்ட் டெக் நிறுவனம், அந்தக் கப்பலை ஸ்கிப்பர் என்று அடையாளம் கண்டு, அது நீண்ட காலமாக தனது இருப்பிடத்தை “ஸ்பூஃபிங்” அதாவது, போலியான இருப்பிடத்தை ஒளிபரப்பி வந்திருக்கலாம் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது.
ஹெஸ்புலா மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை-குட்ஸ் படைக்கு வருவாய் ஈட்டித் தரும் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அமெரிக்க கருவூலத் துறை 2022-ஆம் ஆண்டில் ஸ்கிப்பர் கப்பலுக்கு தடைவிதித்ததாக சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிபிசி வெரிஃபை, இந்த டேங்கர் கப்பலை மரைன் டிராஃபிக்கில் கண்டுபிடித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு அதன் நிலை கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டபோது அது கயானா நாட்டுக் கொடியின் கீழ் பயணித்துக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது.
இருப்பினும், புதன்கிழமையன்று மாலை கயானாவின் கடல்சார் நிர்வாகத் துறை வெளியிட்ட அறிக்கை, ஸ்கிப்பர் “தவறாகக் கயானா கொடியைப் பறக்கவிட்டது, ஏனெனில் அது கயானாவில் பதிவு செய்யப்படவில்லை.” என்று கூறியது.
முன்னதாக புதன்கிழமையன்று ஒரு பேரணியில் பேசிய அதிபர் மதுரோ, வெனிசுவேலாவுடனான போரை எதிர்த்த அமெரிக்கர்களுக்கு ஒரு செய்தியை 1988-ஆம் ஆண்டு பிரபல பாடலின் வடிவில் வழங்கினார்.
மதுரோ ஸ்பானிஷ் மொழியில், “போருக்கு எதிரான அமெரிக்க குடிமக்களுக்கு, நான் ஒரு பிரபலமான பாடலின் மூலம் பதிலளிக்கிறேன், கவலைப்படாதீர்கள், மகிழ்ச்சியாக இருங்கள்.” என்று கூறிவிட்டு, 1988ம் ஆண்டு பிரபல பாடலின் வரிகளைப் பாடினார்.
அப்போது, “போர் வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள். வேண்டாம், வேண்டாம் மோசமான போர் வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள்” எனும் வரிகளைக் குறிப்பிட்டார்.
இந்தப் பேரணிக்கு முன்பு டேங்கர் கைப்பற்றப்பட்டதைப் பற்றி மதுரோ அறிந்திருந்தாரா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
சமீப நாட்களாக, அமெரிக்கா வெனிசுவேலாவின் வடக்கு எல்லையாக இருக்கும் கரீபியன் கடலில் தனது ராணுவ இருப்பை அதிகரித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான படையினரும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு (USS Gerald Ford) விமானந்தாங்கி கப்பலும் வெனிசுவேலாவுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று பிபிசி வெரிஃபை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, ஏதேனும் ஒரு வகையான ராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது.
செப்டம்பர் மாதம் முதல், அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் குறைந்தது 22 தாக்குதல்களை நடத்தியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் இந்த படகுகள் போதைப்பொருள் கடத்துவதாகக் கூறுகிறது. இந்தக் தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் இறந்துள்ளனர்.
(இந்த செய்திக்காக, பிரேசிலின் சா பாலோவில் இருந்து ஐயோன் வெல்ஸ் பங்களித்துள்ளார்)