பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம், அவரது வெளியுறவுக்கொள்கையின் லட்சியங்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
வெனிசுவேலா அதிபர் மற்றும் அவரது மனைவியை அந்நாட்டின் தலைநகர் கரகாஸில் இருந்து ஓர் அதிரடி இரவு நேரத் தாக்குதல் மூலம் கைது செய்ததன் வழியாக, வெனிசுவேலாவிற்கு எதிராக விடுத்த எச்சரிக்கைகளை டிரம்ப் நிஜமாக்கியுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து விவரிக்கும்போது, டிரம்ப் 1823-ஆம் ஆண்டின் ‘மன்றோ கோட்பாட்டையும்’, மேற்கு அரைக்கோளத்தில் (வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களை உள்ளடக்கிய பகுதி) அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் அதன் வாக்குறுதியையும் மீண்டும் கையில் எடுத்தார். மேலும், அதற்கு “டான்றோ கோட்பாடு” என்று மறுபெயரிட்டார்.
சமீப நாட்களில் பிற நாடுகளுக்கு எதிராக அவர் விடுத்துள்ள சில எச்சரிக்கைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்து
கிரீன்லாந்தில் பிட்டுஃபிக் விண்வெளித் தளம் என்ற ஒரு ராணுவத் தளம் அமெரிக்காவுக்கு ஏற்கனவே உள்ளது. ஆனால் ட்ரம்ப் அந்த முழுத் தீவையும் கைப்பற்ற விரும்புகிறார்.
“தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் நமக்கு கிரீன்லாந்து தேவை” என்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், அந்தப் பிராந்தியம் முழுவதும் “ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிறைந்துள்ளன” என்றும் குறிப்பிட்டார்.
டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியான இந்த பரந்த தீவு, அமெரிக்காவிற்கு வடகிழக்கே சுமார் 2,000 மைல் (3,200 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களின் உற்பத்திக்குத் தேவையான அரிய வகை கனிமங்கள் கிரீன்லாந்தில் அதிகளவில் உள்ளன.
தற்போது, இந்த கனிமங்களின் உற்பத்தியில் அமெரிக்காவை விட சீனா வெகுவாக முன்னிலையில் உள்ளது.
வட அட்லாண்டிக் பகுதியில் கிரீன்லாந்து ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது ஆர்க்டிக் வட்டத்திற்குள் நுழைவதற்கான வழியாக திகழ்கிறது. வரும் ஆண்டுகளில் துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால், புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவை அமெரிக்கா கட்டுப்படுத்துவது என்பது ஒரு “கற்பனை” என்று டிரம்பிற்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெடெரிக் நீல்சன் பதிலடி கொடுத்துள்ளார்.
“இனி அழுத்தங்கள் வேண்டாம். மறைமுகக் குறிப்புகள் வேண்டாம். இணைத்துக் கொள்வது போன்ற கற்பனைகள் வேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் அது முறையான வழிகளிலும், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தும் நடக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கொலம்பியா
வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வெனிசுவேலாவின் மேற்கு அண்டை நாடான கொலம்பியாவும் கணிசமான எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. இது தங்கம், வெள்ளி, மரகதம், பிளாட்டினம் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் முக்கிய உற்பத்தியாளராகவும் உள்ளது.
இப்பிராந்தியத்தின் போதைப்பொருள் வர்த்தகத்தில், குறிப்பாக ‘கோகைன்’ கடத்தலில் இது ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல், கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
இதன் விளைவாக, கொலம்பியாவின் இடதுசாரி அதிபருடன் டிரம்ப் தொடர் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
போதைப்பொருள் கும்பல்கள் “செழிக்க” பெட்ரோ அனுமதிக்கிறார் எனக் கூறி, கடந்த அக்டோபரில் அமெரிக்கா அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
“கோகைன் தயாரிப்பதையும் அதை அமெரிக்காவிற்கு விற்பதையும் விரும்பும் ஒரு மனிதனால் கொலம்பியா வழிநடத்தப்படுகிறது. அவர் அதை நீண்ட காலத்திற்குச் செய்யப் போவதில்லை” என்று ஞாயிற்றுக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பேசும்போது டிரம்ப் கூறினார்.
கொலம்பியாவைக் குறிவைத்து அமெரிக்கா ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்று கேட்டதற்கு, டிரம்ப், “அது எனக்கு நன்றாகத் தோன்றுகிறது” என்று பதிலளித்தார்.
வரலாற்று ரீதியாக, அமெரிக்காவின் போதைப்பொருள் ஒழிப்புப் போரில் கொலம்பியா ஒரு நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. போதைப்பொருள் கும்பல்களை எதிர்கொள்ள ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக அந்நாடு அமெரிக்காவிடமிருந்து பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரான்
இரானில் தற்போது அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அங்கு போராட்டக்காரர்கள் மேலும் கொல்லப்பட்டால், அந்த நாட்டு அதிகாரிகள் மீது “மிகக் கடுமையான தாக்குதல்” நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
“நாங்கள் இதை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கடந்த காலத்தைப் போலவே அவர்கள் மக்களைக் கொல்லத் தொடங்கினால், அமெரிக்காவிடமிருந்து அவர்கள் மிகக் கடுமையான பதிலடியைச் சந்திப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கோட்பாட்டு ரீதியாக, இரானானது “டான்றோ கோட்பாட்டின்” எல்லைக்கு வெளியே இருந்தாலும், கடந்த ஆண்டு அதன் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரான் ஆட்சிக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக டிரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதங்களை உருவாக்கும் இரானின் திறனை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியது.
இதன் உச்சக்கட்டமாக 12 நாட்கள் நீடித்த இஸ்ரேல்-இரான் போர் நடந்தது. அமெரிக்காவும் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது.
கடந்த வாரம் மார்-ஏ-லாகோ இல்லத்தில் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே நடந்த சந்திப்பில், இரான் விவகாரமே முதன்மையானதாக இருந்ததாகக் கூறப்பட்டது.
2026-ஆம் ஆண்டில் இரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நெதன்யாகு ஆலோசித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோ
2016-ஆம் ஆண்டில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபோது, மெக்சிகோவுடனான தெற்கு எல்லையில் “சுவர் எழுப்பப்படும்”என்ற முழக்கம் மிக முக்கியமானதாக இருந்தது.
2025-ஆம் ஆண்டு மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே, மெக்சிகோ வளைகுடாவை , “அமெரிக்க வளைகுடா” என்று பெயர் மாற்றுவதற்கான நிர்வாக ஆணையில் அவர் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதையோ அல்லது சட்டவிரோத குடியேற்றத்தையோ தடுப்பதற்கு மெக்சிகோ அதிகாரிகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், மெக்சிகோ வழியாக போதைப்பொருள் “பெருக்கெடுத்து ஓடுவதாகவும்”, நாம் “நிச்சயமாக ஏதாவது செய்ய வேண்டியிருக்கும்” என்றும் கூறினார்.
அங்குள்ள போதைப்பொருள் கும்பல்கள் “மிகவும் வலிமையாக” இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், அமெரிக்கா மெக்சிகோ மண்ணில் எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்வதை வெளிப்படையாக நிராகரித்துள்ளார்.

கியூபா
புளோரிடாவிற்கு தெற்கே 90 மைல் (145 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள இந்த தீவு நாடு, 1960-களின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது.
இது நிக்கோலஸ் மதுரோவின் வெனிசுவேலாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது.
கியூபா “வீழ்வதற்குத் தயாராக” இருப்பதால், அங்கு அமெரிக்க ராணுவத் தலையீடு தேவைப்படாது என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
“நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அது தானாகவே வீழ்வது போல் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.
மேலும், “அவர்களால் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் கியூபாவுக்கு இப்போது வருமானம் இல்லை,” என்று தெரிவித்த டிரம்ப் , “அவர்கள் தங்களுடைய வருமானம் முழுவதையும் வெனிசுவேலாவிடமிருந்து, குறிப்பாக வெனிசுவேலாவின் எண்ணெயிலிருந்து பெற்றனர்,” என்றும் குறிப்பிட்டார்.
கியூபாவிற்குத் தேவையான எண்ணெயில் சுமார் 30% வெனிசுவேலாவால் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இப்போது மதுரோ பதவியில் இல்லாததால், அந்த விநியோகம் முடங்கும் பட்சத்தில் ஹவானா (கியூபாவின் தலைநகரம்) பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
கியூப குடியேறிகளின் மகனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான மார்கோ ரூபியோ, கியூபாவில் ஆட்சி மாற்றத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஹவானாவில் வசிப்பவராகவோ அல்லது அங்குள்ள அரசாங்கத்தில் இருப்பவராகவோ இருந்தால், நான் கவலைப்படுவேன். குறைந்தபட்சம் ஒரு சிறிய அளவாவது கவலை கொள்வேன்”என்றார்.
மேலும், “அதிபர் பேசுகிறார் என்றால், நீங்கள் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு