பட மூலாதாரம், EPA
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ததன் மூலம், தனது அரசியல் முடிவுகளை ராணுவ பலத்தின் ஆதரவுடன் அமல்படுத்தத் தயார் என்ற நம்பிக்கையை டொனால்ட் டிரம்ப் தெளிவாக உணர்த்தியுள்ளார். அவரது உத்தரவின் பேரில், மதுரோ தற்போது அமெரிக்கக் காவலில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் புளோரிடாவில் உள்ள தனது மார்-எ-லாகோ கிளப் மற்றும் இல்லத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மதுரோ கைதான அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் அமைந்தது. “பாதுகாப்பான, சரியான மற்றும் விவேகமான மாற்றத்தை நாங்கள் செய்யக்கூடிய காலம் வரை அமெரிக்கா வெனிசுவேலாவின் பொறுப்பில் இருக்கும்” என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோவிடம் பேசிய வெனிசுவேலா துணை அதிபர் டெல்சி ரோட்ரீக்ஸ், “உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்” என்று கூறியதாக ரூபியோ தெரிவித்தார். மேலும், ” அவர் மிகவும் கருணையுடன் இருப்பதாக நினைத்தார், ஆனால் அவருக்கு வேறு வழியில்லை” என்றும் ரூபியோ கூறினார்.
வெனிசுவேலாவில் அமெரிக்க ராணுவம் பயன்படுத்தப்படுமா என்பது குறித்த கேள்விக்கு நேரடி பதிலை தவிர்த்த டிரம்ப், “தேவைப்பட்டால், களத்தில் ராணுவ வீரர்களை நிறுத்த நாங்கள் பயப்படவில்லை” என்று அவர் கூறினார்.
ஆனால், தன்னால் வெனிசுவேலாவை தொலைநிலைக் கட்டுப்பாட்டில் (remote control) ஆள முடியும் என்று அவர் நம்புகிறாரா? மார்-எ-லாகோவில் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் ஆகிய இருவராலும் பெரிதும் புகழப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையானது, வெனிசுவேலாவை மறுவடிவமைக்கவும், லத்தீன் அமெரிக்க தலைவர்களை இணக்கத்திற்கு கட்டாயப்படுத்த வைக்கவும் போதுமானதாக இருக்குமா?
அவர் அதை நம்புவது போலவே தெரிந்தது.
ஆதாரங்களின்படி, இது எளிதானதாகவோ அல்லது சுமூகமானதாகவோ இருக்காது.
மதிப்புமிக்க சிந்தனைக் குழுவான ‘சர்வதேச நெருக்கடிக் குழு’ (International Crisis Group), மதுரோவின் வீழ்ச்சி வெனிசுவேலாவில் வன்முறை மற்றும் ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் என்று அக்டோபரில் எச்சரித்திருந்தது.
அதே மாதம், டிரம்பின் முதல் நிர்வாகத்தில் இருந்த பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர அதிகாரிகள், மதுரோ வீழ்ந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றிப் போர்க்கள விளையாட்டு (war-gamed) மூலம் ஆய்வு செய்ததாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது. ஆயுதமேந்திய குழுக்கள் அதிகாரத்திற்காகப் போட்டியிடுவதால் வன்முறை நிறைந்த குழப்பம் ஏற்படும் என்பதே அவர்களின் முடிவாக இருந்தது.
நிக்கோலாஸ் மதுரோவை பதவியிலிருந்து அகற்றி சிறையில் அடைத்தது, அமெரிக்க ராணுவ சக்தியின் மிகக் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாகும்.
அமெரிக்கா மிகப் பெரிய கடற்படை படையணியை திரட்டி, ஒரு அமெரிக்க உயிர் கூட இழக்காமல் தனது இலக்கை அடைந்தது.
வெனிசுவேலா மக்களின் விருப்பத்தைப் புறக்கணித்து, தனது தேர்தல் தோல்வியையே ஒதுக்கித் தள்ளியிருந்தார் மதுரோ. எனவே அவரது விலகல், அந்த நாட்டின் பல குடிமக்களால் சந்தேகமின்றி வரவேற்கப்படும்.
ஆனால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் விளைவுகள், வெனிசுவேலாவின் எல்லைகளைத் தாண்டி, எதிர்காலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
மார்-அ-லாகோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு வெற்றிக் களிப்பு நிறைந்ததாக இருந்தது. மிக உயர்ந்த தொழில்முறைத் திறனுடன் அமெரிக்க படைகள் மேற்கொண்ட அந்த நடவடிக்கையை அவர்கள் கொண்டாடினர்.
ஆனால் இராணுவ நடவடிக்கை என்பது முதல் கட்டம் மட்டுமே.
கடந்த 30 ஆண்டுகளில், பலவந்தமாக ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்திய அமெரிக்காவின் சாதனை பேரழிவாகவே இருந்து வருகிறது.
இந்த செயல்முறையை வெற்றி அல்லது தோல்வி நோக்கி இட்டுச் செல்லுவது, அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகள்தான்.
2003-ஆம் ஆண்டு அமெரிக்கா மேற்கொண்ட படையெடுப்புக்குப் பிறகு, இராக் ரத்தக்களம் நிறைந்த பேரழிவுக்குள் மூழ்கியது. ஆப்கானிஸ்தானில், இருபது ஆண்டுகளும் பில்லியன் கணக்கான டாலர்களும் செலவழித்து மேற்கொள்ளப்பட்ட நாட்டை கட்டமைக்கும் முயற்சிகள், 2021-ல் அமெரிக்கா வெளியேறிய சில நாட்களிலேயே முற்றிலும் சிதைந்தன.
இந்த இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு அருகில் இல்லை.
ஆனால், லத்தீன் அமெரிக்காவில் கடந்த கால தலையீடுகளின் நிழல்கள் – மேலும் எதிர்காலத்தில் நிகழக்கூடிய தலையீடுகளின் அச்சுறுத்தல்கள் – அவ்வளவாக நம்பிக்கை அளிப்பவையாக இல்லை.
1823-ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜேம்ஸ் மன்றோ வெளியிட்ட பிரகடனத்திற்கு டிரம்ப் ஒரு புதிய புனைப்பெயரைச் சோதித்துப் பார்த்தார். அந்தப் பிரகடனம், மேற்கு அரைக்கோளத்தில் (Western hemisphere) உள்ள அமெரிக்காவின் செல்வாக்கு மண்டலத்தில் மற்ற சக்திகள் தலையிட வேண்டாம் என்று எச்சரித்தது. அந்தப் புதிய புனைப்பெயர்: ‘டான்ரோ கோட்பாடு’ (Donroe Doctrine).
“மன்றோ கோட்பாடு ஒரு பெரிய விஷயம் தான், ஆனால் நாங்கள் அதைவிட மிக அதிகமாக முறியடித்துள்ளோம்,” என்று டிரம்ப் கூறினார். “எங்களின் புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கையின் கீழ், மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் மீண்டும் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது” என்றும் அவர் தெரிவித்தார்.
கொலம்பியாவின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ “தன்னைப் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
பின்னர், ஃபாக்ஸ் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், “மெக்சிகோ தொடர்பாக ஏதோ ஒன்று செய்ய வேண்டிய நிலை வரும்” என்றும் அவர் தெரிவித்தார்.
ரூபியோவின் பெற்றோர் கியூப-அமெரிக்கர்கள் என்பதால், அவரது வழிநடத்தலிலேயே அமெரிக்காவின் செயல்திட்டம் அமைந்து வருவதால், கியூபாவும் சந்தேகமின்றி அமெரிக்காவின் அட்டவணையில் உள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் ஆயுதத் தலையீடுகளை மேற்கொண்ட நீண்ட வரலாறு அமெரிக்காவுக்கு உள்ளது.
1994-ஆம் ஆண்டு, அதிபர் பில் கிளின்டன் ஆட்சி மாற்றத்தை அமல்படுத்த 25,000 படையினரையும் இரண்டு விமானத் தாங்கிக் கப்பல்களையும்ம் ஹெய்த்திக்கு அனுப்பிய போது, நான் அங்கு இருந்தேன். அப்போது ஒரு துப்பாக்கிச் சூடும் இல்லாமல் ஹெய்த்தி அரசு சரிந்தது. ஆனால், நல்ல எதிர்காலம் உருவாகுவதற்குப் பதிலாக, அதன் பின்னர் கடந்த 30 ஆண்டுகள் ஹெய்த்தி மக்களுக்கு கிட்டத்தட்ட இடைவிடாத துயரத்தின் காலமாகவே அமைந்தன. இன்று ஹெய்த்தி, ஆயுதம் ஏந்திய கும்பல்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு தோல்வியடைந்த அரசாக மாறியுள்ளது.
டொனால்ட் டிரம்ப், வெனிசுவேலாவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம் என்று பேசினார். ஆனால் ஜனநாயகத்தைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. 2025-ஆம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசை வென்ற வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற கருத்தை அவர் நிராகரித்தார்.
“அவர் தலைவராக இருப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்; அவருக்கு ஆதரவு இல்லை… அவருக்கு மதிப்பும் இல்லை,” என்று அவர் கூறினார்.
2024 தேர்தல்களில் உண்மையான வெற்றியாளர் என பல வெனிசுவேலாவாசிகள் நம்பும் எட்முண்டோ கோன்சாலஸைப் பற்றி அவர் எதையும் குறிப்பிடவில்லை.
அதற்கு பதிலாக, குறைந்தது தற்காலிகமாக என்றாலும், அமெரிக்கா மதுரோவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிகஸை ஆதரித்து வருகிறது.
மதுரோவை அகற்ற அமெரிக்க ராணுவத்துக்கு தேவையான உள்தகவலை வழங்கிய ஏதோ ஒரு அளவிலான உள்கூட்டு இருந்திருக்க வேண்டுமென்றாலும், அவரது முன்னோடியான ஹூகோ சாவேஸ் உருவாக்கிய ஆட்சிமுறை பெரும்பாலும் பாதிப்பின்றியே தொடர்கிறது.
அமெரிக்க தாக்குதலை எதிர்க்க முடியாததால் வெனிசுவேலாவின் ஜெனரல்கள் எவ்வளவு அவமானமாக உணர்ந்தாலும், அந்நாட்டின் ஆயுதப் படைகள் அமெரிக்காவின் திட்டங்களுக்கு எளிதில் இணங்குவார்கள் என்பதற்கு வாய்ப்பு குறைவுதான்.
ராணுவமும், ஆட்சியை ஆதரிக்கும் குடிமக்கள் குழுக்களும், ஊழல் வலையமைப்புகள் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளனர். அவற்றை இழக்க அவர்கள் விரும்பமாட்டார்கள்.
ஆட்சியால் ஆயுதம் வழங்கப்பட்ட குடிமக்கள் ஆயுதக் குழுக்கள் உள்ளன. மேலும், வெனிசுவேலாவில் பிற ஆயுதம் ஏந்திய குழுக்களும் இருக்கின்றன.
அவற்றில் குற்றவியல் வலையமைப்புகளும், பாதுகாப்பான தங்குமிடம் அளித்ததற்கு பதில் உதவியாக மதுரோ ஆட்சியை ஆதரித்த கொலம்பிய கொரில்லா குழுக்களும் அடக்கம்.

வெனிசுவேலாவில் அமெரிக்க தலையீடு, டிரம்பின் உலகக் கண்ணோட்டத்தின் சில அடிப்படைக் கூறுகளைத் தெளிவாக வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.
அவர் மற்ற நாடுகளின் கனிம வளங்களை விரும்புவதை ரகசியமாக வைக்கவில்லை.
ராணுவ உதவிக்குப் பதிலாக யுக்ரேனின் இயற்கை வளங்களிலிருந்து லாபம் ஈட்ட அவர் ஏற்கனவே முயன்றார்.
வெனிசுவேலாவின் மிகப்பெரிய கனிம இருப்புக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தையும், எண்ணெய் தொழில் தேசியமயமாக்கப்பட்டபோது அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்ற தனது நம்பிக்கையையும் டிரம்ப் மறைக்கவில்லை.
“நாங்கள் நிலத்திலிருந்து மிகப்பெரிய அளவிலான செல்வத்தை வெளியே எடுக்கப் போகிறோம். அந்த செல்வம் வெனிசுவேலா மக்களுக்கும், முன்பு வெனிசுலாவில் இருந்த வெளிநாட்டவர்களுக்கும் செல்லும். மேலும் அது அமெரிக்காவிற்கும் திருப்பிச் செலுத்தும் (reimbursement) வடிவில் செல்லும்.”
இது, அவர் தெற்கே மட்டுமல்லாது வடக்கிலும் இதே பார்வையை முன்வைப்பார் என்ற அச்சத்தை கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கில் ஆழமாக்கும்.
புவி வெப்பமடைதல் காரணமாக கிரீன்லாந்தின் பனி உருகும்போது, எளிதில் அணுகக்கூடியதாகி வரும் இயற்கை வளங்களுக்காகவும், ஆர்க்டிக்கில் உள்ள அதன் மூலோபாய நிலைக்காகவும் கிரீன்லாந்தை இணைத்துக்கொள்ளும் தனது விருப்பத்தை அமெரிக்கா கைவிடவில்லை.

சர்வதேச சட்டத்தில் வகுத்துள்ள ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதுதான் உலகை நடத்துவதற்கான சிறந்த வழி என்ற கருத்துக்கு, மதுரோ தொடர்பான நடவடிக்கை மேலும் ஒரு கடுமையான அடியாகவும் அமைந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பே அந்த எண்ணம் சிதைந்த நிலையில் இருந்தது. ஆனால், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், தனக்குப் பிடிக்காத சட்டங்களைப் புறக்கணிக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டவர் என்பதை அவர் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரை கோபப்படுத்தக் கூடாது என்ற நிலையில் இருக்கும் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் உள்ளிட்ட ஐரோப்பிய கூட்டாளிகள் , மதுரோ நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபைச் சட்டப்பிரகடனத்தை வெளிப்படையாக மீறியிருப்பதை கண்டிக்காமல், சர்வதேச சட்டத்தின் கருத்தை ஆதரிக்கிறோம் என்று எப்படிச் சொல்வது எனப் போராடி வருகின்றனர்.
இனி அமெரிக்காவே வெனிசுவேலா நாட்டையும் அதன் எண்ணெய் தொழில்துறையையும் கட்டுப்படுத்தும் என்று டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், வெனிசுவேலாவின் அதிபராக நடிக்கும் ஒரு போதைப் பொருள் மன்னனை கைது செய்யும் பிடிவாரண்டை அமல்படுத்த அமெரிக்க ராணுவம் வெறுமனே உதவியது என்ற அமெரிக்காவின் நியாயப்படுத்தல் பலவீனமானதாகவே தெரிகிறது.
மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அவர் கராகஸில் உள்ள தனது மாளிகையில் சீனத் தூதர்களை சந்தித்திருந்தார்.
இந்த அமெரிக்க நடவடிக்கையை சீனா கண்டித்தது. “அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மையிலான செயல்கள் சர்வதேச சட்டத்தையும் வெனிசுவேலாவின் இறையாண்மையையும் கடுமையாக மீறுகின்றன. மேலும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியப் பிராந்தியத்தில் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளன” என்று சீனா தெரிவித்தது.
“அமெரிக்கா மற்ற நாடுகளின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் மீறுவதை நிறுத்த வேண்டும்” என்றும் சீனா வலியுறுத்தியது.
அப்படியிருந்தாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியதாக சீனா கருதக்கூடும். தைவானை அது பிரிந்து சென்ற ஒரு மாகாணமாகப் பார்க்கிறது. அதை மீண்டும் பெய்ஜிங்கின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தேசிய முன்னுரிமை எனவும் அறிவித்துள்ளது.
வாஷிங்டனில், இதுவே செனட் புலனாய்வுக் குழுவின் ஜனநாயகக் கட்சி துணைத் தலைவரான செனட்டர் மார்க் வார்னரின் உறுதியான அச்சமாக உள்ளது. சீனாவின் தலைவர்கள் மட்டுமல்ல, பிறரும் இதை கூர்ந்து கவனிப்பார்கள் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“குற்றச்செயல் செய்ததாக குற்றம் சாட்டப்படும் வெளிநாட்டு தலைவர்களைப் பிடிக்க, ராணுவ பலத்தைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு உரிமை உள்ளது என்று அது வலியுறுத்தினால், தைவானின் தலைமையின் மீது அதே அதிகாரத்தை சீனா கோருவதற்கு எது தடையாக இருக்கும்? யுக்ரேனின் அதிபரை கடத்துவதற்கு இதே போன்ற காரணத்தை (ரஷ்ய அதிபர்) விளாதிமிர் புதின் முன்வைப்பதை எது தடுக்க முடியும்? இந்த எல்லை ஒருமுறை தாண்டப்பட்டால், உலகளாவிய குழப்பத்தை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் சிதையத் தொடங்கும். அதை முதலில் பயன்படுத்திக் கொள்வது ஆட்சிமுறைக் கட்டுப்பாட்டு அரசுகள்தான்” என்று செனட்டரின் அறிக்கை கூறுகிறது.
டொனால்ட் டிரம்ப், விதிகளை உருவாக்குவது தானே என்றும், தனது கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்காவுக்கு பொருந்துவது பிற நாடுகளுக்கும் அதே சலுகைகள் கிடைக்கும் என்பதல்ல என்றும் நம்புவது போலத் தெரிகிறது.
டொனால்ட் டிரம்ப், அவரே விதிகளை உருவாக்குகிறார் என்று நம்புவதாகத் தெரிகிறது. மேலும், அவரது கட்டளையின் கீழ் அமெரிக்காவிற்கு என்ன பொருந்தும் என்பது மற்றவர்களும் அதே சலுகைகளை எதிர்பார்க்கலாம் என்று அர்த்தமல்ல என்றும் நினைக்கிறார் போல.
ஆனால் அதிகார அரசியலின் உலகம் அப்படிப் செயல்படுவதில்லை.
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகள், உலகளவில் இன்னும் ஒரு 12 மாதங்கள் கலக்கமும் அதிர்வுகளும் நிறைந்த காலமாக இருக்கும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு