பட மூலாதாரம், AFP via Getty Images
ஒர் அசாத்திய நடவடிக்கையாக, அமெரிக்க சிறப்புப் படைகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்தன.
அவர் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அங்கு விசாரிக்கப்படுவார்.
இந்தக் குற்றச்சாட்டை மதுரோ பலமுறை மறுத்து, நாட்டின் பரந்த எண்ணெய் இருப்புக்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கு இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.
வெனிசுவேலாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “தன்னிச்சையானது மற்றும் ஐ.நா. சாசனத்திற்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளன.
அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாகவும், தென் அமெரிக்க பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறியுள்ள சீனா, மதுரோவை உடனடியாக விடுவிக்க கோரியுள்ளது.
அதேசமயம் , அனைத்துப் பிரச்னைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் தீர்க்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியது .
வெனிசுவேலாவின் இறையாண்மையை உறுதி செய்ய போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விஷயத்தில், இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் கருத்து தெரிவித்தது விமர்சிக்கப்படுகிறது.
இந்தியாவின் அறிக்கையில் என்ன இருந்தது?
பட மூலாதாரம், AFP via Getty Images
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கிட்டத்தட்ட 24 மணிநேரம் கழித்து, ஞாயிற்றுக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“வெனிசுவேலாவின் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கான ஆதரவை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது.இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளும் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான முறையின் மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதன்மூலம், அப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை பராமரிக்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சனிக்கிழமை இரவு வெனிசுவேலாவுக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்தலை வழங்கியது. வெனிசுவேலாவுக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது, இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மத்தியில் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ‘அத்துமீறலை’ இந்தியா கண்டிக்கவில்லை என பலரும் விமர்சித்திருந்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தன் சமூக ஊடகப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை, “வெனிசுவேலாவில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சி ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்துகிறது. சர்வதேச சட்ட விதிமுறைகள் ஒருதலைபட்சமாக மீறப்படக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராஃப் ஆங்கில நாளிதழ், அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கைக்கு 24 மணிநேரம் கழித்து புதுதில்லி எதிர்வினையாற்றியுள்ளதாக எழுதியுள்ளது.
மேலும், “2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது இந்தியா ஆற்றிய எதிர்வினையை ஒத்ததாக இது உள்ளது. அதேசமயம், எந்தவொரு தரப்பையும் வெளிப்படையாக ஆதரிப்பதை இந்தியா தவிர்த்துள்ளது.” என எழுதியுள்ளது.
இடதுசாரி கட்சிகளின் வலியுறுத்தல்
பட மூலாதாரம், ANI
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவியை ‘சிறைபிடித்ததற்கு’ இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் அத்துமீறலுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன,” என தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – லிபரேஷன், ஆர்எஸ்பி (புரட்சிகர சோஷலிச கட்சி), ஏஐஎஃப் பி (அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக்) ஆகிய கட்சிகள் இணைந்து அறிக்கையை வெளியிட்டுள்ளன.
அதில், “வெனிசுவேலா மீதான அத்துமீறல் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவி சிலியா ஃப்ளோர்ஸ் ஆகியோரை கடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அப்பட்டமாக மீறி, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்காவின் அத்துமீறலுக்கு எதிராகவும் லத்தீன் அமெரிக்கா மக்களின் ஒற்றுமைக்கு ஆதரவாகவும் தேசியளவிலான போராட்டங்களுக்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுக்கின்றன.,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்காவின் அத்துமீறலை கண்டிக்கும் உலக நாடுகளை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும், மேலும் வெனிசுவேலாவுடன் உறுதியாக துணைநிற்க வேண்டும்.”
இந்தியா விமர்சிக்கப்படுவது ஏன்?
பட மூலாதாரம், AFP via Getty Images
வெனிசுவேலாவில் நடப்பவை குறித்த இந்தியாவின் அறிக்கை பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை எம்.பி மனோஜ் ஜா கூறுகையில், “வெனிசுவேலாவின் எண்ணெய் வளம் குறித்து எந்தவித சாக்குப்போக்குகள் கூறப்பட்டாலும், வரலாறு அவர்களை மன்னிக்காது. இப்போதும் நாம் இலைமறை காய் போல பேசினால் வரலாறு நம்மையும் மன்னிக்காது. நம்முடைய இந்தியா இதுவல்ல, 1952-54ம் ஆண்டு வாக்கில், இதுபோன்று ஒன்று நடந்திருந்தால் இந்தியா ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கும்.” என தெரிவித்துள்ளார்.
“வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது, ஆனால் கண்டனம் தெரிவிக்கவில்லை,” என சர்வதேச விவகாரங்கள் குறித்த பத்திரிகையாளரான ஷஷாங்க் மட்டூ எழுதியுள்ளார்.
தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட யூஎஸ்சி டார்ன்சிஃப் கல்லூரி பேராசிரியரான டெரேக் ஜே கிராஸ்மேன், தன் எக்ஸ் பக்கத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை பகிர்ந்து, “வெனிசுவேலா மீதான டிரம்ப் ராணுவத்தின் படையெடுப்புக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்காது,” என பதிவிட்டிருந்தார்.
“அமெரிக்காவின் மிக முக்கிய புள்ளியாக இந்தியா எப்போதும் இருந்துள்ளது. ஆசியா மற்றும் உலகளவில் எங்களின் மிக முக்கிய கூட்டாளியாக இந்தியா உள்ளது,” என வாஷிங்டனை சேர்ந்த புவிசார் அரசியல் நிபுணரும் வெளியுறவு கொள்கை ஆய்வு நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான மூத்த ஆய்வறிஞருமான ஜான் சிட்டிலிடிஸ் கூறுகிறார். “ஆனால் இது ‘தேசிய முன்னுரிமைக் கோட்பாட்டின்’ கீழ் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்; இந்தக் கட்டமைப்பு டிரம்ப் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு உத்தியில் தெளிவாகத் தெரிகிறது.”
பொதுவான நலன்களுக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பணியாற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘வெளியுறவு கொள்கையில் மாற்றம் வேண்டும்’
இந்தியா-சீனா உறவுகள் தொடர்பான நிபுணர் ஸோராவர் தௌலத் சிங், இந்தியாவின் அறிக்கை கவலையளிப்பதாகவும் அதன் வெளியுறவு கொள்கை முற்றிலும் மாற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் அறிக்கையை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “தன்னை சுற்றி நடக்கும் அதிகார மாற்றங்கள் தொடர்பான இந்தியாவின் வழமையான எதிர்வினையாக இது மாறக்கூடும் என்பதுதான் உண்மையான கவலையாக உள்ளது,” என தெரிவித்துள்ளார்.
“இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய கொள்கை மாற்றம் தேவைப்படுகிறது. ஏனெனில், இத்தகைய பதில் எந்தவொரு உறுதியான பலனையும் அளிக்காது, மேலும் அமெரிக்காவின் எதிர்கால ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் தடுக்காது.”
மேலும் அவர், “இந்தியாவின் அதிகாரபூர்வ அறிக்கைகள் பொருத்தமற்றதாக மாறிவிட்டதை இது உணர்த்துகிறது,” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மூலோபாய விவகாரங்கள் நிபுணர் பிரமா செல்லானியும் இதுதொடர்பான தன் கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு துறையின் அறிக்கை குறித்து அவர் கூறுகையில், “‘ஆழ்ந்த கவலையளிப்பதாக’ கூறியுள்ளதன் மூலம், டிரம்ப் நிர்வாகத்துடனான உறவுகளை பாதிக்காமல் அதன் ஒருதலைபட்சமான ராணுவ நடவடிக்கையை தாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை இந்தியா சமிக்ஞை செய்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
“எனினும், ஐநா சாசனத்தின் பிரிவு 2(4)-யை (படையை பயன்படுத்துவதற்கான தடை), அப்பட்டமாக மீறும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதுல் இந்தியா தோல்வியடைந்ததை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், மேலும் இது உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைவராக இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.”
இந்தியாவின் அறிக்கைக்கு ஆதரவு குரல்
பட மூலாதாரம், ANI
எனினும், தற்போதைய பதற்றமான சூழலுக்கு ஏற்றதாக இந்தியாவின் எதிர்வினை அமைந்துள்ளதாக, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதை இந்திய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அவர் கூறுகையில், “ஐநா சாசனம் மற்றும் சர்வதேச சட்டம் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. நாம் தற்போது காணும் இந்தச் சூழல், உலக ஒழுங்கின் சிதைவையும் அதற்குப் பதிலாக குழப்பம் ஏற்படுவதையும் உணர்த்துகிறது. இந்த குழப்பமான சூழலில், ‘வலியதே வெல்லும்’ என்ற கொள்கை காட்டுத்தனமான விதியாக மாறும் அபாயம் உள்ளது. இந்தியா ஒரு சிறிய நாடும் அல்ல, மாறாக வல்லரசு நாடும் அல்ல, நாம் இந்த காலகட்டத்தை மிகுந்த ராஜீய ரீதியாக கையாள வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
தி இந்து ஆங்கில நாளிதழின் ராஜீய விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் சுஹாசினி ஹைதர், இந்தியாவின் நிதானமான பதில், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுடன் தொடர்புடையது என்று தெரிவித்துள்ளார்.
அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு எச்சரிக்கையுடனான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் இந்த அறிக்கை யுக்ரேன், காஸா மற்றும் இரானில் குறித்த இந்தியாவின் சமீபத்திய நிலைப்பாடுகளுடன் இது ஒத்துப்போவதாக ராஜீய விவகார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளதுடன், அது ஒரு பெரிய கவலையாகவும் கருதப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு