ஆஸ்திரியாவில் உள்ள ஒரு பசுவின் நடவடிக்கைகளைக் கவனித்த பிறகு, கால்நடைகளின் திறன் குறித்து விஞ்ஞானிகள் மீண்டும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
வெரோனிகா என்று பெயரிடப்பட்ட அந்தப் பசு, தன்னைச் சுற்றியுள்ள சில பொருட்களைப் பயன்படுத்தும் விதத்தையும், அதற்கு இருக்கும் திறமையையும் கண்டு விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர்.
விஞ்ஞானிகள் முன்பு நினைத்ததை விட பசுக்களுக்கு அதிக திறன்கள் இருப்பதாக வியன்னா ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரியாவில் உள்ள ஒரு கிராமத்தில், வெரோனிகா என்ற பசு, தனக்குக் கிடைக்கும் குச்சிகள், இலைகள் மற்றும் துடைப்பங்களைப் பயன்படுத்தி தனது முதுகைத் தானே தேய்த்துக் கொள்கிறது.
இந்த விஷயம் இறுதியில் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் உள்ள ‘விலங்கு நுண்ணறிவு நிபுணர்களிடம்’ கொண்டு செல்லப்பட்டது.
அவர்கள் அந்தப் பசுவை உற்றுநோக்கியபோது, அது ஒரே கருவியை வெவ்வேறு வேலைகளுக்காக வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துவது தெரியவந்தது. அதாவது, ஒரு பக்கத்திலிருந்து ஒரு விதமாகவும், மற்றொரு பக்கத்திலிருந்து வேறு விதமாகவும் அந்தப் பொருளைப் பயன்படுத்துகிறது.
இந்தப் பசு தனது முதுகைத் தேய்க்க விரும்பும் போது நீண்ட தூரிகையின் ஒரு பகுதியையும், தனது வயிற்றைத் தேய்க்க விரும்பும் போது அந்தத் தூரிகையின் மென்மையான பகுதியையும் பயன்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர்.
விலங்கு உலகில் ஆங்காங்கே இதுபோன்ற விஷயங்கள் காணப்பட்டாலும், பசுக்கள் போன்ற விலங்குகள் இதுபோன்று செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை என்று வியன்னா ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Antonio J Osuna Mascaró
வியன்னா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அன்டோனியோ ஒசுனா கூறுகையில், “பசுக்கள் இது போன்ற கருவிகளைப் பயன்படுத்தும் என்றோ, அல்லது வெவ்வேறு வேலைகளுக்காக அவற்றை வெவ்வேறு விதமாகப் பயன்படுத்தும் என்றோ நாங்கள் நினைக்கவில்லை. இதுவரை, இத்தகைய செயல்கள் சிம்பன்சிகளிடம் மட்டுமே பதிவாகியுள்ளன,” என்றார்.
மனிதர்களைத் தவிர மற்ற விலங்குகளில், சிம்பன்சிகள் மட்டுமே இந்த அளவுக்கு கருவிகளைப் பயன்படுத்தியதற்கான பதிவுகள் உள்ளன.
சுமார் 10,000 ஆண்டுகளாக பசுக்கள் மனிதர்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தாலும், அவை இத்தகைய கருவிகளைப் பயன்படுத்துவது குறித்துப் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று வியன்னா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மனிதர்களைத் தவிர மற்ற விலங்குகளில், சிம்பன்சிகள் மட்டுமே இவ்வளவு விரிவான முறையில் கருவிகளைப் பயன்படுத்தியதற்கான பதிவுகள் உள்ளன.
பசுக்கள் நாம் நினைப்பதை விட புத்திசாலித்தனம் கொண்டவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
வெரோனிகா மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தால் மற்ற பசுக்களும் இது போன்ற கருவிகளைப் பயன்படுத்தக்கூடும்.
வெரோனிகாவை வளர்க்கும் விவசாயி விட்ஜர் வைசல் , “தனது பசு வெளிப்படுத்தும் இந்த அசாதாரண திறமைகள் மூலம், இயற்கையின் மதிப்பை மக்கள் அங்கீகரிக்க வேண்டும்” என்று கூறுகிறார்.