மதுரை: வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள் தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழா கருத்தரங்கு இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமை வகித்தார். பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மகா சுசீந்திரன், சசிராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பாஜக தலைவர் ஹெச்.ராஜா சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஊடகம் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் திருமாவளவன், சீமான், சித்தராமையா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. நாட்டு மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை.
உலகளவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தலைமையேற்று நடத்தும் பெரும்பாலான அமைப்புகள் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகின்றன. அமெரிக்காவில் இருப்பவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் தான். இருந்தாலும் அவர்கள் யாரும் அமெரிக்காவை தாக்கிப் பேசுவதில்லை. ஆனால் இந்தியாவில் இருப்பவர்களே தனது நாட்டுக்கு எதிராக பேசி வருகின்றனர். பாஜக மட்டும் தான் சட்டத்தை மதித்து நடக்கும் கட்சி. அரசியல் சட்டத்தை இந்திரா காந்தி சிதைத்தபோது அவருடன் இருந்தவர் ப.சிதம்பரம்.
திமுகவில் 2 விக்கெட்டுகள் விழுந்திருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பால் முதல்வர் உளறிக் கொண்டிருக்கிறார். திராவிட அரசியலே மத வெறி தான். வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள் தான். முதல்வர் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது” என்று ஹெச்.ராஜா கூறினார்.