பல தசாப்தங்களாக சர்வதேச நடத்தையை நிர்வகித்த விதிகள் தங்கள் செல்வாக்கை இழந்து வருவதாகத் தோன்றும், ஒரு வளர்ந்து வரும் உலக ஒழுங்கின் கீழ் நடந்த முதல் பெரிய மோதல்களில் ஒன்றாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல், கருதப்படலாம்.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து நீண்ட காலத்திற்கு, போரும் ராஜதந்திரமும் முறையாக சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்கள் மற்றும் பிற உடன்படிக்கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பிற்குள் செயல்பட்டன. அந்த விதிகள் வளைக்கப்பட்ட போதோ அல்லது அவர்களுக்கு விருப்பமான வகையில் புரிந்துகொள்ளப்பட்டபோதோ கூட, அரசுகள் பொதுவாக தங்கள் செயல்களை அந்த அமைப்பிற்கு உட்பட்டு நியாயப்படுத்த முயன்றன. இராணுவ நடவடிக்கைகள் பொதுவாக சட்ட ரீதியான வாதங்கள், ராஜதந்திர ஆலோசனைகள் அல்லது சர்வதேச கூட்டணிகளை உருவாக்குதல் ஆகியவற்றுடன் இணைந்தே இருந்தன.
தற்போதைய போரில், அந்த பரிசீலனைகள் மிகவும் குறைந்த அளவிலான பங்கையே வகிப்பதாகத் தெரிகிறது. உத்திரீதியான முடிவுகள் சர்வதேச சட்டக் கட்டமைப்புகள் அல்லது பலதரப்பு அங்கீகாரத்துக்கு உட்பட்டு இருப்பதை விட, பெரும்பாலும் உடனடி இராணுவ மற்றும் அரசியல் அல்லது பாதுகாப்பு கணக்கீடுகளால் இயக்கப்படுவதாகத் தெரிகிறது.
இரான் நாட்டைப் பொறுத்தவரை, இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் செயல்படுவது முற்றிலும் புதியதல்ல. பல தசாப்தங்களாக, அந்த நாடு விரிவான சர்வதேச தடைகள் மற்றும் அரசியல் தனிமைப்படுத்தலின் கீழ் வாழ்ந்து வருகிறது. காலப்போக்கில், அந்தத் தீர்மானங்களை (பலதரப்பு அல்லது ஒருதலைப்பட்சமானவை) தவிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வலைப்பின்னல்கள் மற்றும் பொருளாதார வழிமுறைகளை அது உருவாக்கியுள்ளது. உலகில் மிகவும் விரிவான தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், இரான் தொடர்ந்து எண்ணெயை ஏற்றுமதி செய்து வருவதுடன் பிராந்திய செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்த மூலோபாய கலாச்சாரத்திற்குள், மோதல் அதிகரிப்பு பெரும்பாலும் அளவிடப்பட்டே இருந்தது. கடந்தகால நெருக்கடிகளில் இரான் அளித்த பதில்கள் பொதுவாக ஒரு பரந்த பிராந்திய போரைத் தூண்டாமல், தனது எதிரிகளுக்கு மோதலுக்கான விலையை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. வெளி சக்திகள் பதற்றத்தைக் குறைக்க அழுத்தம் கொடுக்கும் வரை, எதிரிகள் மீது பொருளாதார அல்லது அரசியல் அழுத்தத்தை அதிகரிப்பதே இதன் பரந்த நோக்கமாக இருந்து வந்தது.
படக்குறிப்பு, ஜெனீவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம்.
சர்வதேச உடன்படிக்கைகள் உடனடியாகச் செயல்பாட்டு எல்லைகளாக மாற வேண்டிய அவசியமில்லாத ஒரு சூழலில் செயல்பட இஸ்ரேலும் பழகியுள்ளது. ஒரு கடுமையான அச்சுறுத்தல் உருவாவதாகத் தலைவர்கள் நம்பும்போது, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுப்பதையே இஸ்ரேலிய இராணுவக் கோட்பாடு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. முன்கூட்டியே தாக்குதல் நடத்துவது மற்றும் அதீத பலத்தைப் பயன்படுத்துவது ஆகியவை அந்த அணுகுமுறையின் மீண்டும் மீண்டும் நிகழும் கூறுகளாக இருந்துள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில், காஸா போர் போன்ற மோதல்களில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச சட்ட மன்றங்களில் ஆய்வுகளை எதிர்கொண்டுள்ளன. அதே நேரத்தில், குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து வலுவான உத்தி ரீதியான ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், தனது பாதுகாப்பு முன்னுரிமைகள் தீர்க்கமான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து கணக்கிட்டு வருகிறது.
இந்த அமைப்பிற்குள் அமெரிக்கா ஒரு வித்தியாசமான நிலையில் உள்ளது. வாஷிங்டன் 1945-க்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கில் மற்றொரு பங்கேற்பாளர் மட்டுமல்ல – அதை வடிவமைப்பதிலும் நிலைநிறுத்துவதிலும் அது ஒரு முக்கியப் பங்கை வகித்தது. போருக்குப் பிறகு உருவான கூட்டணிகள், நிறுவனங்கள் மற்றும் சட்ட விதிமுறைகளின் வலைப்பின்னல் பெரும்பாலும் உலகளவில் அமெரிக்க செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது.
சமீபத்திய தசாப்தங்களில் அமெரிக்கா அந்த அமைப்பைத் வெளிப்படையாக தவிர்ப்பதற்கு மிக நெருக்கமாக வந்தது 2003-ஆம் ஆண்டு இராக் படையெடுப்பின் போதுதான். அப்போதும் கூட, வாஷிங்டன் அந்தத் தலையீட்டை ஒரு பரந்த கூட்டணி முயற்சியின் ஒரு பகுதியாகக் காட்ட முயன்றது. “விருப்பமுள்ளவர்களின் கூட்டணி” என்று அழைக்கப்பட்ட இதில், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் போலந்து போன்ற கூட்டாளிகளுடன் பல்வேறு அளவிலான ஆதரவை வழங்கிய டஜன் கணக்கான பிற அரசுகளும் இடம்பெற்றிருந்தன. போருக்கான சட்டபூர்வமான நியாயம் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், அமெரிக்கா இன்னும் அந்த நடவடிக்கையைப் பலதரப்பு சூழலில் நிலைநிறுத்த முயன்றது.
படக்குறிப்பு, இரானின் கார்க் தீவில் உள்ள ஒரு விமான நிலையம், எண்ணெய் முனையம் மற்றும் மேற்கு மற்றும் கிழக்குத் துறைமுக மேடைகளை காட்டும் ஒரு பிபிசி இருப்பிட வரைபடம் மற்றும் ஒரு செயற்கைக்கோள் படம்.
இருப்பினும், தற்போதைய மோதலில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் சர்வதேச சட்டபூர்வமான தன்மைக்கான முக்கியத்துவம் குறைவாகவே காணப்படுகிறது. உயர்மட்ட அதிகாரிகளின் அறிக்கைகள் வேறுபட்ட தொனியைப் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, மார்ச் 14 சனிக்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தொடர்ச்சியான தாக்குதல்கள் இரான் நாட்டின் கார்க் தீவின் பெரும்பகுதியை “முற்றிலும் தரைமட்டமாக்கியுள்ளன” என்று கூறினார், மேலும் என்பிசி நியூஸிடம்: “நாங்கள் அதை இன்னும் சில முறை வெறும் வேடிக்கைக்காக தாக்கலாம்” என்றும் தெரிவித்தார். இத்தகைய கருத்துக்கள், அமெரிக்காவின் பெரிய இராணுவ நடவடிக்கைகளுடன் பாரம்பரியமாகத் தொடரும் ராஜதந்திர ரீதியான கட்டமைப்பை விட நேரடியான அணுகுமுறையை விளக்குகின்றன.
இந்த புதிய அணுகுமுறையில், பொருளாதாரக் கருவிகளும் கொள்கையின் கருவிகளாக மிகவும் ஆக்ரோஷமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரிகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் பெருகிய முறையில் எதிரிகளுக்கு மட்டுமல்லாமல், நீண்டகால கூட்டாளிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. பிரிட்டன் மற்றும் இதர நேட்டோ கூட்டாளிகள் உள்ளிட்ட ஐரோப்பிய அரசுகள், பாதுகாப்புச் செலவினங்கள் மற்றும் புலம்பெயர்வு கொள்கை முதல் வர்த்தக நடைமுறைகள் மற்றும் ரஷ்யாவுடனான உறவுகள் வரையிலான பிரச்னைகளில் வாஷிங்டனிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.
இத்தகைய கொள்கைகள் குறுகிய காலத்தில் பயனுள்ளதாகத் தோன்றலாம், குறிப்பாக மற்ற நாடுகள் நிறுவப்பட்ட சர்வதேச விதிமுறைகளுக்குள் தொடர்ந்து செயல்பட்டால். இருப்பினும் நீண்ட கால விளைவுகள் தெளிவாக இல்லை. விதிகளின் அடிப்படையில் அமைந்த அமைப்பின் முதன்மை வடிவமைப்பாளரே அந்த விதிகளுக்குக் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினால், மற்ற அரசுகளும் அவற்றால் கட்டுப்படுத்தப்படுவதை குறைவாகவே உணரக்கூடும்.
கடந்தகால மோதல்களில் இரான் நடந்துகொண்ட விதம், இத்தகைய எல்லைகள் ஒரு காலத்தில் அதன் தலைமையால் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பதை விளக்குகிறது. 2025 கோடையில் நடந்த 12 நாள் போர் உள்ளிட்ட முந்தைய நெருக்கடிகளின் போது, தெஹ்ரான் இராணுவ ரீதியாகப் பதிலளித்தபோதும் பெரும்பாலும் தனது சொந்த உத்தி ரீதியான சிவப்புக் கோடுகளைக் கடைப்பிடித்தது. அந்த மோதலே வழக்கமான சர்வதேச சட்டக் கட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றதாக இருந்தபோதிலும், இரான் நாட்டின் பதிலடி அளவிடப்பட்டதாகவே இருந்தது.
கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் உதித் (Al Udeid) விமான தளத்தின் மீது இரான் ஏவுகணைகளை ஏவியபோது, அந்தத் தாக்குதலுக்கு முன்னதாக கத்தார் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு முறைசாரா எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதாகத் தெரிந்தது.
இதேபோன்ற சமிக்கைகள் முன்னதாக இராக்கில் நடந்த இரானியத் தாக்குதல்களின் போதும் கவனிக்கப்பட்டன. கணிசமான சேதத்தைச் சந்தித்த பிறகும், தெஹ்ரானின் பதிலடி ஒரு பரந்த மோதலைத் தவிர்க்கும் வகையில் கவனமாக அளவிடப்பட்டிருந்தது.
இருப்பினும், தற்போதைய மோதலில் அந்த கட்டுப்பாடுகள் பலவீனமடைந்துள்ளதாகத் தெரிகிறது. முதல் அலைத் தாக்குதல்களில் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரான் அரேபிய தீபகற்பம் முழுவதும் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது தாக்குதல்களைத் தொடங்கியது, இராணுவத் தளங்கள் மற்றும் சிவிலியன் இலக்குகள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்தது. அதே நேரத்தில், இரானிய நடவடிக்கைகள் உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றான ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் போக்குவரத்தை சீர்குலைத்தன.
இதன் விளைவுகள் உடனடியாகத் தெரிந்தன. எரிசக்தி சந்தைகள் கடுமையாக எதிர்வினையாற்றின மற்றும் குறுகிய நீர்வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்து சீர்குலைந்தது உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் முழுவதும் அதிர்வுகளை உருவாக்கியது. சர்வதேச வணிகங்கள் மற்றும் அரசுகளுக்கு ஒரு பிராந்திய மோதலானது, மோதல் அதிகரிப்பு மீதான நீண்டகாலக் கட்டுப்பாடுகள் அரிக்கப்படத் தொடங்கும்போது எவ்வளவு விரைவாக உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளை உருவாக்க முடியும் என்பதை இந்த நிகழ்வு கோடிட்டுக் காட்டியது.
மற்ற பெரிய வல்லரசுகள் இந்த முன்னேற்றங்களிலிருந்து தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. ரஷ்யா அதிக எரிசக்தி விலையால் பயனடையக்கூடும், அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பையும் மீறி மாஸ்கோ மீதான தடைகளின் அழுத்தம் குறைகிறது. இதற்கிடையில், சர்வதேச விதிமுறைகள் எவ்வளவு தூரம் மாறக்கூடும் மற்றும் எந்த திசைகளில் மாறக்கூடும் என்பதை சீனா ஒருவேளை உன்னிப்பாகக் கவனிக்கும்.
நிகழ்வுகளின் போக்கில் ஐரோப்பா தற்போது குறைந்த செல்வாக்கையே கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ராஜதந்திர முயற்சிகள் இருந்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகியவை பெரும்பாலும் முன்னேற்றங்களை வடிவமைப்பதை விட கவனிப்பவர்களாகவே தங்களை காண்கின்றன.
எனவே மத்திய கிழக்கில் நடக்கும் போரால் எழுப்பப்படும் பரந்த கேள்வி ஓர் ஒற்றை மோதலின் முடிவைத் தாண்டியது. இது 1945 முதல் உலகளாவிய உறவுகள் மற்றும் அரசியலை வடிவமைத்த சர்வதேச அமைப்பின் நீடித்த தன்மையைப் பற்றியது. அந்த அமைப்பு ஒருபோதும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், அது அதிகாரம் செலுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பை வழங்கியது.
அந்தக் கட்டமைப்பு தொடர்ந்து பலவீனமடைந்தால், அதன் விளைவு கணிக்க முடியாத ஒரு சர்வதேச சூழலாக இருக்கலாம், அதில் நாடுகள் பகிரப்பட்ட விதிகளை குறைவாகவும், நேரடித் திறனை (raw capability) அதிகமாகவும் நம்பியிருக்கும். அத்தகைய ஒரு நிலப்பரப்பில், முதலில் அந்த அமைப்பை வடிவமைத்த நாடுகள் கூட அதன் அரிப்பு எதிர்பார்க்க முடியாத விளைவுகளைக் கொண்டிருப்பதை உணரக்கூடும்.