சென்னை: 2 மாநில மாநாடுகள் நடத்தியபின்பும் கட்சியின் கொள்கைக் கோட்பாடு என்பது அவர்களுக்கே இன்னும் புரியவில்லை என்று தவெகவினர் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வெற்றுக் கூச்சல்களுக்கும், ஆரவாரங்களுக்கும் அடையாளமாக இருந்தது. உருப்படியாக எந்த கொள்கைக் கோட்பாட்டு முழக்கங்களும் இல்லை. ஆக்கப்பூர்வமான எந்த செயல்திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. திமுக வெறுப்பு, திமுக வெறுப்பு, திமுக வெறுப்பு என்பதே அவர்கள் உமிழ்ந்த அரசியல்.
ஆட்சிக்கு வருவோம் என்ற பகல் கனவை கூச்சல்களாக முழங்கியதுதான் அங்கே நடந்தது. 2 மாநில மாநாடுகள் நடத்தியபின்பும் கட்சியின் கொள்கைக் கோட்பாடு என்பது அவர்களுக்கே இன்னும் புரியவில்லை. இத்தனை லட்சம் பேரை திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே முன்வைத்திருக்கிறார். அவருடைய பேச்சில் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் இல்லை, கருத்தியலும் இல்லை” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரை பாரப்பத்தியில் தவெக 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக சாடினார். அவர் பேசும்போது, “நாங்கள் மக்களின் இதயமாக, அவர்களது வீடுகளில் உயிராக, உறவாக,உணர்வாக இருக்கிறோம். மக்களோடு மட்டும்தான் நமக்கு கூட்டணி. நமது கொள்கை எதிரி பாஜக. அரசியல் எதிரி திமுக. மறைமுக ஆதாயத்துக்காக, யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட மாட்டோம். பெண்கள், இளைஞர்கள் சக்தி, ஒட்டுமொத்த தமிழக மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். தமிழகத்தில் 2026-ல் இரண்டு பேருக்குதான் போட்டியே. ஒன்று டிவிகே, இன்னொன்று டிஎம்கே” என்றார்.