9
மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் யூதர்கள், இஸ்ரேலுக்குக் குடிபெயர வேண்டும் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியொன் சார் அழைப்பு விடுத்துள்ளார். யூதர்களுக்கு உலகின் எந்த மூலையிலும் பாதுகாப்பாக வாழும் உரிமை இருப்பதாகக் கூறிய அவர், இருந்தாலும் பல நாடுகளில் அவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாக கவலை தெரிவித்தார்.
யூதர்களின் முக்கிய திருவிழாவான ஹனுக்காவின் இறுதி நாளன்று நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏற்றும் பொதுநிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் வாழும் யூதர்கள், இஸ்ரேலுக்குத் திரும்பி வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு உலக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களும் கலந்துகொண்டனர். இதற்கு முன்னர், மேற்கத்திய அரசாங்கங்கள் தங்களின் யூதக் குடிமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பெஞ்சமின் நெட்டன்யாஹு வலியுறுத்தியிருந்தார்.
அதேவேளை, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் ஹனுக்கா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தமை, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.