0
தமிழ்தேசிய அரசியல் மாண்பு
22 பெப்ரவரி 2002 இல், தேசிய தலைவரும் பிரதம மந்திரி ரணிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தருணம், இலங்கைத் தீவில் இரு வேறு நடைமுறை அரசுகள் செயற்பாட்டில் இருந்தன என்பதை சர்வதேசம் அங்கீகரித்தது. இந்தக் கடைசி போர் நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில், நடந்த இரண்டு இயற்கை அனர்த்தங்களின் போது புலிகள் இயக்கம் நடந்து கொண்ட விதம், தமிழ்தேசிய அரசியலின் மாண்பின் அடையாளமாக வரலாற்றில் நிலைத்து நிற்கிறது, நிற்கும்.
17 மே 2003 இல் ஏற்பட்ட கன மழையால் இலங்கையில் திடீர் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. பல நதிகள் கரைமீறி வழிந்தோட, பல கிராமங்கள் நீரில் மூழ்கின. மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. படுமோசமான வெள்ள அனர்த்தத்தில் 250 பேர் உயிரிழந்தனர்.
தனிநாடு கோரி இலங்கை அரசிற்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்திருந்த புலிகள் இயக்கம், பத்தாண்டுகளிற்கு மேலாக பொருளாதாரத் தடை அமுலில் இருந்த தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலில் விளைந்த அரிசியை, பத்து லொறிகள் நிரம்ப நிரப்பி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தது, தமிழ்தேசிய அரசியல் மாண்பின் வெளிபாடாகும்.
26 டிசம்பர் 2004 இல் இலங்கைத் தீவை சுனாமி தாக்கிய போது, இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாரிய அழிவை சந்ததித்து. 30,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட இந்த பேரவலத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பி்தேசங்கள் அப்போது புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது.
சுனாமி அடித்து ஓய்ந்த அடுத்தடுத்த நாட்களில், BBC செய்தியாளர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சென்றபோது, சுனாமி அடித்ததும் புலிகள் மேற்கொண்ட செயற்பாடுகள் பிற நாடுகளிற்கு முன்மாதிரியாகவும் மிகவும் ஒருங்கிணைந்ததாகவும் இருந்தது என்று விவரித்தனர். புலிகளின் சிவில் நிர்வாகமும் தமிழ் புனர்வாழ்வு கழகமும் உணவு, தண்ணீர் மற்றுத் தற்காலிக கூடாரங்களை வினைத்திறனுடன் விநியோகித்ததாக BBC செய்தி அறிக்கையில் சுட்டிக் காட்டியது.
சுனாமியால் அடிவாங்கி பாதைகள் மூடப்பட்டிருந்த பல கடலோரக் கிராமங்களிற்கு, சர்வதேச தொண்டர் அமைப்புகள் செல்ல வழி ஏற்படுத்தும் வகையில், புலிகள் அமைப்பினர் துரிதமாக பாதைகளை செப்பனிட்டு இருந்ததையும் BBC அவதானித்தது . சுனாமி அலைகள் தாக்கிய சில நிமிடங்களிலேயே புலிகள் எடுத்த துரித நடவடிக்கைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது என்று அப்பகுதி மக்கள் BBC இற்கு தெரிவித்தனர்.
வடக்கு கிழக்கில் இருந்து செய்தி அளித்த Reuters நிருபர்கள், இடிபாடுகளை அகற்றவும் இடிந்த கட்டிடங்களில் சிக்கியவர்களை தேடவும், ட்ராக்டர்கள், லொறிகள் மற்றும் மனிதவளத்தை பயன்படுத்தி, புலிகளின் மீட்பு அணிகள் இடைவிடாமல் பணியாற்றினதாக குறிப்பிட்டனர். புலிகளின் மருத்துவப் பிரிவினர் அனர்த்தம் நிகழ்ந்து சில மணி நேரங்களுக்குள்ளாகவே தற்காலிக சிகிச்சை முகாம்களை அமைத்து, முதலுதவி, குடிநீர் மற்றும் அவசர உணவுப் பொருட்களை வழங்கியதையும் Reuters குறிப்பெடுத்துக் கொண்டது.
செப்டெம்பர் 2002 இல் இலங்கை அரசிற்கும் புலிகளிற்கும் இடையில் தொடங்கிய பேச்சுவார்த்தைகளின் தொடக்கப் புள்ளியாக இருந்த இடைக்கால நிர்வாக அலகு (SIHRN), இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற காரணத்தால் பிசுபிசுபித்து போன பட்டறிவு இருந்தும், வரலாறு காணாத சுனாமி பேரனர்த்தத்தில் இருந்து மீள மீண்டும் ஒரு இடைக்கால நிர்வாக அலகிற்கு (P-TOMS) இணங்கியதும் புலிகள் வெளிப்படுத்திய தமிழ்தேசிய அரசியலின் மாண்பாகும்.
அரசு கட்டுப்பாட்டில் இல்லாத, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த, பகுதிகளிற்கும் சுனாமி நிவாரணம் சென்றடைய வேண்டும் என்பதை சர்வதேச நன்கொடையாளர் நாடுகள் வலியுறுத்திய காரணத்தால், Post Tsunami Operational Management Structure என்ற கூட்டு நிர்வாக அமைப்பு அவசியமானது.
P-TOMS மூன்று நிலைகளைக் கொண்ட கட்டமைப்பாக அமைந்திருந்தது :
1. அரசு, புலிகள், மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைந்த உயர்மட்ட குழு
2. வடக்கு கிழக்கில் செயற்படும் பிராந்திய குழு
3. மாவட்ட மட்டத்தில் திட்டங்களை செயற்படுத்தும் குழுக்கள்
இந்த அமைப்பின் பிரதான நோக்கங்கள்; நிவாரண உதவிகள் சமமாகவும் வெளிப்படையாகவும் பகிரப்பட்டதை உறுதிப்படுத்துவதும் போர்நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த அரசிற்கும் புலிகளிற்கும் இடையில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதாகும்.
ஆனால், இந்த உடன்பாடு இலங்கையின் சிங்கள தேசியவாதக் கட்சிகள் மற்றும் JVP கட்சியின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. அவர்கள் P-TOMS என்ற வெறும் நிர்வாக கட்டமைப்பை, அந்த பேரவல நேரத்திலும், புலிகளிற்கு அரசியல் மற்றும் நிர்வாக அங்கீகாரம் வழங்கும் முயற்சியாகவே கருதினர்.
ஜூலை 2005 இல், இலங்கை உச்சநீதிமன்றம் உடன்பாட்டின் முக்கிய அம்சங்களை இடைநிறுத்தியதால், P-TOMS முறையாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டு, P-TOMS அமைப்பு முழுமையான செயல்பாட்டை எட்டாமலேயே சில மாதங்களிலேயே முற்றிலும் சிதைந்து போனது.
அரசியலில் மாண்பு என்பது மிகவும் முக்கியமானது; குறிப்பாக விடுதலை வேண்டி போராடும் இனங்களிற்கு தலைமைத்துவம் வழங்கும் அமைப்புக்களின் செயற்பாடுகள் அரசியல் மாண்பை பேணுவது மிகவும் அவசியமாகும். ஆயிரம் தான் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் எதிரிக்கு இயற்கை அவலத்தை அளிக்கும் போது நாங்கள் எங்கள் அரசியல் மாண்பை பேணுவது அறமாகும்.
போர் நிறுத்த காலத்தில் இரத்தினபுரிக்கு நீட்டிய உதவிக்கரத்திலும் P-TOMS உடன்பாட்டை கையெழுத்திட்டதன் மூலமும், புலிகள் தமிழ் தேசிய அரசியலின் மாண்பை பேணினார்கள் என்ற வரலாறு வருங் காலங்களிற்கும் சந்ததிகளிற்கும் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.
ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்