இலங்கையில் நவம்பர் 16 முதல் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு பேரிடர்களின் காரணமாக, இன்று (30) பிற்பகல் 12 மணி நிலவரப்படி 193 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது.
மேலும், 228 பேர் காணாமல் போயுள்ளனர் என்று புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அடிப்படையில்:
கண்டி மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்து, 105 பேர் காணாமல் போயுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் 71 பேர் உயிரிழந்து, 53 பேர் காணாமல் உள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் 20 பேரும்,
கேகாலை மாவட்டத்தில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த இரு மாவட்டங்களில் முறையே 10 பேரும், 24 பேரும் காணாமல் போயுள்ளனர்.
இந்த பேரிடரின் தாக்கம் மிகப் பரவலானது. நாடு முழுவதும் 266,114 குடும்பங்களைச் சேர்ந்த 968,304 பேர் (9.6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்) பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களில், 41,005 குடும்பங்களைச் சேர்ந்த 147,931 பேர், பாதுகாப்பு காரணங்களுக்காக 1,094 பாதுகாப்பு மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் தொடர்ந்து மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், பாதிப்புகள் தொடர்பான தகவல்களை புதுப்பித்து வருகிறது.

The post வெள்ளம், மண்சரிவு: இலங்கையில் இதுவரை 193 பேர் உயிரிழப்பு – 9.6 இலட்சம் மக்கள் பாதிப்பு! appeared first on Vanakkam London.