வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வெள்ளியின் விலை உயர்வதற்கான காரணம், இதன் பின்னால் உள்ள வரலாறு, வெள்ளியின் விலை குறையுமா, முதலீட்டு நோக்கில் வெள்ளியை வாங்கலாமா என்பதெல்லாம் குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் பேட்டியிலிருந்து:
கடந்த சில நாட்களில் வெள்ளியின் விலை இந்த அளவுக்கு உயர்வதற்கு என்ன காரணம்? தங்கத்தின் விலை உயர்வோடு தொடர்புடையதா?
தங்கத்தின் விலை உயர்வோடு தொடர்புபடுத்துவது தவறு. தங்கத்திற்கு தொழிற்சாலை சார்ந்த பயன்கள் கிடையாது. ஆனால், வெள்ளிக்கு தொழிற்சாலை சார்ந்த பயன்கள் உண்டு. குறிப்பாக மின்சார வாகனங்கள், சூரிய சக்தி தகடுகள் போன்ற வளர்ந்துவரும் தொழில்துறைகளில் வெள்ளி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் என்பது ஒரு செலாவணி. பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை இருப்பாக வைத்திருப்பார்கள். ஆனால், எந்த மத்திய வங்கியும் வெள்ளியை அதுபோல செலாவணியாகக் கருதி வாங்கி வைக்க மாட்டார்கள்.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியிலும் அதற்கு முன்பும் வெள்ளி செலாவணியாகப் பயன்பட்டது. அமெரிக்காவில் இரட்டை முறை இருந்தது. தங்கத்தின் மதிப்பு டாலரோடு இணைந்திருக்கும். வெள்ளியின் மதிப்பும் தங்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். நிலைமை இப்படியிருக்கும்போது 1890களிலும் 1900களின் துவக்கத்திலும் வெள்ளியின் மதிப்பு மிக வேகமாக அதிகரித்தது.
மக்கள் வெள்ளிக் காசுகளை உருக்கி உலோகமாக மாற்ற ஆரம்பித்தார்கள். இதையடுத்து, வெள்ளிக்கும் பணத்திற்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு, வெள்ளி கைவிடப்பட்டு அமெரிக்க டாலரின் மதிப்பு தங்கத்தோடு மட்டும் இணைந்திருக்கும் வகையில் மாற்றப்பட்டது. அதாவது ஒரு அவுன்ஸ் (31.1035 கிராம்) தங்கம் 36 டாலர் என விலை நிர்ணயிக்கப்பட்டது.
படக்குறிப்பு, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்
டாலரின் மதிப்பை வைத்து மற்ற அனைத்து நாடுகளின் செலாவணியும் மதிப்பிடப்பட்டது. இதற்குப் பிறகு 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் தங்கத்திற்கும் டாலருக்கும் இடையிலான மதிப்பைத் துண்டித்தார். இதையடுத்து தங்கத்தின் விலை உயர ஆரம்பித்தது. 1971ல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 36 டாலராக இருந்தது, 1980க்குள் 800 டாலர்களாக உயர்ந்தது.
1979ல் ஹண்ட் சகோதரர்கள் என அழைக்கப்பட்டவர்கள் வெள்ளியை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை ஆறு டாலராக இருந்தது. இவர்கள் வாங்க ஆரம்பித்ததும் விலை 50 டாலர்களாக உயர்ந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் வாங்கிக் குவித்ததை அவர்கள் விற்க ஆரம்பித்தார்கள். இதனால், அதன் விலை குறைந்து 4.5 டாலராக விழுந்தது. அதாவது 90 சதவீத மதிப்பை இழந்தது. இதற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 51 டாலர் என்ற விலையை அடைந்திருக்கிறது.
வெள்ளியின் விலையைப் பொருத்தவரை கடந்த 20 நாட்களாக வெகுவாக உயர்ந்து வருகிறது. கடந்த பத்து நாட்களில் ஒரு கிராமிற்கு 40 ரூபாய்க்கு மேல் அதிகரித்திருக்கிறது. இதற்கு இந்திய அரசு மேற்கொண்ட ஒரு நடவடிக்கைதான் காரணம். செப்டம்பர் மாத இறுதிவாக்கில் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்குநர் ஜெனரல் ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, அரசின் அனுமதியைப் பெற்றுத்தான் வெள்ளியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது.
வெள்ளி பொதுவாக லண்டனில் இருந்து மும்பைக்கு இறக்குமதி ஆகும். இதற்கு 6 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரியைத் தவிர்ப்பதற்காக வர்த்தகர்கள் வெள்ளியை தாய்லாந்து வழியாகக் கொண்டுவர ஆரம்பித்தார்கள். தாய்லாந்து ஏசியான் ஒப்பந்தத்தின் கீழ் வருவதால் அங்கிருந்து இறக்குமதி செய்தால் வரி கிடையாது. ஒரு கட்டத்தில் மாதத்திற்கு நாற்பது மெட்ரிக் டன் அங்கிருந்து இறக்குமதியாக ஆரம்பித்தது. இதனால் இந்தக் கட்டுப்பாடு செப்டம்பர் மாத இறுதியில் விதிக்கப்பட்டது.
இந்தக் காலகட்டத்தை ஒட்டித்தான் நவராத்திரி வந்தது. தற்போது தீபாவளி வரவிருக்கிறது. இது வட இந்தியாவில் வெள்ளி அதிகமாக வாங்கும் காலகட்டம். இந்த காலகட்டத்தில் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவுடன், வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுமட்டுமல்லாமல், ஒரு ஆண்டிற்கு முன்பாக, இந்திய ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, கோட்டக் ஆகியவை வெள்ளியை அடிப்படையாக வைத்து இடிஎஃப் (Exchange-Traded Fund) வெளியிட்டார்கள்.
இதே காலகட்டத்தில் தங்கத்தின் விலையும் உயரவும், பலரும் இனி யாரும் தங்கத்தை வாங்க முடியாது. இனி வெள்ளியைத்தான் வாங்க முடியும், வெள்ளி நகைகளைத்தான் அணிய முடியும் என விளம்பரங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். எப்போதுமே ஒரு பொருள் தட்டுப்பாட்டில் இருக்கும்போது அதன் விலை அதிகரிக்க ஆரம்பிக்கும். அப்படித்தான் வெள்ளியின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. லண்டனில் இருந்த வெள்ளி அனைத்தும் இந்தியாவால் வாங்கப்பட்டது.
பொதுவாக வெள்ளியின் அளவு தங்கத்தைவிட பெரிதாக இருக்கும் என்பதால், விமானத்தில் கொண்டுவர மாட்டார்கள். கப்பலில்தான் வரும். ஆனால், தட்டுப்பாடு ஏற்பட்டதால் விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டது. கப்பல் மூலம் கொண்டுவரப்படுவதைவிட விமானம் மூலம் கொண்டுவர பத்து மடங்கு அதிக செலவாகும். அதனாலும் விலை ஏறியது.
பட மூலாதாரம், Getty Images
வெள்ளி சுரங்கத்திலிருந்து நேரடியாக தோண்டியெடுக்கப்படுவது கிடையாது. பெரும்பாலும் தாமிரத்தின் துணைப் பொருளாக கிடைக்கக்கூடிய உலோகம். இந்தியாவில் இந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம்தான் அதிக வெள்ளியை உற்பத்தி செய்கிறது. ஆனாலும் அது இந்தியாவின் தேவையில் 20 சதவீதம்தான். 80 சதவீதம் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. இந்தக் காரணங்களால்தான் வெள்ளியின் விலை அதீதமாக உயர்ந்தது.
உலகில் வெள்ளியை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு மெக்ஸிகோ. மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்கா, அங்கிருந்து லண்டன், அங்கிருந்து இந்தியா என்றுதான் இறக்குமதியாகிக் கொண்டிருந்தது. கடந்த ஏழு மாதங்களில் டாலரின் மதிப்பு எல்லா நாடுகளின் செலாவணிக்கு எதிராகவும் தொடர்ந்து மதிப்புக் குறைந்து வந்தது. அதே நேரத்தில் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் விழ்ந்துவந்தது. இந்த மதிப்பிழப்பினாலும் வெள்ளியின் விலை அதிகரித்தது. இப்படிப் பல காரணங்களால் வெள்ளியில் விலை வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்தது.
மும்பையின் ஜவேரி பஸார்தான் இந்தியாவின் மிகப் பெரிய நகைச் சந்தை. இங்கே வெள்ளியை விற்பதற்கும் வாங்குவதற்கும் இடையிலான வித்தியாசம் கிலோவுக்கு ஆயிரம் – இரண்டாயிரமாக இருக்கும். ஆனால், சில நாட்களுக்கு முன்பாக இந்த வித்தியாசம் 20 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது. காரணம், வெள்ளியின் விலை கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கலாம் என்ற அச்சம்தான் காரணம். வழக்கமாக வெள்ளியை வைத்து வர்த்தகம் செய்பவர்கள்கூட விற்க மறுத்தனர். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் வெள்ளியின் விலை அதிகரித்துவந்ததால், யாரும் விற்க விரும்பவில்லை. அதே நேரம், எல்லோருமே வெள்ளியை வாங்க விரும்புகிறார்கள். இதுதான் தட்டுப்பாட்டிற்கும் விலை உயர்விற்கும் காரணம்.
லண்டன் சந்தையிலிருந்து வெள்ளியை வாங்க முடியாதா?
லண்டன் சந்தையில் கையிருப்பில் இருந்த வெள்ளி கிட்டத்தட்ட முழுமையாக வாங்கப்பட்டுவிட்டது. இப்போது சந்தை திறந்துவிடப்பட்டால் கிட்டத்தட்ட 3,000 டன் வெள்ளி உள்ளே வரும். ஆனால், இப்போதைய சூழலில் எக்ஸ்சேஞ்சால் தேவைப்படும் வெள்ளியை கொடுக்க முடியாமல், திவாலாகலாம். அப்போது வெள்ளி ஏலத்திற்கு வரும்.
எக்ஸ்சேஞ்சால் வெள்ளியைக் கொடுக்க முடியாமல் போவது என்றால் என்ன?
அதாவது, உலோகச் சந்தைகளில் உலோகங்களை வாங்கி – விற்று வர்த்தகம் செய்பவர்கள் அந்த உலோகத்தை உண்மையில் வாங்க மாட்டார்கள். அதில் ஏற்படும் லாப – நஷ்டத்தை மட்டுமே எதிர்கொள்வார்கள். அதாவது எழுபதாயிரம் ரூபாய்க்கு வாங்கிய உலோகம், ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு உயர்ந்தால் வர்த்தகத்தின் முடிவில் 30 ஆயிரம் ரூபாயை லாபமாக மட்டும் பெற்றுக்கொள்வார்கள். ஆனால், இப்போது வெள்ளியின் விலை உயர்ந்து வருவதால் நிறையப் பேர் அதனை கட்டியாக வாங்க விரும்புகிறார்கள்.
ஆனால், அந்த அளவுக்கு வெள்ளி சந்தையில் இல்லை. வெளியில் வாங்கிக் கொடுத்தால், ஒரு லட்ச ரூபாயைவிட அதிகமாக இருக்கும். இப்படி வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறையப் பேர் வெள்ளியை வாங்க விரும்பினால், அதனை டெலிவரி செய்ய முடியாது. ஆகவே எக்ஸ்சேஞ்சுகளால் இதனை எதிர்கொள்ள முடியாமல் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். இதற்கிடையில், இந்தியாவில் உள்ள வெள்ளி இடிஎஃப்கள், எங்களிடம் பெருந்தொகைக்கு இடிஎஃப் வாங்காதீர்கள் என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
குறைந்த தொகைக்கு வெள்ளி இடிஎஃப்களை வாங்க முடியுமா?
சிலர் பெரிய தொகையை இடிஎஃப்பில் முதலீடு செய்யாதீர்கள் என்கிறார்கள். சிலர், குறைந்த தொகையைக்கூட பெற விரும்பவில்லை. இடிஎஃப் என்றால், நீங்கள் அதில் பணம் செலுத்தினால், நீங்கள் செலுத்திய தொகைக்கு அவர்கள் வெள்ளியை வாங்கி வைப்பார்கள். ஆனால் அப்படி வாங்கி வைக்க சந்தையில் வெள்ளி இல்லை. அதேபோல, நேரடியாக பணம் கட்டி வெள்ளிக் கட்டிகளையும் பெற முடியவில்லை. இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை இரண்டு லட்சத்து ஏழாயிரம் என்றால், அந்தப் பணத்தை நீங்கள் கட்டினாலும் வெள்ளி உடனே கிடைக்காது. பத்து – பதினைந்து நாட்கள் ஆகும். ஆனால், அதற்குள் வெள்ளியின் விலை உயர்ந்திருக்கும். இது சிக்கலை ஏற்படுத்துகிறது.
தற்போது தங்கத்தின் விலை உயர்வதால் வெள்ளியின் விலை உயர்கிறது என்றும் தங்கத்தின் விலையும் வெள்ளியின் விலையும் ஏதோ ஒரு விகிதத்தில் தொடர்புடையவை என்றும் சொல்லப்படுகிறது. அது சரியா?
அப்படி ஏதும் கிடையாது. மேலே சொன்ன பல்வேறு காரணங்களால்தான் விலை உயர்கிறது.
உலகச் சந்தையில் வெள்ளியின் நிலவரம் என்ன?
உலகச் சந்தையிலும் தட்டுப்பாடாகத்தான் இருக்கிறது. வெள்ளியின் விலை வெகுவேகமாக உயர்ந்து வருகிறது. அந்த அளவுக்கு அதனை உற்பத்தி செய்யவும் முடியாது. ஒரு நாடு திடீரென 2,000 டன், 3,000 டன் வாங்குகிறது. இது தவிர தொழில்துறை பயன்பாடும் இருக்கிறது. இம்மாதிரி சூழலில் பதுக்கலும் நடக்கும்.
தங்கத்தின் விலை எங்கோ சென்றுவிட்ட நிலையில், வெள்ளியை ஒரு முதலீட்டு வாய்ப்பாக பார்க்க முடியுமா?
இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்தைச் சொல்கிறேன். வெள்ளியின் விலை என்பது அதீதமான ஏற்றத் தாழ்வுகளுக்கு உட்பட்டது. மூன்று – நான்கு தடவைகள் 40 சதவீதம் அளவுக்கு விலை வீழ்ந்திருக்கிறது. இந்த முறையும் அதுபோல நடப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மீண்டும் சொல்கிறேன், வெள்ளி ஒரு செலாவணி அல்ல. வெள்ளியை எந்த மத்திய வங்கியும் வாங்கவில்லை. என்றைக்கு மத்திய வங்கிகள் வாங்க ஆரம்பிக்கின்றனவோ அப்போது அதனை ஒரு முதலீட்டு வாய்ப்பாக கருதலாம்.
தங்கம் டாலருக்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், வெள்ளியை யாரும் அப்படிப் பார்க்கவில்லை. மக்கள் தங்கத்திற்குப் பதிலாக வெள்ளியைப் பார்க்கிறார்கள் என்பதால் அது அப்படி மாறிவிடாது. யார் நாணயத்தை அச்சடிக்கிறார்களோ அவர்கள் எப்போது பணத்திற்கு மாற்றாக வெள்ளியைப் பார்க்கிறார்களோ, அப்போதுதான் இந்த நிலை மாறும்.
பட மூலாதாரம், Getty Images
தங்கம் விலை குறையும் போது வெள்ளியின் விலை குறையுமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கிறது?
தங்கத்தின் விலை பத்து சதவீதம் குறைந்தால் வெள்ளியின் விலை 25 சதவீதம் குறையும்.
பொது மக்களைப் பொறுத்தவரை, புழக்கத்திற்கான பாத்திரங்கள், அணிகலன்கள் தவிர வேறு விதத்தில் இப்போது வெள்ளியில் முதலீடு செய்யலாமா?
இந்தத் தருணத்தில் என்னவிதமான அறிவுரையைச் சொன்னாலும் அது தவறாகலாம். என்னைப் பொறுத்தவரை அது ஒரு முதலீடு அல்ல. தாமிரத்திலோ, வேறு உலோகத்திலோ முதலீடு செய்தால் காலப்போக்கில் என்ன நடக்குமோ அதுவே வெள்ளிக்கும் நடக்கும். ஒரு பஞ்சலோக சிலையை இப்போது வாங்கி, சில ஆண்டுகள் கழித்து விற்றால் நிச்சயமாக விலை உயர்ந்திருக்கும். அதுபோலவே வெள்ளிக்கும் நடக்கும்.
வெள்ளியைப் பொறுத்தவரை சாதாரணமான விலை உயர்வு எவ்வளவு இருக்கலாம்?
மற்ற எல்லாப் பொருட்களும் விலை உயர்வதைப் போல 3 -4 சதவீதம் உயரலாம். அதுதான் வழக்கமான விலை உயர்வு. இப்போது விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடே இந்த விலை உயர்வுக்கு காரணம்.
இந்தியா வெள்ளி இறக்குமதிக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடு நீக்கப்பட்டால் விலை குறையுமா?
நிச்சயம் குறையும். யார் வேண்டுமானாலும் வெள்ளியைக் கொண்டுவரலாம் எனச் சொன்னால் விலை ஒரு உச்சத்தை எட்டி, கீழே விழும்.
காணொளிக் குறிப்பு, வெள்ளியின் விலை உயர்வதற்கான காரணம் என்ன? பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் விளக்கம்