தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அண்மைக் காலமாக புதுப்புது உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று(14-10-2025) காலை ஒரு கிராம் வெள்ளியின் விலை 9 ரூபாய் உயர்ந்து 206 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,06,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 20 நாட்களில் ஒரு கிலோ வெள்ளியின் விலை சுமார் ரூ.62 ஆயிரம் அதிகரித்துள்ளது.
வரும் நாட்களிலும் வெள்ளியின் விலை அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். தொழில்துறை தேவை, விழாக்காலம், சர்வதேச சந்தை நிலவரம் என பல காரணங்கள் வெள்ளி விலை உயர்வுக்கு முன்வைக்கப்படுகின்றன.
வெள்ளியில் பலரும் முதலீடு செய்வதால் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வெள்ளிக்கட்டிகள் முற்றிலும் தீர்ந்துவிட்டதாகவும் தற்போதைய சூழலில் வெள்ளிக் கட்டிகளை முன்பதிவு செய்தே வாங்க முடிவதாகவும் நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
வெள்ளி கட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதா?
தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், “நிச்சயமாக வெள்ளியின் தேவை முன்பைவிட இப்போது அதிகரித்துள்ளது. இந்தளவுக்கு முன்பு தேவை இருந்ததில்லை. முன்பு பணம் செலுத்தியதுமே வெள்ளி கட்டிகள் கிடைத்துவிடும்.
இப்போது முன்பதிவு செய்துவிட்டு 10 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. முன்பதிவு செய்தபோது என்ன விலை இருந்ததோ, அதே விலைக்கு வெள்ளிக் கட்டியை வாங்க முடியும். இப்போதுதான் வெள்ளிக் கட்டிகளுக்கு இப்படி அதிக அளவில் தேவை எழுந்துள்ளது.” என தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
வெள்ளிக்கான தேவை அதிகரிக்க என்ன காரணம்?
“தொழில்துறையில் வெள்ளி அதிகமாக தேவைப்படுகிறது. பேட்டரி, சோலார் பேனல்கள், ஏரோநாட்டிக்கல் பொறியியல் என பல்வேறு துறைகளில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், வெள்ளியில் முதலீடு செய்பவர்களும் அதிகரித்திருக்கின்றனர். அதனால் அதன் தேவை உயர்ந்துள்ளது” என்றார் ஜெயந்திலால் சலானி.
சமீபத்தில் வெள்ளி நகைகள் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. FTA எனப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிய வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி கொள்கை உடனடியாக அமலுக்கு வரும் வகையில், வெள்ளி இறக்குமதி இலவசம் என்பதில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த இறக்குமதி கட்டுப்பாட்டால் வெள்ளிக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளதாக, ஜெயந்திலால் சலானி கூறுகிறார்.
‘வெள்ளி நகைகள் இறக்குமதி இல்லாததால், இப்போது எழுந்துள்ள தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.” என்கிறார்.
தவிர, இது விழா காலம் என்பதாலும் தேவை அதிகமாக உள்ளது.
மின்னணு வாகனங்களிலும் வெள்ளி பயன்படுத்தப்படுவதால் அதற்கான தேவை அதிகரித்துள்ளதாக, நிபுணர்கள் கூறுகின்றனர்.
மெட்ராஸ் நகைகள் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த உஸ்மான் கூறுகையில், “சர்வதேச சந்தையை பொறுத்தும் வெள்ளியின் விலை மாறுபடுகிறது. டாலர் மதிப்பில் ஏற்படும் ஏற்ற-இறக்கத்தால் வெள்ளியின் விலை அதிகரிக்கிறது.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
வெள்ளியில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் ஏன்?
“இப்போதைக்கு வெள்ளி நல்ல லாபம் தரக்கூடியதாக உள்ளது. வெள்ளி நாணயங்கள், வெள்ளி கட்டிகள், பாத்திரங்கள், நகைகள் என எந்த வடிவிலும் அதில் முதலீடு செய்யலாம்.” என்கிறார் ஜெயந்திலால் சலானி.
வெள்ளியின் விலை இன்னும் உயரவே செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர். “எனவே, இப்போது வெள்ளியை வாங்கி, அதன் விலை அதிகரிக்கும்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.” என்கிறார், உஸ்மான்.
வெள்ளி நடுத்தர மக்களுக்கு நல்ல சேமிப்பாக அமையுமா?
இந்த கேள்விக்கு பதிலளித்த முதலீட்டு ஆலோசகர் சதீஷ், “தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் சேமிக்க வேண்டும் என நினைக்கின்றனர். தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்துவருவதால், நடுத்தர மக்கள் வெள்ளியில் முதலீடு செய்கின்றனர். வெள்ளி கட்டியாகவும் வாங்கலாம். தங்கத்தை போன்று வெள்ளியை இடிஎஃப்-ஆகவும் வாங்கலாம். வெள்ளி ஒரு பாதுகாப்பான முதலீடுதான். வெள்ளியில் கழிவு இருக்காது. மிகவும் தரம் வாய்ந்ததாகவே இருக்கும்.” என்றார்.
இடிஎஃப் என்பது பங்குகள் போல பங்குச் சந்தையில் வாங்கவும் விற்கவும் கூடிய ஒரு நிதி. “முதலீட்டாளர்கள் நேரடியாக வெள்ளி வாங்கி வைத்திருப்பதற்கு பதிலாக, இந்த இடிஎஃப் யூனிட்களை வாங்கலாம். இது வெள்ளியை பொருளாக வாங்குவது, சேமிப்பது, பாதுகாப்பது போன்ற சிரமங்களைக் குறைக்கிறது.” என்கிறார் சதீஷ்.
தங்கத்தைப் பொறுத்தவரை 24 காரட், 22 காரட் என்பது அதன் தரத்தை மதிப்பிட பயன்படுத்தப்படும் அலகுகளாக உள்ளன. அதேபோன்று, வெள்ளியை பொறுத்தவரை 99.9% (three nines) என்பது தூய வெள்ளியை குறிப்பதாக உள்ளது.
இதுதவிர, 92.5% ஸ்டெர்லிங் வெள்ளி உள்ளது. இதில் சிறிதளவு தாமிரம் கலக்கப்பட்டிருக்கும். இதுவே நகைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.