பட மூலாதாரம், Getty Images
திரைப்படங்களில் நட்சத்திரங்கள் ‘வெள்ளை முடியுடன்’ தோன்றும்போது, ‘சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஸ்டைலாக உள்ளது’ என ரசிக்கும் பலர் தங்களுக்கு வெள்ளை முடி வந்தாலும் அதே ரசனையுடன் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.
வெள்ளை முடியை சிலர் ஏற்றுக்கொண்டாலும், அது முதுமையின் அடையாளம் என்ற பிம்பமும் பரவலாக உள்ளது. ஆனால், வெள்ளை முடி என்பது இளம் ஆண்கள் மட்டுமல்ல பெண்களுக்கும் வரலாம்.
வெள்ளை முடி வருவதற்கான காரணம் என்ன? அது நம் உடல்நலன் மற்றும் மனநலன் குறித்துச் சொல்வது என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
வெள்ளை முடி வருவதற்கான காரணம் என்ன?
இந்த மெலனின் (Melanin) என்பது உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் நிறத்தைத் தரும் ஒரு நிறமி. உங்கள் உடலின் மெலனின் உற்பத்தியைப் பொறுத்தே முடி, கண்கள் மற்றும் தோலின் நிறங்கள் மாறுபடும்.
“உங்கள் தலைமுடி தொடர்ந்து ஒரு சுழற்சியின் வெவ்வேறு நிலைகளைக் கடந்து செல்கிறது. உங்கள் உச்சந்தலையில் எந்த நேரத்திலும் முடி வளரலாம், அதன் நீளம் அதிகரிக்காமல் அப்படியே இருக்கலாம் அல்லது உதிர்ந்தும் போகலாம். இவை அனைத்தும் வழக்கமானவையே.” என்றும் அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி கூறுகிறது.
மேலும், “உங்கள் தலைமுடி இந்த சுழற்சியைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், மெலனின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு சுழற்சியும் பல ஆண்டுகள் நீடிக்கும். 7–15 சுழற்சிகளுக்குப் பிறகு மெலனின் உற்பத்தி நிறுத்தப்படும்போது உங்கள் தலைமுடி அதன் நிறத்தை இழக்கத் தொடங்கும்.”
‘7–15 சுழற்சிகளுக்குப் பிறகு’ என்பது நமக்கு வயதாவதைக் குறிக்கிறது. எனவே ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு உங்கள் மயிர்க்கால்கள், போதுமான நிறத்தை முடிக்கு வழங்காதபோது அது வெள்ளை முடியாகத் தோன்றுகிறது.
பட மூலாதாரம், Getty Images
“இது எந்த வயதில் தொடங்கும் என்பது மரபியல், ஊட்டச்சத்து குறைப்பாடு போன்ற சில விஷயங்களைப் பொறுத்து உள்ளது.” என்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் மித்ரா வசந்த் விக்னேஷ்.
தொடர்ந்து பேசிய அவர், “முதுமை காரணமாக வெள்ளை முடி ஏற்படுவது சாதாரணமான ஒன்று, ஆனால் இளம் வயதில் இந்தப் பிரச்னை என்றால் மரபியல் காரணிகளை ஆராய வேண்டும். ஊட்டச்சத்து குறைப்பாடு அல்லது வேறு ஏதும் உடல்நலப் பிரச்னை என்றால் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம்” என்கிறார்.
உங்கள் தலைமுடி எப்போது, எவ்வளவு நரைக்கிறது என்பது பெரும்பாலும் உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் பெறும் மரபணுக்களைச் சார்ந்து உள்ளது. உங்கள் பெற்றோருக்கு தலைமுடி சீக்கிரமாகவே நரைத்திருந்தால், உங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கட்டுரை ஒன்று கூறுகிறது.
மன அழுத்தத்திற்கும் வெள்ளை முடிக்கும் தொடர்பு உள்ளதா?
“ஆம். நரை முடி உட்பட முதுமையின் அறிகுறிகளை மன அழுத்தம் துரிதப்படுத்துகிறது” என அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி கூறுகிறது.
சென்னையைச் சேர்ந்த மிருதுளாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 26 தான். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவர், இந்த நரைமுடி பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்.
“பணிச்சுமை, போதுமான தூக்கம் இல்லாதது, உணவுப் பழக்கம், வைட்டமின் குறைபாடு, போன்றவற்றை என் தோல் மருத்துவர் சுட்டிக்காட்டினார். வெள்ளை முடி மட்டுமல்லாது, தோலிலும் சில ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டன. இப்போது மருந்துகளையும், மருத்துவரின் அறிவுறுத்திய பழக்கங்களையும் பின்பற்றி வருகிறேன். இளம் வயதில் நரை முடி வருவது எனது தன்னம்பிக்கையை வெகுவாக பாதிக்கிறது” என்கிறார் மிருதுளா.
“நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் உடல் நார்எபிநெப்ரின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது மெலனோசைட்டுகளை அல்லது மெலனின் உற்பத்தி செய்யும் செல்களை உங்கள் மயிர்க்கால்களில் இருந்து வெளியேறச் செய்கிறது. இது நரை முடிக்கு வழிவகுக்கிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“மன அழுத்தம் இருப்பவர்களுக்கு முறையற்ற உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். எனவே அதைச் சரிசெய்வதன் மூலம் புதிதாக வெள்ளை முடி வராமலும், ஏற்கனவே இருக்கும் முடிகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்” என்கிறார் தோல் மருத்துவர் மித்ரா.
வெள்ளை முடி நம் உடலின் ஆரோக்கியம் குறித்து சொல்வது என்ன?
பட மூலாதாரம், Getty Images
“பெரும்பாலும் நரை முடி என்பது வயது மூப்பின் காரணமாக ஏற்படுகிறது. இருப்பினும், இளம் வயதிலேயே நரை முடி தோன்றுவது சில நோய்களின் அறிகுறியாகவும் கூட இருக்கலாம்” என ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி கூறுகிறது.
அதன்படி, நரை முடி என்பது பின்வரும் உடல்நலப் பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
- வைட்டமின் பி12 குறைபாடு
- நியூரோஃபைப்ரோமாடோசிஸ் (Neurofibromatosis) : இந்த வகை மரபுவழி நோய்கள் நரம்புகளில் கட்டிகள் வளரவும், எலும்புகள் மற்றும் தோலின் அசாதாரண வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றன.
- டியூபரஸ் ஸ்க்லரோசிஸ்: பல உறுப்புகளில் (மூளை, இதயம், சிறுநீரகங்கள், கண்கள், நுரையீரல் மற்றும் தோல் உட்பட) தீங்கற்ற (புற்றுநோய் அல்லாத) கட்டிகளை ஏற்படுத்தும் ஒரு அசாதாரண, மரபுவழி நிலை.
- தைராய்டு பிரச்னை
- தோல் நிறமி இழத்தல் (Vitiligo)
- அலோபீசியா அரேட்டா (Alopecia areata)
வெள்ளை முடிக்கும் இதய நோய்களுக்குமான தொடர்புகள் குறித்து சில ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், இரண்டுக்கும் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்படவில்லை.
வெள்ளை முடியை கையால் எடுப்பது சரியா?
பட மூலாதாரம், Getty Images
ஒரு வெள்ளை முடியை கையால் பிடுங்கினால், அது அதிக வெள்ளை முடிகளுக்கு வழிவகுக்குமா?
“இல்லை, அவ்வாறு செய்தால் வெள்ளை முடிகள் அதிகரிக்கும் என்பதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.” என்கிறார் தோல் மருத்துவர் மித்ரா.
அதேபோல, “தேன் பட்டால் முடி வெள்ளையாகும் என்பது பொய். அதிகமாக காபி/தேநீர் குடித்தால் வெள்ளையாகும் என்பதற்கும் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை” என்றும் அவர் கூறுகிறார்.
“அதற்காக காபி/தேநீரை அதிகம் குடிக்கலாம் என்று அர்த்தம் இல்லை. அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது” என்று மித்ரா அறிவுறுத்துகிறார்.
இது தவிர, ‘புகைபிடிப்பதற்கும் முன்கூட்டியே முடி நரைப்பதற்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதாக’ சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நரை முடி வளர்ச்சியை எப்படி தாமதப்படுத்துவது?
“ஒருமுறை வெள்ளை முடி வந்துவிட்டால், அதை மீண்டும் இயற்கை நிறத்திற்கு மாற்ற முடியாது. ஏற்கனவே இருக்கும் நரை முடிகளை கருமையாக்க ‘ஹேர் டை’ நீண்டகாலத்திற்கு பயன்படுத்துவது என்பதும் முழுமையாக பாதுகாப்பானது என்று கூறிவிட முடியாது. ஒவ்வாமை போன்ற சில பக்கவிளைவுகள் உள்ளன” என்கிறார் மித்ரா.
தலைமுடிக்கான சாயம் என்பது மிகப் பெரிய வணிகமாக மாறியுள்ளது என்றும், 2030ல் தலைமுடி சாயம் தொடர்பான சர்வதேச சந்தையின் மதிப்பு 33.7 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும், தலைமுடி சாயத்திற்கான தேவை அதிகமாக உள்ளது என்றும் பிரிட்டிஷ் அசோசியேஷன் ஆஃப் டெர்மட்டாலஜிஸ்ட்ஸ் கூறுகிறது.
“மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் மேற்கொண்டு வெள்ளை முடிகள் வராமல் தடுக்கலாம் அல்லது அதைத் தாமதப்படுத்தலாம்” என்று கூறிய மித்ரா, பின்வருபவற்றைப் பரிந்துரைத்தார்.
- உடற்பயிற்சி செய்வது உள்பட ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவது.
- ஆன்டி-ஆக்சிடண்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய சீரான உணவை எடுத்துக்கொள்வது.
- தினமும் இரவு 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது.
- புகைபிடிப்பதைத் தவிர்ப்பது
- மன அழுத்தத்தை நிர்வகிக்க முயற்சி செய்வது.
“நரை முடி என்பது மோசமான விஷயம் அல்ல. அது மனித வாழ்க்கையின் ஒருபகுதி தான். ஆனால், இளம் வயதில் நரை முடி என்றால், அது ஏன் ஏற்படுகிறது என மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது” என்கிறார் தோல் மருத்துவர் மித்ரா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு