படக்குறிப்பு, இந்திய அணி நான்காவது நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது.கட்டுரை தகவல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறது இந்திய அணி. 121 ரன்களை இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி நான்காவது நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது. 9 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில் இன்னும் 58 ரன்கள் எடுத்தால், சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி முதல் தொடர் வெற்றியைப் பதிவு செய்யும்.
டெல்லியில் நடந்துவரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து 175 ரன்கள் விளாசினார். மறுபக்கம் தன்னுடைய சிறந்த ஃபார்மைத் தொடர்ந்த கேப்டன் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் எடுத்தார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆன பிறகு 12 இன்னிங்ஸ்களில் அவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இது! சிறப்பாக விளையாடிய தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்ஷனும் தன் பங்குக்கு 87 ரன்கள் எடுத்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜடேஜாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
134 ஓவர்கள் ஃபீல்டிங் செய்த களைப்புடன் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் மீண்டும் ஏமாற்றமே கொடுத்தது. குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இருவரின் ஜாலத்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 248 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ்.
அந்த அணியின் ஒரு பேட்டரால் கூட அரைசதம் கடக்க முடியவில்லை. அதிகபட்சமாக அலீக் அதனேஸ் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். சிறப்பாகப் பந்துவீசிய ஜடேஜாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸின் சிறப்பம்சம் என்றால் அது ஜான் கேம்பெல் கேட்சை சாய் சுதர்ஷன் பிடித்ததுதான். ஜடேஜா பந்தை கேம்பெல் வேகமாக ஸ்வீப் செய்ய, ஷார்ட் லெக் திசையில் நின்றிருந்த சாய் சுதர்ஷன் கழுத்தை நோக்கிப் பாய்ந்தது பந்து.
மிகவும் ஆபத்தான அந்தப் பந்து அவரது ஹெல்மெட் கிரில்லில் பட்டு இறங்க, அதை அப்படியே லாவகமாக மார்போடு அனைத்துப் பிடித்தார் சாய். அவரது வலது கை விரலில் பலமாகப் பட்டிருந்தாலும், அவர் அதை கெட்டியாகப் பிடித்திருந்தார். மிகவும் ஆபத்தான இடத்தில் நின்று அவர் பிடித்த அந்த அசாத்திய கேட்ச் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்த சாய் சுதர்சன் காயமடைந்து வெளியேறுகிறார்
இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸுக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், அதிரடியாக முடிவெடுத்து வெஸ்ட் இண்டீஸை ஃபாலோ ஆன் செய்யச்சொல்லி நிர்பந்தித்தது இந்தியா.
வெஸ்ட் இண்டீஸ் மறுபடியும் பேட்டிங் செய்ததால் முந்தைய போட்டியைப் போல் இந்தப் போட்டியும் சீக்கிரம் முடிந்துவிடும், இந்தியா இன்னொரு இன்னிங்ஸ் வெற்றி பெற்றுவிடும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது வெஸ்ட் இண்டீஸ்.
குறிப்பாக மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ஜான் கேம்பல், ஷாய் ஹோப் இருவரும் தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். அதனால் மூன்றாவது நாள் முடிவில் 173/2 என நல்ல நிலையில் இருந்தது வெஸ்ட் இண்டீஸ்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பும்ராவை தொடக்கத்திலேயே கில்லால் பயன்படுத்த முடியவில்லை.
அதே தீர்க்கமான ஆட்டத்தை அவர்கள் ஆட்டத்தின் நான்காவது நாளும் கொண்டுவந்தார்கள். கவனத்துடனும் நிதானத்துடனும் விளையாடியிருந்தாலும், இந்திய பௌலர்களின் கைகள் முழுமையாக ஓங்காமலும் பார்த்துக்கொண்டார்கள்.
நிறைய மெய்டன் ஓவர்கள் ஆடியிருந்தாலும், அடிப்பதற்கு ஏற்ற பந்துகள் கிடைத்தபோது ஒன்று, இரண்டு என எடுத்தார்கள். பௌலர்கள் தவறான பந்துகளை வீசும்போது அதை பௌண்டரிகளாக்கினார்கள். எந்தவொரு ரிஸ்க்கும் இல்லாமல் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அவர்களால் உருவாக்க முடிந்தது.
ஜடேஜா தன்னுடைய விரைவான பந்துவீச்சால் நெருக்கடி கொடுப்பார் என்பதால், அவரைப் பெரும்பாலும் சீண்டாமலேயே ஆடினார்கள். இப்படி உறுதியான திட்டம் வகுத்து, அதை சிறப்பாகவும் அரங்கேற்றியதால் அவர்களால் பெரிய இன்னிங்ஸ் ஆட முடிந்தது.
சிறப்பாக ஆடிய ஜான் கேம்பெல் 174 பந்துகளில் தன் முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இவர்தான். இவர்கள் இருவருமே சதமடித்து நங்கூரம் போல் நிலைத்து நிற்க, இந்திய பௌலர்கள் மீது நெருக்கடி திரும்பியது. குறிப்பாக கில்லின் முடிவுகள் விமர்சனம் செய்யப்பட்டன.
ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டியை அணியில் வைத்திருந்தும், கில் அவரைப் பந்துவீசவே அழைக்கவில்லை. யஷஷ்வி ஜெய்ஸ்வாலுக்குக் கூட ஒரு ஓவர் கொடுத்தார். ஆனால், நித்திஷை அவர் பயன்படுத்தவில்லை. அதை அனைத்து வல்லுநர்களுமே கேள்விக்குள்ளாக்கினார்கள்.
போக, இந்திய பௌலர்கள் தொடர்ச்சியாகப் பந்துவீசிக்கொண்டே இருந்ததால், ஃபாலோ ஆன் கொடுத்த முடிவுமே தவறோ என்ற விவாதம் தொடங்கியது. ஏனெனில் தொடர்ந்து பந்துவீசிய காரணத்தால் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை தொடக்கத்திலேயே கில்லால் பயன்படுத்த முடியவில்லை.
பும்ராவின் வேலைப்பளுவை சரியாகப் பராமரிக்கவேண்டும் என்பதால் அவருக்கு ஆரம்பத்தில் ஓவர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா முதல் முறையாகப் பந்துவீசியதே 33வது ஓவரில் தான். அதற்குள்ளாகவே கேம்பெல் – ஹோப் இணை கிட்டத்தட்ட 17 ஓவர்கள் நிலைத்து ஆடியிருந்தது.
இந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதால் ஃபாலோ ஆன் முடிவும், இப்படியொரு சூழ்நிலை இருந்தும், நித்திஷ் ரெட்டியை இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராகப் பயன்படுத்தாத முடிவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் இந்திய அணி 200.4 ஓவர்கள் பந்துவீசிய நிலையில், நித்திஷ் ஒரு பந்துகூட வீசவில்லை!
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஷாய் ஹோப்பை போல்டாக்கினார் சிராஜ்.
ஆனால் அதற்கெல்லாம் பதிலாக வந்தார் முதல் போட்டியின் ஆட்ட நாயகன் ரவீந்திர ஜடேஜா. ரிவர்ஸ் ஸ்வீப் ஆட ஆசைப்பட்டு, ஜடேஜாவின் சுழலில் சிக்கினார் கேம்பெல். 199 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் அவர். இதன்மூலம் 49 ஓவர்கள் நிலைத்த அந்த பார்ட்னர்ஷிப் 177 ரன்களில் முடிவுக்கு வந்தது.
கேம்பெல் சென்ற பின் கேப்டன் ராஸ்டன் சேஸ் ஹோப்புடன் இணைந்து இன்னொரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு ஓரளவு நல்ல பலனும் கிடைத்தது.
தொடர்ந்து சீரான ஆட்டத்தை ஆடிய ஹோப், தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். 8 ஆண்டுகள் கழித்து அவர் அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இது. 59 இன்னிங்ஸ்களாக சதமடிக்காமல் இருந்த அவரது சுமையை இந்த இன்னிங்ஸ் குறைத்துவைத்தது. ஆனால், அவரால் அந்த சதத்தை இன்னும் பெரிதாக்க முடியவில்லை. தன் டிரேட் மார்க் ‘வாபில் சீம்’ பந்தை வீசி ஷாய் ஹோப்பை போல்டாக்கினார் மொஹம்மது சிராஜ். 214 பந்துகள் தாக்குப்பிடித்த ஹோப், 103 ரன்களுக்கு வெளியேறினார். அந்த விக்கெட்டோடு வெஸ்ட் இண்டீஸின் ‘ஹோப்’ முடிவுக்கு வந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 311 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.
அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை குல்தீப், பும்ரா இருவரும் கட்டம் கட்டி வெளியேற்றினார்கள். ஜஸ்டின் கிரீவ்ஸ் ஒருபக்கம் போராடினாலும், மற்ற பேட்டர்களால் அவருக்கு உதவமுடியவில்லை. 311 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். அவர்கள் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று நினைத்திருக்க, கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய ஜேடன் சீல்ஸ், கிரீவ்ஸுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இந்தக் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் இந்திய பௌலர்களை 22 ஓவர்கள் திக்குமுக்காடச் செய்து 79 ரன்களும் சேர்த்தது. ஒருவழியாக சீல்ஸை பும்ரா வெளியேற்ற 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். கடைசி வரை போராடிய ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அந்த அணி 120 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப், பும்ரா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
121 என்ற இலக்கை சேஸ் செய்த இந்திய அணி, இரண்டாவது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தது. நான்காவது நாளிலேயே போட்டியை முடிக்கவேண்டும் என்ற நோக்கில் அதீத அதிரடியை வெளிப்படுத்த நினைத்த ஜெய்ஸ்வால், வாரிகன் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் கேட்ச்சாகி 8 ரன்களுடன் வெளியேறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நாளை வெல்லும்பட்சத்தில், ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கும் இந்திய அணி 2-0 என இத்தொடரைக் கைப்பற்றும்.
அடுத்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன் இருவரும் எவ்வித அவசரமும் காட்டாமல் பந்துக்கு ஏற்ப மட்டுமே விளையாடினார்கள். அதனால் நான்காவது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் 58 ரன்களே தேவை என்பதால் இந்திய அணி எப்படியும் இந்த இலக்கை ஐந்தாவது நாளின் முதல் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே எட்டிவிடும்.
நாளை வெல்லும்பட்சத்தில், ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கும் இந்திய அணி 2-0 என இத்தொடரைக் கைப்பற்றும். புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி பெறும் முதல் தொடர் வெற்றியாக இது அமையும். அக்டோபர் 14 பிறந்த நாள் கொண்டாடும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கான பரிசாகவும் இந்த வெற்றி அமையும்!