பட மூலாதாரம், Getty Images
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி. டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று, ஷுப்மன் கில் தலைமையில் முதல் தொடர் வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது இந்த இளம் அணி.
ஆனால், இந்த இரு போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த பல முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு நன்றாக அமைந்த விஷயமெனில் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
குறிப்பாக சாய் சுதர்ஷனின் செயல்பாடு. இங்கிலாந்தில் தடுமாறிய அவர், இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 87, 39 என்று ஸ்கோர் எடுத்தார்.
ஸ்கோரைத் தாண்டி களத்தில் இருந்த 281 நிமிடங்களும் உறுதியுடனும் நிலைத்தன்மையுடனும் விளையாடினார். இந்தியாவின் நம்பர் 3 இடத்தை அவரால் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கையை இந்த இன்னிங்ஸ் மூலம் கொடுத்திருக்கிறார்.
அதேபோல் ரிஷப் பந்த் இடத்தில் ஆடிய துருவ் ஜுரெல் பேட்டிங், கீப்பிங் இரண்டிலுமே அசத்தினார். பந்த் வந்த பிறகு இவரை பேட்டராக மட்டுமே கூடப் பயன்படுத்தலாம் என்று வல்லுநர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தது அவர் செயல்பாடு.
ஆனால், பல்வேறு விஷயங்களை அடைவதற்கான வாய்ப்புகள் இருந்தும் இந்தியா தவற விட்டிருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
நித்திஷ் எதற்காக ஆடினார்?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் 6 இடத்தில் நித்திஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரை ஒரு முக்கிய டெஸ்ட் பிளேயராக உருவாக்க இந்தத் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்பட்டது. 2 முழுநேர வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பிளேயிங் லெவனில் இருப்பதால், அவரது வேகப்பந்துவீச்சை நன்கு பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இந்தியா மொத்தம் 290 ஓவர்கள் பந்துவீசியது. அதில் நித்திஷ் வீசியது வெறும் நான்கே ஓவர்கள். வெறும் 1.4 சதவிகித ஓவர்களுக்கே அவர் பயன்படுத்தப்பட்டார். அதுவும் அந்த 4 ஓவர்களையும் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலேயே வீசியிருந்தார். அடுத்த 3 இன்னிங்ஸிலும் ஒரு பந்துகூட வீசவில்லை. அதுவும் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 200.4 ஓவர்கள் பந்துவீசியபோது கூட நித்திஷ் குமார் ரெட்டியின் கையில் பந்தைக் கொடுக்கவில்லை.
இத்தனைக்கும் “வெளிநாட்டு போட்டிகளில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவை என்பதால் நித்திஷ் குமார் ரெட்டியை ஆடவைத்தோம்” என்று தொடர் முடிந்த பிறகு கில்லே கூறியிருந்தார்.
பந்துவீச்சில் தான் இப்படியே என்றால், பேட்டிங்கிலும் அதே நிலை தான். இந்தத் தொடரில் அவர் ஒரேயொரு இன்னிங்ஸ் தான் பேட்டிங் செய்தார்.
அஹமதாபாத் டெஸ்ட்டில் ஜடேஜா, வாஷிங்டன் இருவரையும் அவருக்கு முன் களமிறக்கினார்கள். மேலும், இரண்டாவது நாள் ஸ்கோருடனேயே (448/5) இன்னிங்ஸை டிக்ளேரும் செய்தார்கள்.
நித்திஷ் போன்ற வீரர் அதிக நேரம் களத்தில் இருக்க வழிவகை செய்திருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை.
பட மூலாதாரம், Getty Images
பரிசோதனை முயற்சிகள் எங்கே?
இந்தத் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கேள்விகளும் குழப்பங்களும் எழுந்துகொண்டேதான் இருந்தன.
பல வீரர்களுக்கு வாய்ப்பாக அமைந்திருக்க வேண்டிய இந்தத் தொடரை, கம்பீரின் குழு அணுகிய விதம் ஆரம்பத்தில் இருந்தே கேள்விக்குறியாகத்தான் இருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் – ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 8வது இடத்தில் இருக்கும் அணி.
சர்வதேச அரங்கில் ஒட்டுமொத்தமாகவே வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் ரொம்பவே தடுமாறுகிறார்கள். அப்படியிருக்கும் ஒரு அணிக்கெதிராக சொந்த மண்ணில் விளையாடும்போது எந்த அணியுமே சில பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ளும்.
அதுவும் இந்தியா போல் சொந்த மண்ணில் பேராதிக்கம் செலுத்தும் ஒரு அணி, நிச்சயம் இதுபோன்ற ஒரு தொடரை புதிய விஷயங்களைப் பரிசோதித்துப் பார்க்க நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
முன்பெல்லாம் இந்திய அணியே இதைப் பலமுறை செய்திருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 2023ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகத்தான் அறிமுக வாய்ப்பு கொடுத்தார்கள்.
அதே தொடரில் தான் ஷுப்மன் கில்லை நம்பர் 3 இடத்தில் இறக்கி பரிசோதித்துப் பார்த்தார்கள். ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வும் கொடுத்தார்கள். இத்தனைக்கும் இந்தத் தொடர் நடந்தது இந்தியாவில் கூட இல்லை. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் என்பதால் எந்த யோசனையும் இல்லாமல், அனைத்து முயற்சிகளையும் துணிந்து எடுத்தது இந்தியா.
இதற்கு முன் 2018ல் கூட வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் பிரித்வி ஷாவையும் அறிமுகப்படுத்தினார்கள். இது மட்டுமல்ல, மொஹம்மது ஷமி, முகாஷ் குமார் போன்றவர்கள் அறிமுகம் ஆனதும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகத்தான்.
ஜெய்ஸ்வால் அறிமுகமான போட்டியை வென்றதும், அடுத்த போட்டியில் முகேஷுக்கும் அறிமுக வாய்ப்புகள் கொடுத்தார்கள். குல்தீப் யாதவை ஒருநாள் அரங்கில் பரிசோதித்துப் பார்த்ததும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவே.
இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்களின் சோதனைகளுக்கான ஒரு களமாகவே இந்திய அணி பயன்படுத்தி வந்திருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
ராகுல், பும்ராவுக்கு ஓய்வு?
அப்படியொரு அணி பல முன்னணி வீரர்கள் இல்லாமல் இன்னும் பலவீனமாக வரும்போது எவ்வித யோசனையும் இல்லாமல் சிலபல வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம்.
முதல்தர கிரிக்கெட்டில் சுமார் 8,000 ரன்கள் விளாசி தேசிய அணிக்காக ஆடும் வாய்ப்புக்காக காத்திருக்கும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு இந்தத் தொடரில் ஒரு அறிமுகம் கொடுத்திருக்கலாம்.
எப்படியும் கே.எல்.ராகுல் 19ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கப்போகிறார். அப்படியிருக்கும்போது இரண்டாவது டெஸ்ட்டில் அவருக்கு ஓய்வு கொடுத்து அவருக்குப் பதில் ஈஸ்வரனைக் களமிறக்கியிருக்கலாம்.
வேலைப்பளுவைக் காரணம் காட்டி பும்ராவுக்கு ஆஸ்திரேலிய தொடருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளையும் ஆடவைத்ததும் தவறாக அமைந்தது.
அப்படி ஆடியிருந்தாலும் ராகுலுக்குச் சொன்னதுபோல் ஒரு போட்டியில் ஆடவைத்து இரண்டாவது போட்டியில் ஓய்வு கொடுத்திருக்கலாம். பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை விட இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருடைய தேவை அதிகமாக இருந்துவிடப் போகிறதா?
இதை பும்ராவின் பக்கமிருந்து மட்டும் பார்க்க வேண்டியதில்லை. பும்ராவுக்கு இந்த டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தால், பிரசித் கிருஷ்ணாவுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுத்து பரிசோதித்துப் பார்த்திருக்கலாம்.
இதுவரை அவர் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியதே இல்லை. இந்திய ஆடுகளங்களில் அவரால் அதே பௌன்ஸை உருவாகக் முடியுமா என்று பார்த்திருக்கலாம். இதைவிட முக்கியமாக அர்ஷ்தீப்பை களமிறக்கி, ஒரு இடது கை பௌலருக்கான தேடலில் ஒரு பரிசோதனை முயற்சி செய்திருக்கலாம். ஆனால், தேர்வுக்குழு அர்ஷ்தீப்பை ஸ்குவாடில் கூட சேர்க்கவில்லை.
பும்ராவுக்கு இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தால் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
புரியாத புதிர்!
ஒரு அணி பரிசோதனை முயற்சிகள் செய்துபார்க்க வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால், கம்பீர் பயிற்சியாளராக இருக்கும் இந்த அணிக்கு எதிராக இவ்வளவு கேள்விகள் எழுப்பப்படுவதற்குக் காரணம், ஒருநாள், டி20 போட்டிகளில் எக்கச்சக்க பரிசோதனை முயற்சிகளை கம்பீரின் அணி செய்வதுதான்.
ஒருநாள் சூர்ய குமார் 11வது வீரராகக் களமிறங்குகிறார், இன்னொரு நாள் ஷிவம் தூபே முதல் ஓவர் பந்துவீசுகிறார்.
இப்போது தைரியாமாக கில்லை ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஆக்கியிருக்கிறார். இப்படி வெள்ளைப் பந்து போட்டிகளில் பல விஷயங்களை முயற்சி செய்பவர், டெஸ்ட் போட்டிகளில் அதற்குத் தயங்குவது தெரிகிறது.
முன்பு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வைட்வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது. அதற்காகத்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முழு பலம் பொருந்திய இந்திய அணியைக் களமிறக்கியிருக்கிறார்கள் என சில விமர்சகர்கள் கூறுகிறார்கள்
ஆனால், கம்பீர் அணியின் அடையாளமே தைரியமான கிரிக்கெட் என்று கூறப்படுவதுண்டு.
பட மூலாதாரம், Getty Images
கம்பீரின் அணி இப்படி பின்வாங்குவதற்கு இன்னொரு உதாரணம், இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ்.
121 என்ற இலக்கை சேஸ் செய்ய நான்காவது நாள் முடிவில் குறைவான ஓவர்களே இருந்தது. அன்றே போட்டியை முடிக்கும் நோக்கில் முதல் பந்தில் இருந்தே பேட்டை சுழற்றினார் ஜெய்ஸ்வால்.
ஆனால், அவர் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆனதும், இந்திய அணி முழுக்க டிஃபன்ஸிவ் அணுகுமுறைக்கு மாறியது. ஐந்தாவது நாளே ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அரை மணி நேர நீட்டிப்பைக் கூட வேண்டாம் என்றார்கள்.
இதுபற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட்டர் ஶ்ரீதரன் ஶ்ரீராம், “ஒரு விக்கெட் போனவுடனேயே ஏன் இந்தியா அணுகுமுறையை மாற்ற வேண்டும்? ஒரு அணுகுமுறையைக் கையில் எடுத்ததும் குறைந்தது 15 ஓவர்களாவது அதற்கு அவகாசம் தர வேண்டும். இதன்மூலம் அணியில் இருக்கும் வீரர்களுக்கு என்ன செய்தியை உணர்த்துகிறீர்கள்? இல்லை பொறுமை காப்பதுதான் அணுகுமுறையெனில் அது ஏன் ஜெய்ஸ்வாலிடம் அறிவுறுத்தப்படாமல் போனது?” என்று கேள்விகள் எழுப்பினார்.
இவ்வளவு விமர்சனங்கள் வைக்கும், கேள்விகள் கேட்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், ஆர்வலர்களும் இந்தியாவின் இந்த சிறப்பான வெற்றியை பாராட்டாமலும் இல்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு