பட மூலாதாரம், Getty Images
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
இந்திய விடுதலைப்போரில் ‘தெற்கின் ஜாலியன் வாலாபாக்’ என்று குறிப்பிடப்படும், வேகன் டிராஜடி நிகழ்வுக்கும் தமிழ்நாட்டின் கோவைக்கும் உள்ள தொடர்பை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று தமிழ்நாடு, கேரளா என பிரிந்திருந்தாலும், அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் ஒரே பகுதியாக இருந்த மலபார் பகுதியில், மாப்ளா கலவரம் நிகழ்ந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் கலவரம் என சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடும் இந்த வன்முறையில், குற்றம் சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கானோர் சரக்கு ரயிலில் அடைக்கப்பட்டு, கோவை அனுப்பப்பட்டனர். ஆனால் காற்று புகாத அந்த பெட்டிகளில் சிக்கி 70 பேர் உயிரிழந்த சம்பவம்தான் வேகன் டிராஜடி என ஆங்கிலத்திலும், பாரவண்டி படுகொலைகள் என மலையாளத்திலும் குறிப்பிடப்படுகிறது.
‘சரக்கு வண்டியில் காற்றுப்புகாத பெட்டிக்குள் நுாற்றுக்கும் மேற்பட்டோரை தலையணையில் பருத்தியை நிரப்புவது போல, துப்பாக்கி முனையில் எங்களை உள்ளே தள்ளி கதவுகளை பூட்டினர். உள்ளே நிற்கவே இடமில்லை. தாகத்தில் நாங்கள் கத்தினோம். சிலர் சிறுநீரை குடித்தனர். சகோதரத்துவத்தை மறந்து, அறிவை இழந்து, அடுத்தவரைத் தாக்கினர். ஆணி தளர்ந்த ஒரு சிறு ஓட்டையில் வந்த காற்றில் சிலர் தப்பினர். நாங்கள் மயங்கி விழுந்து, மீண்டும் விழித்தபோது நான்கைந்து பேர் எங்கள் மீது சடலமாகக் கிடந்தனர்.”
”போத்தனுாரில் வண்டியின் கதவைத் திறந்தபோது, அந்த பயங்கரமான காட்சி பிசாசுகளையும் அதிர்ச்சியடைய வைப்பதாக இருந்தது. வண்டிக்குள் 64 பேர் உடலெங்கும் ரத்தமும் காயங்களுமாக இறந்து கிடந்தனர். சிலர் அந்த ரயில் சந்திப்பு நடைமேடையிலும், சிலர் கோவை மருத்துவமனையிலும் இறந்தனர். அதிலிருந்த 28 பேர் மட்டுமே உயிர் பிழைத்தோம்.”
1921 ஆம் ஆண்டு நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த வேதனைக்குரிய ‘வேகன் டிராஜடி’ நிகழ்வில் நேரடியாக பாதிக்கப்பட்ட கேரளாவின் மலப்புரம் மாவட்டம் கோட்டப்பாடியைச் சேர்ந்த கொன்னோலா அஹமது ஹாஜியின் அனுபவத்தை, தனது ‘மாப்ளா கலவரம்’ (MOPLAH RIOTS) புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் மலையாள எழுத்தாளரான திரூர் தினேஷ்.
70 பேர் உயிரைப் பறித்த அந்த குரூர நிகழ்வின் நினைவாக கேரள மாநிலம் திரூரில் நிகழ்வரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் உயிரிழந்த கோவை போத்தனுாரில் எந்த நினைவுச் சின்னங்களும் இல்லை.
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளும், பல்வேறு மொழிகளில் தனித்தனி நுால்களாகவும், பள்ளிப் பாடப்புத்தகங்களாகவும், வரலாறு சார்ந்த ஆய்வுத் தொகுப்புகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் ரயில் நிலையத்தில் துவங்கி, தமிழகத்தின் கோவை மாநகரிலுள்ள போத்தனுார் ரயில் சந்திப்பில் முடிவடைந்த 70 பேரின் உயிர்களைப் பறித்த ‘வேகன் டிராஜடி’யைப் பற்றிய தனியான பதிவுகள் எதுவுமில்லை என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
பட மூலாதாரம், Tirur Dinesh
வேகன் டிராஜடி–1921 நவம்பர் 19, 20 நடந்தது என்ன?
வெவ்வேறு புத்தங்களிலும் இந்த நிகழ்வு ஒரு பகுதியாகக் குறிக்கப்பட்டுள்ளது. திரூர் தினேஷ் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் எழுதியுள்ள ‘மாப்ளா கலவரம்’ (MOPLAH RIOTS) நுாலில் இந்த நிகழ்வு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அந்த கலவரத்தில் தொடர்புடைய பலரை நேரில் சந்தித்துப் பேசியும், பல்வேறு செய்தித்தாள் கட்டுரைகள், நீதிமன்ற ஆவணங்கள், பிரிட்டிஷ் அரசின் அலுவலகப்பூர்வமான பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் ‘வேகன் டிராஜடி’ நிகழ்வை தினேஷ் பதிவு செய்துள்ளார்.
”அப்போது மலப்புரமும் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மாப்ளா கலவரம் தீவிரமாக நடந்தபோது, அதை அடக்குவதற்காக பிரிட்டிஷ் ராணுவமும், மலபார் சிறப்பு போலீசும் பல்லாயிரக்கணக்கானவர்களை கைது செய்தன. அவர்களை இங்கிருந்து அந்தமான், மெட்ராஸ், கோவை, கண்ணனூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சரக்கு ரயில் பெட்டிகளில் அடைத்து அனுப்பி வைத்தார்கள். அதில் ஒரு பகுதியாக கோவைக்கு பலரையும் அடைத்து அனுப்பியபோதுதான் இந்த துயரம் நிகழ்ந்தது.” என்று ‘வேகன் டிராஜடி’ நிகழ்வைப் பற்றி பிபிசி தமிழிடம் விளக்கினார் மலையாள எழுத்தாளர் திரூர் தினேஷ்.
”1921 நவம்பர் 19 ஆம் தேதியன்று, காற்றே புகாத சரக்கு ரயில் பெட்டிகளுக்குள் (Wagon) நுாற்றுக்கும் மேற்பட்டவர்களை மூட்டைகளைப் போல அடைத்து அனுப்பினர். அதனால் மூச்சுத்திணறிய அவர்கள், ஆணி தளர்ந்த சிறு ஓட்டையில் காற்று வருமிடத்திற்குப் போய் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். போத்தனுாரில் மறுநாள் கதவைத் திறந்தபோதுதான், பலரும் இறந்துகிடந்தனர். சிலர் மருத்துவமனை சென்றும் இறந்துள்ளனர். மொத்தம் 70 பேர் இறந்துவிட்டனர். ஆனால் அவர்களை அங்கே அடக்கம் செய்ய அனுமதிக்காமல் ரயிலிலேயே இங்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.” என்றார் தினேஷ்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட 44 பேருடைய சடலங்கள், திரூர் ரயில் நிலையம் அருகிலுள்ள கோரங்கத் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்களும் அங்கே கல்வெட்டுகளாக குறிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 11 பேருடைய உடல்கள், கோட் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு, அங்கும் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இறந்து போன 70 பேர்களில் 4 பேர் மட்டுமே இந்துக்கள். மற்ற அனைவரும் இஸ்லாமியர்கள்.
‘வேகன் டிராஜடி’யில் இறந்து போன 55 இஸ்லாமிய இளைஞர்களின் உடல்கள் மட்டுமே, இவ்விரு அடக்கஸ்தலங்களில் அடக்கம் செய்யப்பட்டதாகவும், மற்ற சிலருடைய உடல்கள் வெவ்வேறு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் திரூரைச் சேர்ந்த கோரங்கத் ஜும்மா பள்ளிவாசலைச் சேர்ந்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
உயிரிழந்த 4 இந்துக்களின் உடல்கள், திரூர் நகருக்கு வெளியே உள்ள முத்தூர் என்ற பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாக கேரள பத்திரிக்கையாளர் பிரமோத் தெரிவித்தார்.
அந்த நிகழ்வில் இறந்துபோன 4 இந்துக்கள் உட்பட 70 பேர் நினைவாகவும், திரூர் நகரசபை சார்பில், நகரின் மையப்பகுதியில் ‘வேகன் டிராஜடி ஸ்மாரக டவுன்ஹால்’ (நினைவு நகர்மன்றம்) என்ற பெயரில், ஓர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பொது நிகழ்வுகள், கூட்டங்கள், கண்காட்சிகள் நடத்த அனுமதிக்கப்படும் அந்த வளாகத்தில் ‘வேகன் டிராஜடி’ நிகழ்வின் அடையாளமாக, ஒரு சரக்கு ரயில் பெட்டி மாதிரி செய்யப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகிலேயே இறந்து போன 70 பேருடைய பெயர், ஊர், பணி விபரங்களுடன் கல்வெட்டும் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டில் இது நிறுவப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் அனைத்தையும் பிபிசி தமிழ் நேரில் கண்டறிந்து, அங்கிருந்தவர்களை சந்தித்துப்பேசியது.
இந்த நகர்மன்றம் அமைக்கும் முன்பே, 1988ஆம் ஆண்டில், பிரபல இயக்குநர் ஐ.வி.சசி, ‘1921’ என்ற மலையாளப் படத்தை இயக்கியுள்ளார். மம்முட்டி, சுரேஷ்கோபி, பார்வதி ஜெயராம், ஊர்வசி, சீமா உள்ளிட்ட பலரும் நடித்த அந்த படத்திலும் ‘வேகன் டிராஜடி’ காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அந்த திரைப்படம் 1921 ஆம் ஆண்டில் நடந்த மாப்ளா கலவர நிகழ்வுகளையும், அதன் பின்னணியையும் விரிவாக விளக்குகிறது.
மலபார் இஸ்லாமியர்களும், மாப்ளா கலவரமும்
மலப்புரம் (மலபார்) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரே ‘மாப்ளா’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சுதந்திரத்துக்கு முன்பாக 1920 களில், இங்கு இந்து–இஸ்லாமியர்களுக்கு இடையே நடந்த மோதல்கள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்கள் போன்றவையே ‘மாப்ளா கலவரம்’ என்று தொகுக்கப்பட்டுள்ளன.
இதே பெயரில் ஆங்கிலத்தில் நுால் எழுதியுள்ள திரூர் தினேஷ், அதில் அக்காலகட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கினார்.
”ஏறத்தாழ 25 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, பல நுாறு மக்களைச் சந்தித்து, பிரிட்டிஷ் அரசு அலுவலக ஆவணங்களைத் திரட்டியே மாப்ளா கலவரம் குறித்த நுாலை எழுதினேன். பொதுவாக ‘மாப்ளா கலவரம்’, பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான இஸ்லாமியர்களின் யுத்தம் என்றும், அது மண்ணைக் காப்பதற்காக நடந்த வேளாண் புரட்சி என்றும் இருவிதமான கருத்துகள் உள்ளன. அதனால் இரு விதமான கருத்துகளையும் கவனத்துடன் ஆய்வு செய்து இதில் பதிவு செய்திருக்கிறேன்.” என்கிறார் திரூர் தினேஷ்.
‘வேகன் டிராஜடி’யில் இறந்த 70 பேரும், மலப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள். இவர்கள் இறந்தது கோவையில் கண்டறியப்பட்டாலும், அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாமல், இங்கே திருப்பி அனுப்பப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகவே, இந்த நிகழ்வை நினைவுகூரும் எந்தச் சான்றும், சின்னங்களும் கோவையில் இல்லை என்கின்றனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய வரலாற்று ஆய்வாளரும், கோவை குறித்து நுால்களை எழுதியுள்ள எழுத்தாளருமான சி.ஆர்.இளங்கோவன், ”இந்திய சுதந்திரப்போரில் தெற்கில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை என்றால் அது இந்த நிகழ்வுதான். கொல்கத்தாவில் நடந்த ‘ப்ளாக் ஹோல் டிராஜடி’யை மிஞ்சும் விதமாக இந்த நிகழ்விலும் தப்பிக்க வழியில்லாத நிராயுதபாணிகளுக்கு வலுக்கட்டாயமாக மரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த வரலாற்றுப்பதிவுகள் மிகக்குறைவாகவே உள்ளன.” என்றார்.
”1920களில் கிலாபத் இயக்கத்தையும் இணைத்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக காந்தி போராடத் துவங்கிய காலகட்டத்தில், மலபார் பகுதியில் நிலம் சார்ந்த பிரச்னையும் வெடித்திருந்தது. கடின உழைப்பும், போர்க்குணமும் கொண்ட மலபார் இஸ்லாமியர்கள், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடியபோது ராணுவம், மலபார் சிறப்பு போலீஸ் களம் இறக்கப்பட்டன. துப்பாக்கிச் சூடு நடந்து பலர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த துயரமும் அரங்கேறியது.” என்கிறார் அவர்.
அப்போது ரயில்வே, மெட்ராஸ் சதர்ன் மராத்தா என்ற தனியார் நிறுவனத்திடமிருந்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து வரும் ரயிலில் திரூரில் ஒரு சரக்கு ரயில் பெட்டியை இணைத்து, அதில் பலரையும் அடைத்து அனுப்புவது வழக்கமாக இருந்ததாக இந்த எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். அப்படி நுாற்றுக்கும் மேற்பட்டோரை அடைத்து அனுப்பியபோதுதான், மூச்சடைத்தும், தாகத்திலும் 70 பேர் இறந்ததாகக் கூறும் இளங்கோவன், இந்த நிகழ்வு பற்றி அப்போதே நாளிதழ்களில் கடுமையாக எழுதப்பட்டது என்கிறார்.
அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய காரணத்தால் சட்டம்–ஒழுங்கைக் காக்கவே இப்படிச் செய்ததாக மலபார் போலீசார் வாக்குமூலம் அளித்ததாகக் கூறுகிறார்.
இத்தனை பேருடைய இறப்புக்குக் காரணமான அதிகாரிகள் சிலருக்கு மட்டும் பெயரளவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதாக கூறும் எழுத்தாளர்கள், ரயில்பெட்டியில் இறந்து போனவர்களின் குடுமபங்களுக்கு தலா ரூ.300 நிவாரணம் அளிக்கப்பட்டதாகவும் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
ஆனால் ‘வேகன் டிராஜடி’யில் இறந்துபோன 66 பேர் இஸ்லாமியர்கள் என்பதாலேயே இந்த வரலாறு பெருமளவில் மறைக்கப்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டுகிறார் பத்திரிகையாளர் வி.எஸ்.முஹம்மத் அமீன்.
திரூரில் உள்ள ‘வேகன் டிராஜடி நினைவு மண்டபம்’, 55 பேர் அடக்கம் செய்யப்பட்ட அடக்கஸ்தலம் ஆகிய இடங்களிலிருந்து ‘வேகன் டிராஜடி’ நிகழ்வைப் பற்றி நேரில் விளக்கும் ‘பாரவண்டிப் படுகொலைகள்’ என்ற ஆவணப்படத்தையும் இவர் வெளியிட்டிருக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய முஹம்மத் அமீன், ”இந்த ‘வேகன் டிராஜடி’ துயரம் நிகழ்ந்து, நுாறாண்டுகள் கடந்து விட்டது. இன்றைய சூழலில், இந்திய விடுதலைப்போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு முற்றிலும் மறைக்கப்படுகிறது, மாற்றப்படுகிறது.” என்றார்.
பாரவண்டிப் படுகொலையில் திரூரில் அடக்கம் செய்யப்பட்ட 55 பேருடைய அடக்கஸ்தலங்கள் இப்போதும் பராமரிப்பில் உள்ளன என்றாலும், பள்ளிவாசலை புனரமைக்கும்போது அவை இருக்குமா என்று தெரியவில்லை எனக் கூறும் முஹம்மத் அமீன், அந்த நிகழ்வில் இறந்தவர்களின் உயிர்த்தியாகத்தைப் போற்றும் வகையில் கேரள அரசே அங்கே நினைவு மண்டபத்தை எழுப்ப வேண்டும் என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு