• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

”வேட்டி, சேலை கொள்முதலில் மக்கள், விசைத்தறியாளர்களை ஏமாற்றுகிறது திமுக” – ஓபிஎஸ் கண்டனம்  | OPS talks on DMK

Byadmin

Mar 9, 2025


சென்னை: வேட்டி, சேலை கொள்முதலில் மக்களையும், விசைத்தறியாளர்களையும் ஏமாற்றுகிறது திமுக என்று என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி, சேலை வழங்குவது வழக்கமாகக் கடைபிடிக்கப்படும் நடைமுறை. இந்த வேட்டி சேலைகள் விசைத்தறியாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பெறப்பட்டு விநியோகிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி – சேலை வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, இவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 16-01-2025 அன்று நான் எனது அறிக்கை வாயிலாக தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இந்த வேண்டுகோளை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை.

இன்று பொங்கல் பண்டிகை முடிந்து இரண்டு மாதங்கள் முடிய இருக்கின்ற நிலையில், இந்த ஆண்டிற்கான 1 கோடியே 77 லட்சம் சேலைகள், 1 கோடியே 77 இலட்சம் வேட்டிகளில், 35 இலட்சம் வேட்டி – சேலைகள் இன்னும் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படவே இல்லை என்றும், அவை அனைத்தும் கூட்டுறவு சங்கக் கிடங்குகளிலேயே உள்னன என்றும் விசைத்தறியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுதான் திமுக ஆட்சியின் லட்சணம். திமுக அரசின் ஏமாற்று வேலை காரணமாக, கூட்டுறவு சங்கங்கள் பெருத்த இழப்பினை சந்திப்பதோடு, தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், பயனாளிகளுக்கும் வேட்டி-சேலை சென்று சேரவில்லை. காலம் கடந்து கொண்டே செல்வதால், கூட்டுறவுச் சங்க கிடங்குகளில் தேங்கியுள்ள வேட்டி சேலைகளை அரசு கொள்முதல் செய்யுமா என்ற சந்தேகம் விசைத் தறியாளர்களிடையே எழுந்துள்ளது. இந்த ஐயத்தை போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக அரசிற்கு உள்ளது.

எனவே, முதல்வர், இதில் தனிக் கவனம் செலுத்தி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து வேட்டி – சேலைகளையும் கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை கூட்டுறவுச் சங்கங்களுக்கு அளித்து, வேட்டி – சேலைகளை பொதுமக்களுக்கு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



By admin