• Wed. Jan 22nd, 2025

24×7 Live News

Apdin News

வேட்புமனு ஏற்பில் குளறுபடி: ஈரோடு கிழக்கு தேர்தல் அலுவலர் மாற்றம் | Erode East bypoll: Srikanth removed; Manish takes charge as returning officer

Byadmin

Jan 22, 2025


ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பெங்களூருவைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு ஏற்கப்பட்ட குளறுபடி காரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் மணீஷ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 58 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்னர். இதில், 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 55 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலை இருந்தது.

இதில் ஏழு சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியின் மாற்று வேட்பாளர் என மொத்தம் எட்டு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இதன்தன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 47 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த மணீஷ்

இதனைத் தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடந்தபோது, கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.ஆர்.புரம் சட்டசபைத் தொகுதியைச் சேர்ந்த வி.பத்மாவதி என்ற சுயேச்சை வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டதற்கு, சுயேச்சை வேட்பாளர்கள் நூர் முகமது, அக்னி ஆழ்வார், பத்மராஜன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் வேட்பாளராக போட்டியிடலாம். ஆனால், சட்டப்பேரவைத் தொகுதிக்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் மட்டுமே போட்டியிட முடியும் என போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

சுயேச்சை வேட்பாளர் வி.பத்மாவதி

இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா விசாரணை மேற்கொண்டார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 46 ஆக குறைந்தது.

தேர்தல் அலுவலர் மாற்றம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக, மாநகராட்சி ஆணையர் என்.மணீஷ் நியமிக்கப்பட்டு இருந்தார். வேட்புமனு தாக்கல், பரிசீலனை உள்ளிட்ட இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் இவரது உத்தரவின் பேரில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனுவை, விதிகளுக்கு மாறாக ஏற்றதன் மூலம் தவறு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது மனு கடைசி நேரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த குளறுபடி காரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் என்.மணீஷ் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு மாற்று பணியிடம் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான பணிகளை புதிய ஆணையர் ஸ்ரீகாந்த் மேற்கொள்வார்.



By admin