பட மூலாதாரம், Getty Images
நள்ளிரவில் ஆங்காங்கே பிரகாசமாக நட்சத்திர கூட்டங்கள் நிறைந்த வானத்தை நோக்கிப் பார்த்து, இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு பிரம்மாண்டமான இந்த பிரபஞ்சத்தில் நாம் உண்மையில் தனியாகவா இருக்கிறோம்? என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
ஒருவேளை இல்லமால் இருக்கலாம். பூமி என்பது பல பில்லியன் புள்ளிகளில் ஒரு சிறிய புள்ளி. அவ்வாறிருக்க இந்த அல்லது வேறு எந்த வான மண்டலத்திலும் நாம் மட்டுமே ஜீவராசி என்று எப்படி இருக்கமுடியும்?
சரி, மிகச் சரியான சூழல் பராமரிக்கப்படும் பூமிக்கு வெளியே இருக்கும் உயிர்கள் பற்றி நமக்கு தெரிந்தது என்ன?
வேற்றுக்கிரகவாசிகள் (ஏலியன்கள்) இருப்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அவர்கள் இருப்பதாக முடிவு செய்ய வேண்டும் என நிபுணர்கள் பலர் சொல்கின்றனர். சுமார் 200 பில்லியன் விண்மீன் மண்டலங்களில் ஒன்றான நமது பால்வழி மண்டலம் சுமார் 300 பில்லியன் நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது. நமது சூரியன் பூமியில் உயிர்களின் முதன்மை ஆதாரம் ஆகும்.
நட்சத்திரங்களைச் சுற்றி வரும் புறகோள்கள் என்றும் அழைக்கப்படும் கோள்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்டுபிடித்து வருகின்றனர். “அது இருப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று விண்வெளி விஞ்ஞானி மேகி ஆடெரின்-போகாக் கூறுகிறார். “இது எண்ணிக்கை விளையாட்டு மட்டுமே. இது சாத்தியமானது.”
பட மூலாதாரம், Getty Images
நம்மிடம் இப்போது இருக்கும் தொழில்நுட்பம், இந்த புறக்கோள்களை விரிவாக ஆராய உதவியாய் இருக்கிறது. விஞ்ஞானிகள், சக்திவாய்ந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி, அந்த கோள்களின் வழியாகச் செல்லும் நட்சத்திர ஒளியின் வேதியியல் கலவையை ஆராய்ந்து, நட்சத்திரங்களை சுற்றிவரும் வான்பொருட்களின் வேதியியல் கலவையை பார்க்கமுடிகிறது. இதை நிறமாலை ஆய்வு (spectroscopy) என்று அழைக்கின்றனர்.
பூமியின் வேதியியல் கலவையை ஒத்தவற்றைக் கண்டுபிடிப்பது முக்கியமானது ஆகும். அதாவது, பூமியைப் போன்ற உயிரைத் தாங்கக்கூடிய சூழல், ஒருவேளை ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கலாம்.
அறிகுறிகள் ஊக்கமளிக்கின்றன.
“நமக்கு வாழ தகுதியான நூற்றுக்கணக்கான கோள்கள் தெரியும்,” என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் டிம் ஓ’பிரையன் கூறுகிறார். “அடுத்த ஒரு தசாப்தத்திற்குள், அல்லது அதற்கு முன்பே, உயிரின் சாத்தியமான ஆதாரங்களை காட்டக்கூடிய ஒரு கோளை நாம் கண்டுபிடிப்போம் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”
பூமியில் இருந்து மேலும் ஊக்கமளிக்கும் ஆதாரங்கள் கிடைக்கின்றன. முன்பு எந்த உயிரும் வாழ முடியாத அளவு கடுமையானவை என்று நினைக்கப்பட்ட சூரிய ஒளி மற்றும் வெப்பம் இல்லாத நமது கடல்களின் ஆழமான பள்ளங்கள் போன்ற இடங்களில் உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில், தனது நட்சத்திரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் (அதனால் சரியான அளவு கதிர்வீச்சு கிடைக்கும்) இருக்கும் கோளில் மட்டுமே உயிர் இருக்க முடியும் என்று நாம் நம்பினோம். பூமியில் உயிர் இருக்கக்கூடும் என நாம் நினைக்காத இடங்களில் உயிர் செழித்து வளர்வதை கண்டுபிடித்தது, கோள்கள் மட்டுமல்ல, நிலவுகளும் உயிரைத் தாங்கக்கூடியவையாக இருக்கலாம் என்ற சாத்தியத்திற்கு நமது பார்வையைத் திருப்பியது.
அதற்காக அந்த உயிர்கள் பச்சை நிற உருவங்களைப் போல தோற்றமளிக்கும் என்று அர்த்தம் இல்லை – அங்கு உயிர் இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது மற்றும் பிழைத்திருக்க முடியும் என்பது மட்டுமே பொருள்.
வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் என்றாலும், அது அறிவார்ந்த உயிரா என்பதை அறிவது தற்போது கடினம், என நிபுணர்கள் கூறுகின்றனர்.
“பூமியில் உயிர் என்பதை பொறுத்தவரை வரலாற்றின் பெரும்பகுதி அது மிக எளிய உயிராக இருந்தது. உண்மையில் பல பில்லியன் ஆண்டுகளாக அது பாக்டீரிய உயிராக இருந்தது,” என்று பேராசிரியர் ஓ’பிரையன் கூறுகிறார்.
பூமியில் பல அணுக்கள் கொண்ட உயிர்களை உருவாக்கியது சீரற்ற தற்செயல் நிகழ்வுகளின் தொடர் ஆகும். வேற்றுக்கிரகவாசிகள் நம்மை தொடர்பு கொள்ள, அவை உடல் ரீதியாக – மற்றும் தொழில்நுட்ப ரீதியாக – மேம்பட்டதாக இருக்க வேண்டும்.
விருந்தினர்களை எதிர்பார்க்கலாமா?
எனவே, நாம் தனியாக இல்லை என்றால் – வேற்றுலக உயிர்கள் நம்மை சந்திக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கலாமா? இது சிக்கலான கேள்வி.
எந்த உயிரினமும் விண்மீன்களுக்கு இடையே உள்ள மிக நீண்ட தொலைவை கடந்து பயணிக்கும் நிலையை அடையவில்லை என்பது நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. நாம் அறிந்தவரை, இது இன்னும் ஏன் நடக்கவில்லை?
“நமது மிகப்பெரிய பிரச்னை, நமக்கு ஒரே ஒரு உயிரின் உதாரணம் மட்டுமே உள்ளது, அது இந்த கோளில் உள்ள உயிர்,” என்று ஆடெரின்-போகாக் கூறுகிறார்.
ஆனால், பிரபஞ்சத்தின் வேறு இடங்களுக்கு இது ஒரு மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, டாக்டர் ஆடெரின்-போகாக் கூறுகிறார்: “நீங்கள் ஒரு மிகவும் சுறுசுறுப்பான நட்சத்திரத்தின் அருகில் வாழ்ந்தால், நீங்கள் நிலத்தின் கீழ் வாழலாம், அதற்காக அது அறிவார்ந்த உயிர் இல்லை என்று அர்த்தமல்ல, ஆனால் நீங்கள் நிலத்திற்கு அடியில் வாழ்வதால் சமிக்ஞைகளை அனுப்பும் வழி உங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.”
பட மூலாதாரம், Robert Gendler/Science Photo Library/Getty
அல்லது, நாம் அறிவியல் ரீதியாக ஒரே மொழியைப் பேசாமல் இருக்கலாம்.
“1960 முதல் வேற்றுக்கிரக நாகரிகங்களிடமிருந்து சமிக்ஞைகளைக் கேட்க ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வருகிறோம்,” என்று பேராசிரியர் ஓ’பிரையன் கூறுகிறார். ஆனால், உயிரினங்கள் சமிக்ஞைகளை அனுப்ப பலவிதமான வழிகள் உள்ளன, நாம் எதையும் திரும்பக் கேட்காமல் இருக்கலாம்.
நாம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற உயிர்களுடன் ஒரே அலைவரிசையில் இருந்தாலும், பெரும் தூரங்களுக்கு, செய்திகள் அனுப்பப்பட்டு பதிலளிக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம் (பின்னோக்கிப் பார்க்கும் போது, கடிதம் மூலம் தொடர்பு கொள்வது இப்போது மிகவும் மெதுவானதாக தோன்றுவது போல).
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் உள்ள புதிய திட்டமான பிரேக்த்ரூ லிஸன் மூலம், விஞ்ஞானிகள் அருகிலுள்ள ஒரு மில்லியன் நட்சத்திரங்களை ஆராய்ந்து, பூமிக்கு செய்திகளை அனுப்பக்கூடியவற்றுடன் தொடர்பு கொள்ள முயல்கின்றனர்.
அவர்கள், நமது பால்வழி மண்டலத்தின் நடுவில் உள்ள, 25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களையும் ஆராய்கின்றனர். இதன் பொருள், அந்த நட்சத்திரங்களில் ஒன்றிலிருந்து அனுப்பப்படும் செய்தி நம்மை அடைய சுமார் 25,000 ஆண்டுகள் பயணிக்க வேண்டும்.
எனவே, வேற்றுக்கிரகவாசி இருந்தால், அதனிடமிருந்து எதையாவது கேட்க ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகலாம்.
நீண்ட பயணம் காத்திருக்கிறது
விண்மீன் மண்டலங்களுக்கிடையிலான பயணம் மூலம் பெரும் தூரங்களை கடப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை.
நம்மால் ஒளியின் வேகத்தில் ரேடியோ அலைகளை அனுப்ப முடியும் – ஆனால் அது வெறும் ரேடியோ அலை, வெற்றிடத்தில் பயணிக்கும். ஆனால் எந்த வகையான் விண்கலத்தாலும் நட்சத்திரங்களுக்கிடையில் பயணிக்க முடிவதில்லை. விண்கலம் அல்லது மக்களை அனுப்ப வேண்டுமானால், அது மிகவும் சவாலானது.
நம்மால் இதை செய்ய முடியாத நிலையில் இருப்பது போல், பிரபஞ்சத்தல் உள்ள நமது அண்டை உயிர்களும் இதை செய்ய முடியாத நிலையில் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு நம்மை சந்திக்கும் தொழில்நுட்பம் இருந்தாலும், அவர்கள் விரும்பாமல் இருக்கலாம் என்ற சாத்தியத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வானியல் அதிர்ஷ்டம் – அல்லது நல்ல நேரம் – தேவை. நமது நாகரிகம் பூமியில் இருந்த காலம் எவ்வளவு குறுகியது என்பதை நினைவில் கொள்வது கடினம்.
பூமி 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் உயிரை தாங்கியுள்ளது, ஆனால் நவீன மனிதர்கள் சுமார் 3,00,000 ஆண்டுகளாக மட்டுமே இருக்கின்றனர். நாகரிகங்கள் விரைவில் மறைந்துவிடலாம், என்பதால் வேற்றுலக உயிர்களுடன் தொடர்புக்கான கால அவகாசம் குறுகியது.
ஏலியன்கள் நமது கோளைப் பார்வையிட்டார்களா என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாது – ஆனால், மனிதர்கள் பூமியில் இருந்த காலத்தில் அவர்கள் வரவில்லை என்று ஓரளவு உறுதியாகக் கூறலாம்.
“நமது நாகரிகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படவில்லை என்றால், நாம் ஒருபோதும் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்க மாட்டோம்.” என ஆடெரின்-போகாக் கூறுகிறார்.
“ஒருவேளை அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு வந்திருக்கலாம், அல்லது எதிர்காலத்தில், மனித உயிர் முடிந்த பிறகு வரலாம். எனவே, ஒருவேளை டைனோசர்கள் ஜூராசிக் காலத்தில் வேற்றுக்கிரகவாசிகளை சந்தித்திருக்கலாம். நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.”
பிபிசி ரேடியோ 4 இன் தி இன்ஃபினிட் மங்கீ கேஜ் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு