0
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் உள்துறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி டைம்ஸ் பத்திரிகை நடத்திய புலன் விசாரணையில் இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முறைகேடுகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகளின் போது, தவறான வேலைப் பதிவுகள் மற்றும் போலியான ஆவணங்களை வழங்கும் ‘விசா முகவர்கள்’ அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் இல்லாத வேலைவாய்ப்புகளுக்கான ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ்களை பெற்றுத் தருவதாக கூறி, CVகள், வங்கி பதிவுகள் உள்ளிட்ட போலியான ஆவணங்களை தயாரிக்க புலம்பெயர்ந்தோரிடம் ஒருவருக்கு £13,000 வரை வசூலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறமையான தொழிலாளர் விசா ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ், தொழிலாளர் பற்றாக்குறை நிலவும் துறைகளில் காலியிடங்களை நிரப்புவதற்காக அங்கீகரிக்கப்பட்ட முதலாளியிடமிருந்து சான்றிதழ் பெற்ற புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
எனினும், இந்த திட்டத்தை பயன்படுத்தி சில போலி முகவர்கள், புலம்பெயர்ந்தோரை ஏமாற்றி பண மோசடிகளில் ஈடுபடுகின்றமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.