• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

“வேளாண் நிலங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் சர்வே பணியில் கல்லூரி மாணவர்கள்” – அரசுக்கு இபிஎஸ் கண்டனம் | College students in digitalization of agricultural land survey work – EPS Condemns

Byadmin

Nov 14, 2024


கிருஷ்ணகிரி: “மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட நிதியும் ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழக அரசோ வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறது. இப்பணியை மேற்கொண்ட மாணவர்களை பாம்புகள், விஷ ஜந்துகள் கடித்துள்ளன. மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு காரணம். இப்பணிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்களை பயன்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று (நவ.14) கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார கொள்கை திட்டம் வகுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா, டாடா, டெல்டா உள்ளிட்ட பல்வேறு புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. நீர் மேலாண்மை திட்டங்கள், மருத்துவ கல்லூரி உட்பட புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இது இந்த மாவட்டத்தில் மட்டும் தொடங்கப்பட்ட திட்டங்கள். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்கிற புழுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார்.

மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட நிதியும் ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசோ வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறது. இப்பணியை மேற்கொண்ட மாணவர்களை பாம்புகள், விஷ ஜந்துகள் கடித்துள்ளன. மாணவர்கள் யாரும் இறந்தால் அதற்கு தமிழக அரசே முழு காரணம். இப்பணிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்களை பயன்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தல் வரும்போது கூட்டணி என்று நான் கூறியது பாஜக அல்லாத கட்சிகளையே குறிக்கும். அதிமுகவை பொறுத்தவரை வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை ஏற்கெனவே எடுத்துவிட்டோம், அதில் மாற்றுக் கருத்து இல்லை. நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால், இளைஞர்களின் வாக்குகள் பாதிக்கப்படுமா என்ற கற்பனையான கேள்விக்கு எப்படி பதிலளிக்க முடியும்? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுடன், அதிமுக பலமான தொண்டர்களைக் கொண்ட கட்சி. அதற்கு எவ்வாறு பாதிப்பு வரும்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை விட 2024 மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகளை, அதிமுக பெற்றுள்ளது. அதேபோல திமுக அதன் வாக்கு சதவீதத்தை இழந்துள்ளது இதுதான் உண்மை. அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவர் நோயின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் ஓய்வின்றி உழைப்பவர்கள். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்நிகழ்வின்போது, அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்பி.,எம்எல்ஏ-,க்கள் அசோக்குமார், தமிழ்செல்வம், முன்னாள் எம்பி., பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



By admin