சென்னை: வேளாண் விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வேளாண் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்த பெருமித அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய புள்ளியியல் துறையோ 2024-25-ம் ஆண்டில் தமிழகத்தில் வேளாண்மை 0.09 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் வேறுபாடுகள் நிலவுகின்றன.
500 புதிய விவசாயிகள்: தமிழக வேளாண் துறை 1.36 சதவீதத்தில் இருந்து 5.66 சதவீதம் உயர்வு பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. எனினும், இந்த வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயிகள் வருமானம் உயரவில்லை. சராசரியாக ஒரு ஊராட்சியில் 4 ஏக்கருக்கும் மேல் கூடுதல் சாகுபடிப் பரப்பும், 500 புதிய விவசாயிகள் வந்துள்ளதாகவும் மாநில அரசின் அறிக்கையில் உள்ளது. இது எப்படி என அறிய முடியவில்லை. ஆட்சிக்கு வந்தால் குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.3,000 விலை கொடுப்போம் என அறிவித்தார்கள். இதுவரை அந்த விலை வழங்கப்படவில்லை.
வேளாண் ஆணையப் பரிந்துரைப்படி, விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும். விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். மேலும், விவசாயிகள் நலனுக்கான புதிய திட்டங்களை அமல்படுத்தி, வருமானத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.