பட மூலாதாரம், Getty Images
மே 2025-இல், ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கார்டியோவாஸ்குலர் மெடிசின் இந்தியாவில் வைட்டமின் பி -12 குறைபாடு குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.
வைட்டமின் பி -12 குறைபாடு குறித்த பல ஆய்வு தரவுகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வில் சேர்க்கப்பட்ட 20 ஆய்வுகளில் மொத்தம் 18,750 பங்கேற்பாளர்கள் இருந்தனர்.
பங்கேற்பாளர்களில் 51 சதவீதம் பேருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு கண்டறியப்பட்டது. ஆய்வுக் கட்டுரையின்படி, ஆய்வில் பங்கேற்ற சைவ உணவு உண்பவர்களில் 65 சதவீதம் பேர் குறைபாடு கொண்டவர்களாக இருந்தனர்.
வைட்டமின் பி -12 என்றால் என்ன? அதன் குறைபாடு என்ன பிரச்னைகளை ஏற்படுத்தும்? அதை சரிசெய்ய என்ன செய்ய முடியும்?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க, ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜா மற்றும் டெல்லி டயட்ஸின் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அம்ரிதா மிஸ்ரா ஆகியோருடன் பேசினோம்.
வைட்டமின் பி 12 நமக்கு ஏன் தேவை?
பல உடல் செயல்முறைகளுக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. இரண்டு வகையான வைட்டமின்கள் உள்ளன. அவை
- வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்.
- நீரில் கரையக்கூடிய வைட்டமின்களில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி -12 உள்ளிட்ட பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அடங்கும்.
“வைட்டமின் பி -12 ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். இது சிறிய அளவில் தேவைப்பட்டாலும், இது நம் உடலில் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்றார் ஊட்டச்சத்து நிபுணர் தீப்தி கதுஜா.
வைட்டமின் பி -12 உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவுக்கும் அவசியம். தீப்தி கதுஜாவின் கூற்றுப்படி, உணவை ஆற்றலாக மாற்றுவது, புதிய மூலக்கூறுகள் உருவாக்குதல் உள்ளிட்ட உயிரணுக்களில் ஏற்படும் அத்தியாவசிய வேதியியல் எதிர்வினைகளில் வைட்டமின் பி -12 முக்கியப் பங்கு வகிக்கிறது.
நமது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் இது முக்கியமானது என்று அவர் கூறுகிறார். இது நமது ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்திலும் தாக்கம் செலுத்துகிறது.
சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க வைட்டமின் பி-12 அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர் அம்ரிதா மிஸ்ரா கூறுகிறார். இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல வேலை செய்கிறது.
பட மூலாதாரம், Getty Images
எந்த உணவுகளில் வைட்டமின் பி -12 உள்ளது?
வைட்டமின் பி -12 பிரதானமாக இறைச்சியில் காணப்படுகிறது. தாவர உணவுகள் செறிவூட்டப்படாவிட்டால் வைட்டமின் பி 12 கொண்டிருக்காது.
இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பிற பால் பொருட்களில் வைட்டமின் பி -12 உள்ளது.
இது முட்டை, கோழி, சிவப்பு இறைச்சி, மீன், கடல் உணவு மற்றும் பால் மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. சப்ளிமெண்ட்ஸும் கிடைக்கின்றன.
வைட்டமின் பி -12 மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகளும் கிடைக்கின்றன என்று அம்ரிதா மிஸ்ரா விளக்குகிறார். இருப்பினும், எந்தவொரு சப்ளிமெண்ட்ஸையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது முக்கியம்.
“வைட்டமின் பி -12 சப்ளிமெண்ட்ஸ் ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.” என்று தீப்தி கதுஜா கூறுகிறார்.

வைட்டமின் பி -12 குறைபாடு
மோசமான உணவுப் பழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பால் பொருட்களை போதுமான அளவு உட்கொள்ளாதது ஆகியவை வைட்டமின் பி 12 குறைபாட்டிற்கு காரணம் என்று அம்ரிதா மிஸ்ரா கூறுகிறார்.
வைட்டமின் பி 12 கொண்ட உணவுகளை உட்கொள்பவர்களுக்கும் குறைபாடு ஏற்படலாம். காரணம் அவர்களின் உடலால் அதை கிரகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும். அதாவது, நீங்கள் பி12 கொண்ட உணவை உட்கொள்கிறீர்கள், ஆனால் அந்த உணவின் விளைவுகள் உங்கள் உடலில் தெரியவில்லை. இதன் பொருள் உங்கள் உடல் அதை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதே.
பட மூலாதாரம், Getty Images
உடலுக்கு வைட்டமின் பி -12 எவ்வாறு கிடைக்கிறது?
வைட்டமின் பி -12 நம் உடலில் எடுத்துக் கொள்ளப்படுவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். உணவில், வைட்டமின் பி -12 புரதங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின்படி (என்ஐஎச்), வைட்டமின் பி -12 உடலால் இரண்டு கட்டங்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதல் கட்டத்தில், வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் வைட்டமின் பி -12 ஐ உணவில் உள்ள புரதங்களிலிருந்து பிரிக்கிறது.
இரண்டாவது கட்டத்தில், புரதத்திலிருந்து பிரிக்கப்பட்ட வைட்டமின் பி -12 வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதத்துடன் பிணைக்கப்படுகிறது. இது உள்ளார்ந்த காரணி எனப்படுகிறது, பின்னர் உடலில் உறிஞ்சப்படுகிறது.
சப்ளிமெண்ட்ஸில் உள்ள வைட்டமின் பி -12 எந்த புரதத்திற்கும் பிணைக்கப்படவில்லை. எனவே அதனை உடல் உள்ளே எடுத்துக் கொள்ள முதல் கட்டம் தேவையில்லை. இருப்பினும், சப்ளிமெண்ட்ஸில் உள்ள வைட்டமின் பி -12 உடலில் உறிஞ்சப்படுவதற்கான உள்ளார்ந்த காரணியுடன் பிணைக்கப்பட வேண்டும்.
வைட்டமின் பி -12 உடலுக்குள் எடுத்துக் கொள்ளப்படும் செயல்முறையின் எந்தக் கட்டத்திலும் அது சரியாக நடக்கவில்லை என்றால், குறைபாடு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
என்ஐஎச்-ன் படி, வைட்டமின் பி -12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் போதுமான வைட்டமின் பி -12 பெறாதவர்கள் அல்லது உடல்கள் அதை சரியாக உறிஞ்சாதவர்களாக இருக்கலாம்.
வயதானவர்கள்: வயதாகும்போது, பலரின் வயிற்றில் போதுமான ஹைட்ரோகுளோரிக் அமிலம் இருக்காது. இதனால் வைட்டமின் பி -12 ஐ உணவில் இருந்து உடல் எடுத்துக் கொள்வது கடினம். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வைட்டமின் பி -12 செறிவூட்டப்பட்ட உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் தேவைப்படலாம்.
இரைப்பை அழற்சி உள்ளவர்கள்: இந்த தன்னுடல் தாக்க நோய் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் வயிற்றில் உள்ளார்ந்த காரணியின் உற்பத்தியில் குறைவை ஏற்படுத்துகிறது. இது வைட்டமின் பி -12 ஐ போதுமான அளவு உறிஞ்சுவதைத் தடுக்கிறது.
பெர்னிசியஸ் ரத்த சோகை உள்ளவர்கள்: இந்த நிலையில், உடல் உள்ளார்ந்த காரணியை உருவாக்காது. இது வைட்டமின் பி -12 ஐ உறிஞ்சுவதற்கு அவசியமானது. அத்தகையவர்களின் உடல் உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸ் இரண்டிலிருந்தும் வைட்டமின் பி -12 ஐ எடுத்துக் கொள்ள முடியாது. அவர்களுக்கு மருத்துவர்கள் பொதுவாக வைட்டமின் பி -12 ஊசி மூலம் சிகிச்சையளிக்கிறார்கள்.
வயிறு அல்லது குடல் அறுவை சிகிச்சை செய்தவர்கள்: வயிற்றின் ஒரு பகுதியை அகற்றுவது போன்ற அறுவை சிகிச்சை உடலின் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் உள்ளார்ந்த காரணியின் உற்பத்தியைக் குறைக்கும். இதனால் வைட்டமின் பி -12 ஐ உறிஞ்சுவது கடினமாகும்.
சைவ உணவு உண்பவர்கள் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பவர்கள், அசைவ உணவுகளை குறைவாக அல்லது சாப்பிடாதவர்கள் தங்கள் உணவில் இருந்து போதுமான வைட்டமின் பி -12 பெறாமல் போகலாம்.
பட மூலாதாரம், Getty Images
உடலில் வைட்டமின் பி -12 குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் விளைவுகள்
வைட்டமின் பி -12 குறைபாட்டின் அறிகுறிகள் தோன்ற பல ஆண்டுகள் ஆகலாம்.
“வைட்டமின் பி -12 குறைபாடு உருவாக காலம் எடுக்கும். எனவே அதன் அறிகுறிகளும் படிப்படியாக தோன்றி காலப்போக்கில் மிகவும் கடுமையானதாகிவிடும்.” என்று தீப்தி கதுஜா விளக்குகிறார்.
வைட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறிகள்-
- உங்கள் கைகள் அல்லது கால்களில் விசித்திரமான, உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு
- நடப்பதில் சிரமம் (சமநிலை பிரச்னைகள்)
- பெர்னிசியஸ் ரத்த சோகை
- நாக்கு வீக்கம்
- சிந்திப்பதிலும் புரிந்துகொள்வதிலும் சிரமம் அல்லது ஞாபக மறதி
- தளர்வு
- சோர்வு
- தோல் மஞ்சள் நிறமாதல்
- மனநிலை மாற்றங்கள் அல்லது எரிச்சல்
- செறிவு குறைதல்
ஒருவருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு இருக்கிறதா என்பதை வைட்டமின் பி -12 சோதனை மூலம் தீர்மானிக்க முடியும், இது ரத்த பரிசோதனையாகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு