0
இந்தியா – மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சையில் இருந்த பச்சிளங்குழந்தைகள் இரண்டு அண்மையில் உயிரிழந்தன.
அக் குழந்தைகள் எலிகளால் கடிக்கப்பட்டிருக்கும் தடயம் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
எனினும், அதற்கும் குழந்தைகளின் மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்று வைத்தியசாலையின் நிர்வாகம் மறுக்கிறது. வளர்ச்சியில் ஏற்பட்ட பிரச்சினையால் குழந்தைகள் மடிந்ததாக மருத்துவமனையை மேற்கோள்காட்டி NDTV செய்தி வெளியிட்டது.
ஆனால், பழங்குடி அமைப்பு ஒன்று வைத்தியசாலையின் கூற்றை நிராகரித்துள்ளது. குழந்தைகள் எலிக்கடியால் உயிரிழந்ததாக பழங்குடி மக்கள் நலனைப் பிரதிநிதிக்கும் ஜெய் ஆதிவாசி யுவா ஷக்தி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்தூர் நகரிலுள்ள மகாராஜா யெஷ்வந்த்ராவ் வைத்தியசாலையில் இம்மாதத் தொடக்கத்தில் குழந்தைகள் உயிரிழந்தன.
அவற்றில் ஒரு குழந்தையின் 4 விரல்களில் எலிக்கடியின் தடயம் இருந்ததாகப் பழங்குடி அமைப்பு தெரிவித்தது.
மருத்துவமனையின் மூத்த நிர்வாகிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படவேண்டும் என்று அமைப்பு கோரியது.
குழந்தைகள் மரணம் தொடர்பில் நோக்கமில்லாக் கொலை வழக்கும் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது.
அதன் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால் பழங்குடிச் சமூகம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைப்பு எச்சரித்துள்ளது.