13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐபிஎல் மெகா ஏலத்தில் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். 17 வருட ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு இளம் வயது வீரர் ஒருவர் ஏலத்தில் வாங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
2025 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.
வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் போட்டியிட்டன.
இறுதியாக, ராகுல் ட்ராவிட்டின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 வயதான வைபவை 1.10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. வைபவின் அடிப்படை விலை 30 லட்சம் ரூபாய்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி ஜேக் லஷ் மெக்கல்லம், “நாக்பூரில் உள்ள எங்கள் உயர் செயல்திறன் மையத்திற்கு வைபவ் வந்திருந்தார். அவரை அங்கு சோதனை செய்தோம். அவர் எங்கள் அனைவரையும் கவர்ந்தார். அவரிடம் திறன் மற்றும் ஐபிஎலில் விளையாட தேவையான அளவு நம்பிக்கை உள்ளது.” என்றார்
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி ?
வைபவின் தந்தை சஞ்சீவும் ஒரு கிரிக்கெட் வீரர். இருப்பினும், அவரின் நிதி நிலைமை காரணமாக, அவரால் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட முடியவில்லை என்கிறது கிரிக்இன்ஃபோ தளம்.
“நான் பேச்சற்று இருக்கிறேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு பெரிய விஷயம். அவன் தேர்வு செய்யப்படுவான் என்று நினைத்தேன், ஆனால் இவ்வளவு போட்டி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை”என்கிறார் வைபவின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி
மேலும் அவர், “எனக்கு இப்போதும் எல்லாம் நினைவிருக்கிறது. நானும் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்தேன். ஆனால் 19 வயதில், நான் மும்பைக்குச் செல்ல வேண்டியிருந்தது. நான் அங்கு நிறைய விஷயங்களைச் செய்தேன். நான் நைட் கிளப்பில் பவுன்சராகவும் பணியாற்றினேன்.” என்கிறார்
”என் அதிர்ஷ்டம் எப்போது மாறும் என்று அடிக்கடி யோசித்தேன். ஆனால் இப்போது என் மகன் அதை சாத்தியமாக்கியுள்ளான். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் குறைந்தபட்சம் இப்போது நான் அவனது கிரிக்கெட்டுக்காக யாரிடமும் பணம் கேட்க வேண்டியதில்லை “என்று கூறினார் சஞ்சீவ் சூர்யவன்ஷி.
ராஜஸ்தான் ராயல்ஸ் குறித்து சஞ்சீவ் சூர்யவன்ஷி கூறுகையில், “ராஜஸ்தான் ராயல்ஸ் பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளது. சஞ்சு சாம்சன், துருவ் ஜுரெல் போன்ற வீரர்களை ராஜஸ்தான் உருவாக்கியது” என்றார்
வைபவ் இதுவரை ஐந்து ரஞ்சி போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும், அவர் இன்னும் ரஞ்சியில் சிறப்பான ஆட்டத்தை இன்னும் விளையாடவில்லை.
இந்த ஐந்து போட்டிகளில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக, 41 ரன்கள் குவித்தது உட்பட, மொத்தமாக 100 ரன்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) ராஜ்கோட்டில் சையத் முஷ்டாக் அலி தொடரில் அறிமுகமான அவர் ராஜஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அனிகேத் செளத்ரி பந்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்து, ஆறு பந்துகளில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
2011 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மகேந்திர சிங் தோனியின் சிக்ஸரை அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் நினைவில் வைத்திருப்பார்கள்.
ஐசிசி உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, 2011 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அன்று, வைபவ் சூர்யவன்ஷி பிறந்தார்.
வைபவ் தனது 12 வயதில் பி்கார் அணிக்காக அறிமுகமானார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 பந்துகளில் வைபவ் சதம் அடித்தார். இளைஞர் டெஸ்டில் இந்தியாவுக்காக விளையாடியபோது வைபவ் குறைந்த பந்துகளில் சதம் அடித்தார்.
“நான் 9 வயதாக இருந்தபோது, பி்காரின் சமஸ்திபூரில் உள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்தேன். அங்கு இரண்டரை ஆண்டுகள் பயிற்சி பெற்றப் பிறகு, விஜய் மெர்ச்சன்ட் தொடரில் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கான சோதனை போட்டியில் பங்கேற்க முடிவு செய்தேன். அப்போது என் வயது காரணமாக நான் தேர்வு செய்யப்படவில்லை”என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழக்கு அளித்த பேட்டியில் வைபவ் கூறியுள்ளார்.
வைபவ் சமஸ்திபூரைச் சேர்ந்தவர். பி்காரில் நடைபெற்ற ரந்தீர் வர்மா 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் வைபவ் முச்சதம் அடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரையன் லாராவை வைபவ் பின்பற்றுகிறார். இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் தேவையானபோது வைபவுக்கு வழிகாட்டுகிறார்.
இந்த ஏலத்தில் எத்தனை வீரர்கள் இருந்தனர்?
இந்த ஏலத்தில், 10 அணிகள் ஐபிஎல் 2025 மற்றும் அடுத்த சீசனுக்கான வீரர்களைத் தேர்ந்தெடுத்தன.
இந்த ஆண்டு ஏலத்தில், 2000-க்கும் மேற்பட்ட வீரர்களின் பட்டியலிலிருந்து 577 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 367 வீரர்கள் இந்தியர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர்.
ரீடைன் செய்யப்பட்ட வீரர்களுக்கான தொகைக்கு உட்பட இந்த வருடம் கூடுதலாக, ஒவ்வொரு அணியிடமும் ஏலம் எடுக்க 120 கோடி ரூபாய் கையிருப்பு இருந்தது.
ஐபிஎல் வரலாற்றில் விலையுயர்ந்த வீரர்கள் பட்டியல்
- ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது (2025)
- ஷ்ரேயாஸ் அய்யரை 26.75 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.(2025)
- மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. (2024)
- வெங்கடேஷ் அய்யரை 23.75 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.(2025)
- பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.(2024)
- சாம் கரனை 18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. (2023)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு