பட மூலாதாரம், Thinkfilm/Werner Herzog
“அந்த கூட்டத்தில் ஒன்று மட்டும் எங்களின் கவனத்தை ஈர்த்தது. நடுவில் இருந்த அந்த பென்குயின், பனியின் எல்லையில் உள்ள அதன் உணவருந்தும் பகுதிக்கும் செல்லவில்லை, அதன் காலனிக்கும் திரும்பிச் செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தது.”
சமூக ஊடகங்களில் வைரலாக உள்ள பென்குயின் காணொளியில் பின்னணியில் ஒலிக்கும் குரல் இது.
அந்தக் காணொளியில், ஒரே ஒரு பென்குயின் மட்டும் தனது கூட்டத்துடன் செல்லாமல் பனி போர்த்திய மலையை நோக்கி நடக்கத் தொடங்கும்.
அண்டார்டிகாவில் 2007-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட “என்கவுன்டர்ஸ் அட் தி என்ட் ஆஃப் தி வேர்ல்ட்” என்கிற ஆவணப்படத்தில் அந்தக் காணொளி இடம்பெற்றது. வெர்னர் ஹெர்ஸோக் இயக்கிய இந்த ஆவணப்படத்திற்கு பீட்டர் ஸெயிட்லிங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
பென்குயின் பற்றி நம்மில் பலரும் அறிவியல் புத்தகங்களில் படித்து தெரிந்திருப்போம், ஆவணப்படங்களிலும் பார்த்திருப்போம்.
தென் துருவ உயிரினமான பென்குயின் பெரும்பாலும் அண்டார்டிகாவிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை ஒட்டிய பகுதிகளிலும் அதிகம் வாழ்கின்றன.
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் இந்த பென்குயின் பற்றிய பதிவுகளை அதிகம் பார்க்க முடிகிறது. அந்தக் காணொளியில் இருந்த பின்னணிக் குரல் தரும் செய்தியும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி பல அரசியல்வாதிகளும், திரை மற்றும் விளையாட்டு பிரபலங்களும் கூட ஒற்றை பென்குயினுடன் இருப்பது போல புகைப்படங்களை எடிட் செய்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆவணப்படத்தின் இயக்குநர் வெர்னர் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Werner Herzog
அதில், “20 ஆண்டுகளுக்கு முன்பு நான் படம்பிடித்த பென்குயின் ஒன்று இன்றும் பலரின் கற்பனைகளைத் தூண்டுவதைப் பார்க்கையில் ஆச்சரியமாக உள்ளது. இதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. அந்த பென்குயின் தனது மரணத்தை நோக்கி கண்டத்தின் உள்பகுதியில் உள்ள மலைகளை நோக்கி நடக்கத் தொடங்கும். பென்குயின் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் அவற்றின் விநோதத்தன்மை பற்றி என்னிடம் பேசியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
ஆவணப்படத்தில் உள்ள தனது பின்னணிக் குரல் பற்றி குறிப்பிடுகையில், “நான் தீர்க்கப்படாத மர்மங்கள் பற்றிய நிறைய கிரைம் திரில்லர்களைப் பார்ப்பேன். அதில் வருகின்ற தொனியில் தான் இந்த ஆவணப்படத்திற்கும் குரல் கொடுத்திருப்பேன்,” என்றார்.
அதன் வசிப்பிடத்திலிருந்து 80 கிலோமீட்டருக்கு அப்பால் சென்ற இதே போன்றதொரு பென்குயினைப் பார்த்ததாக அந்த ஆவணப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அந்த பென்குயின் மரணம் நேரிடும் வரை இன்னும் பல கிலோமீட்டர் அப்படியே நகர்ந்து கொண்டே இருக்கும்,” என்று வெர்னர் தனது குரலில் பதிவு செய்திருப்பார்.
இதே காணொளியில் கடல் சூழலியலாளர் டேவிட் ஐன்லியிடம் பென்குயின்கள் விநோதமாக நடந்து கொள்ளுமா எனக் கேள்வி முன்வைக்கப்பட்ட போது, “அவை சில நேரங்களில் திசைமாறிப் போய் கடலுக்கு மிகத் தொலைவில் சென்றுவிடும்.” என்றார்.
அந்த பென்குயினை மீட்டு மீண்டும் அதன் காலனிக்கு அழைத்து வந்தாலும் அது மீண்டும் மலையை நோக்கியே செல்லும் என்றும் அந்த ஆவணப்படத்தில் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Thinkfilm/Werner Herzog
கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறை அவை வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்கிறார் உலக காட்டுயிர் நிதியத்தின் இணை இயக்குநரான வினோத் மலயிலேது.
“கடல் உயிரினங்களைப் பொருத்தவரை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள சேர்ந்து வாழும். முட்டையிடுவதற்கும், இரை தேடியும் தான் அவை வேறு இடங்களுக்கு தனித்துச் செல்கின்றன. சில உயிரினங்கள் அடிப்படையில் சேர்ந்து வாழக்கூடியவை, ஆனால் சில உயிரினங்கள் பல்வேறு காரணங்களால் தனித்துச் செல்லும்,” என்றார்.
இதனை உதாரணங்களுடன் விளக்கிப் பேசிய அவர், “டால்பின்கள் பல இணைந்து ஒன்றாக உலவும். ஆனால் திமிங்கலங்கள் நீண்ட தூரம் பயணங்கள் மேற்கொள்ளக்கூடியவை. நீலத் திமிங்கலங்கள் (blue whales) தனியாக வாழக்கூடியவை. இரைதேடி நீண்ட தூரம் செல்லும் திமிங்கலங்கள் அவை வழக்கமாக உலவும் கடற்பகுதியைத் தாண்டிச் சென்றால் இரை கிடைக்காமல் போகக் கூடும். அதனால் தான் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கும் சம்பவங்களைப் பார்க்கிறோம்.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
தனித்து வாழ்வது அல்லது தனித்துச் செல்வது என்பது பல உயிரினங்களிலும் காணப்படுகிறது. உணவு, வாழ்விடம், இனப்பெருக்கம், உடல்நிலை என்று பல்வேறு காரணங்களுக்காக விலங்குகளும் பறவைகளும் தனித்துச் செல்கின்றன. இவ்வாறு விலங்குகள் தனித்துச் செல்வது குறுகிய காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையும் இதற்கு விதிவிலக்கல்ல. குழுக்களாக வாழும் ‘சமூக விலங்காக’ அறியப்படும் யானையும் சில சந்தர்ப்பங்களில் தனித்துச் செல்லும் என்கிறார் ஊட்டி அரசு கல்லூரி வனவிலங்கு உயிரியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான ராமகிருஷ்ணன். இவர் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பில் ஆசிய யானைகளுக்கான சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
அவரின் கூற்றுப்படி, தாய்வழிச் சமூகமாக வாழும் யானைகளில், ஆண் யானைகள் 14, 15 வயது ஆன உடன் தனித்து விடப்படும், அவை மற்ற ஆண் யானைகளுடன் இணைந்து வாழ்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
“இந்த ஆண் யானைகள் 25 வயது ஆகிறபோது பிற கூட்டங்களில் தனக்கான இணையைத் தேடும். ஒருவேளை வலுவான ஆண் யானையால் தோற்கடிக்கப்பட்டால் திரும்பிச் சென்றுவிடும். சிறிது காலம் கழித்து மீண்டும் இணை தேடிச் செல்லும். இணை கிடைக்கின்ற வரை ஆண் யானைகள் தனியாகவே வாழும்,” என்றார்.
யானைகளில் தந்தம் இல்லாத ஆண் யானையான ‘மக்னா யானை’ தான் பெரும்பாலும் தனித்தே வாழ்வதாக அவர் குறிப்பிடுகிறார்.
“பெண் யானைகள் வலுவான ஆண் யானைகளைத் தான் தேர்வு செய்யும். இதனால் தந்தம் இல்லாத மக்னா யானைகள் தனித்து விடப்படுகின்றன,” என்றும் தெரிவித்தார்.
யானை குழு என்றால் தலைமை தாங்கும் பெண் யானை மற்றும் அதன் வழிவந்த யானைகள் அடங்கும் எனக் கூறும் ராமகிருஷ்ணன் அதில் பெண் யானையின் பங்கு தான் முதன்மையானது என்றும் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
அதனை விளக்கிப் பேசிய அவர், “யானைகள் பெரும்பாலும் முதுமை அல்லது உடல்நலக் குறைவு காரணமாக மட்டுமே தங்களது குழுவை விட்டுச் செல்கின்றன. அதிலும் ஒரு வேறுபாடு உள்ளது, மூத்த பெண் யானை உடல்நலம் முடியாமல் போகும்போது மற்ற யானைகள் அதனை விட்டுச் செல்வதில்லை. அவை வசிக்கின்ற பகுதியில் உணவு கிடைக்காமல் போகும் பட்சத்தில் மட்டுமே மற்ற யானைகள் அதனை விட்டுச் செல்லும்.
“பெண் யானைகள் தனித்து வாழ பழக்கப்பட்டவை அல்ல என்பதோடு ஒரு யானை குழுவிற்கும் பெண் யானைகளின் இருப்பு அவசியமாகிறது. ஒரு பெண் யானை அதன் குட்டிகளை மட்டுமல்லாது, குழுவில் உள்ள மற்ற யானைகளின் குட்டிகளையும் கவனித்துக் கொள்ளும். மாறாக ஆண் யானைகள் குழுவை விட்டுச் சென்றால் மற்ற யானைகள் அதனை பின்தொடர்ந்து செல்லாது. அதன் இடத்தை இன்னொரு ஆண் யானை வந்து நிரப்பும். சிறு வயதிலிருந்தே ஆண் யானைகள் அதிக காலம் தனித்து வாழ பழக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம்.” என்றார்.
இவ்வாறு குழுவிலிருந்து தனித்துச் செல்லும் தன்மை பறவைகளிடமும் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய பறவைகள் ஆய்வாளரும் மெட்ராஸ் நேச்சுரலிஸ்டிக் சோசைடியின் உறுப்பினருமான சாந்தராம்.
சமூக ஊடகங்களில் வரும் அனுமானங்களை முழுமையாக நம்பிவிடக்கூடாது எனக் கூறும் அவர், “பறவையினங்கள் மத்தியிலும் இந்த பழக்கம் பரவலாகவே இருந்து வருகிறது. ஒரு குறிப்பிடட பறவை மட்டும் இவ்வாறு நடந்து கொள்ளும் எனக் கூறிவிட முடியாது. கூட்டமாக வாழும் பறவைகள் உணவு, கூடு அமைப்பது மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் வழிதவறிச் செல்வது போன்ற காரணங்களால் தனித்துச் செல்கின்றன.” என்று தெரிவித்தார்.
“உணவு கிடைக்கவில்லை என்றாலும் கூடு அமைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் பறவைகள் தனித்துச் செல்லும். பெரும்பாலும் சிறிய பறவைகள் தான் வழிதவறிச் செல்கின்றன. குழுக்களாகவே வாழும் பறவைகள் கூட இனப்பெருக்க காலத்தில் தனித்துச் செல்கின்றன,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
விலங்குகள் தனிமைப்படுத்திக் கொள்வது அவற்றின் பரிணாம வளர்ச்சியின் மீது தாக்கம் செலுத்துவதாக 2018-ஆம் ஆண்டு புனித ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவில் பாறை எறும்புகள் (டெம்னோதோராக்ஸ் யூனிஃபாசியேட்டஸ் – Temnothorax unifasciatus) என அறியப்படும் எறும்புகள் பூச்சிக் கொல்லி மருந்துகளால் தாக்கப்பட்டால் உயிரிழக்கின்ற வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
“தனது கூட்டில் வாழும் மற்ற எறும்புகளிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் தொற்று பரவுவதில் இருந்து காத்து மற்ற எறும்புகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கிறது,” என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் காணப்படும் தேரை இனம் புதிய வாழ்விடத்தை தேடி தனித்துச் செல்லும் வழக்கம் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
வன உயிரினங்கள் மத்தியிலும் தனித்துச் செல்லும் வழக்கம் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த விஞ்ஞானியும் வன உயிர் ஆய்வாளருமான ஒய்.வி.ஜாலா. இதற்கு உளவியல் என்பதைவிடவும் பரிணாம வளர்ச்சியே காரணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்,
பூனை குடும்பத்தின் கீழ் வரும் உயிரினங்கள் தனித்து வாழப் பழகி இருந்தாலும் சூழலுக்கு ஏற்ப அவை சேர்ந்தும் வாழ்வதாகக் குறிப்பிடுகிறார். அவர்களின் வாழ்விடத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதைப் பொருத்தே இவை தீர்மானிக்கப்படுகின்றன என்றார்.
“சிங்கங்களைப் பொருத்தவரை அவை வாழும் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறும். ஆசிய சிங்கங்கள் மற்றும் ஆப்ரிக்க சிங்கங்கள் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.”
சிங்கங்கள் குழுக்களாகவே வாழும் என்கிறார் ஜாலா. “பெண் சிங்கங்கள் எப்போதும் குட்டிகளுடன் குடும்பமாக வாழும் சூழலில் ஆண் சிங்கங்கள் தனித்து விடப்படும். இவை சில சூழல்களில் பிற ஆண் சிங்கங்களுடன் சேர்ந்து குழுக்களாக வாழும் அல்லது வேறு குழுக்களுடன் இணைந்து கொள்ள முயற்சிக்கும். இதில் முதுமையடைந்த, இளம் சிங்கங்களுடன் போட்டி போட முடியாத சிங்கங்கள் தனியாகச் செல்கின்றன.” என்றார்.
பட மூலாதாரம், Roop Singh Meena
புலிகள் சேர்ந்தும் தனித்தும் வாழ்வதாகக் குறிப்பிடும் அவர், “பெரிய இரைகளை வேட்டையாடும்போதும் இனப்பெருக்க காலத்தின் போதும் மட்டுமே புலிகள் சேர்ந்து கொள்ளும். மற்ற நேரங்களில் ஆண் புலி தனித்தே வாழும். ஆண் புலிகள் பெண் புலிகளையும் அதன் குட்டிகளையும் சேர்த்துக் கொள்வதில்லை. இதில் விதிவிலக்காக இரை உபரியாக கிடைக்கும் இடங்களில் புலிகள் சேர்ந்திருக்கக் கூடும். பெண் புலிகள் தங்களின் குட்டிகளுக்கு வயதானாலும் அவர்களுக்கு அருகிலே வாழும்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு