சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில், சென்னை காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் வ.உ.சி. படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வலைதள பதவில், ‘வ.உ.சிதம்பரனாரின் எல்லையற்ற அன்பு, அசைக்க முடியாத பக்தி மற்றும் உயரிய தியாகங்கள், பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன’ என தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இன்ப விடுதலைக்காக துன்பச் சிறையை துச்சமென நினைத்த செக்கிழுத்த செம்மலை போற்றுவோம். அவரது தியாக வாழ்வை வணங்குவோம்’ என்று தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் வ.உ.சி. நினைவை போற்றியுள்ளனர்.