• Fri. Jan 30th, 2026

24×7 Live News

Apdin News

ஷரியா சட்ட மீறல்: இந்தோனேசியாவில் ஜோடிக்கு பொதுமக்கள் முன்னிலையில் 140 பிரம்படிகள்

Byadmin

Jan 30, 2026


இந்தோனேசியாவின் ஆச்சே (Aceh) மாகாணத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டங்களை மீறியதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு ஜோடி, பொதுமக்கள் முன்னிலையில் மொத்தமாக 140 முறை பிரம்பால் அடிக்கப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தண்டனை நேற்று வியாழக்கிழமை (29) ஒரு பொது பூங்காவில் நிறைவேற்றப்பட்டது.

திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், மதுபானம் அருந்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இந்த ஜோடியில், 21 வயதுடைய பெண் மீது மூன்று பெண் அதிகாரிகள் மாறிமாறி பிரம்பால் அடித்தனர். கடும் வலியால் அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவரை மேடையிலிருந்து தூக்கிச் சென்று ஆம்புலன்ஸில் அனுப்பினர்.

இந்தச் சம்பவத்தில் அந்த ஜோடியுடன் மேலும் நால்வரும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் இஸ்லாமிய பொலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. அனைவரும் ஷரியா சட்டங்களை மீறியதாக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மதரீதியாக சட்டங்கள் கடுமையான ஆச்சே மாகாணத்தில், இஸ்லாமிய சட்டங்களை மீறுபவர்களுக்கு பிரம்படி தண்டனை வழங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இருப்பினும், இந்த தண்டனைகள் மனித உரிமைகளுக்கு முரணானவை என உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக விமர்சித்து வருகின்றன.

ஆச்சே மாகாணத்தின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் படி, திருமணத்திற்கு வெளியான பாலியல் உறவுக்கு 100 பிரம்படிகள் விதிக்கப்படுகின்றன. அதேபோல், மதுபானம் அருந்தியதற்காக 40 பிரம்படிகள் தண்டனையாக வழங்கப்படுகின்றன.

இந்த தண்டனைகள் முறையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றும், தண்டனைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு பின்னர் தேவையான ஆதரவை வழங்கும் வகையில் விதிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்தோனேசிய மனித உரிமை அமைப்பான Kontras-ன் ஆச்சே ஒருங்கிணைப்பாளர் அஸ்ஹருல் ஹுஸ்னா தெரிவித்துள்ளார்.

மேலும், தனிப்பட்ட இடத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக கண்டறியப்பட்ட இஸ்லாமிய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும், அவரது பெண் தோழிக்கும் தலா 23 முறை பிரம்படிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்படுவார் என ஆச்சே இஸ்லாமிய பொலிஸ் தலைவர் முகம்மது ரிசால் அறிவித்துள்ளார்.

முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட இந்தோனேசியாவில், ஷரியா சட்டங்களை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தும் ஒரே மாகாணம் ஆச்சே என்பதும், இங்கு சூதாட்டம், மது அருந்துதல், ஓரினச்சேர்க்கை மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகளுக்கு பிரம்படி சட்டப்பூர்வ தண்டனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஷரியா சட்ட மீறல்: இந்தோனேசியாவில் ஜோடிக்கு பொதுமக்கள் முன்னிலையில் 140 பிரம்படிகள் appeared first on Vanakkam London.

By admin