பளபளப்பான அலை அலையான முடி, சுருண்ட கூந்தல் அல்லது நேர்த்தியான, மென்மையான கூந்தல் என எதுவாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்கும் கூந்தலைத் தான் நாம் அனைவரும் விரும்புகிறோம்.
பிரிட்டனில் 5.8 பில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தத் துறையில், எண்ணற்றப் பொருட்கள், ட்ரெண்டுகள் மற்றும் டிக்டாக் ஹேக்குகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. இவற்றால் அடிப்படை விஷயங்களை மறந்துவிடுவது எளிது.
உண்மை என்னவென்றால், ஆரோக்கியமான கூந்தல் என்பது ஒரு பெரிய தொகையைச் செலவழிப்பது பற்றியோ அல்லது சிக்கலான வழிமுறைகளைப் பின்பற்றுவது பற்றியோ இல்லை, அது எளிய விஷயங்களைச் சரியாகச் செய்வது பற்றியதுதான்.
யுகே ஹேர் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் ட்ரைக்காலஜிஸ்ட் (முடி மற்றும் உச்சந்தலை மருத்துவர்) ஈவா ப்ரௌட்மேன் மற்றும் ஹேர் அண்ட் ஸ்கால்ப் கிளினிக்கின் ட்ரெசி வாக்கர் ஆகியோர், உங்கள் தலைமுடியை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றிய 4 பொதுவான கட்டுக்கதைகளை உடைத்தெறிகிறார்கள்.
1. குளிர்ந்த நீரால் முடி பளபளப்பாகாது
பட மூலாதாரம், Getty Images
பளபளப்பான கூந்தல் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நடுங்கும் குளிர்ந்த நீரில் குளித்திருக்கிறீர்களா?
அப்படியென்றால், நீங்கள் அதைச் செய்வதை நிறுத்திவிட்டு, ஒரு இதமான மற்றும் வசதியான குளியலை இனி அனுபவிக்கலாம். ஏனெனில், குளிர்ந்த நீரால் உங்கள் முடிக்கு கூடுதல் பளபளப்பு எதுவும் கிடைக்காது என்று ப்ரௌட்மேன் கூறுகிறார்.
“உறைபனி போன்ற குளிர்ந்த நீரில் உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டிய அவசியமில்லை, அதனால் எந்தப் பயனும் இல்லை,” என்று அவர் கூறுகிறார்.
“வேதியியல் பொருட்கள், வெப்பம் மற்றும் நீங்கள் இருக்கும் சுற்றுச்சூழலில் இருந்து உங்கள் முடியை எப்படிப் பாதுகாக்கிறீர்கள் என்பதே மிகவும் முக்கியமானது.”
இருப்பினும், மிகவும் சூடான நீரில் முடியைக் கழுவ வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார். ஏனெனில், அது உங்கள் முடியை வறண்டு போகச் செய்யலாம். மேலும், சூடான நீர் நம் தோலை எரிப்பதைப் போலவே உச்சந்தலையையும் (Scalp) பாதிக்கலாம்.
2. எந்தப் பொருளும் சேதமடைந்த முடியைச் சரிசெய்ய முடியாது
பட மூலாதாரம், Getty Images
சிகையலங்கார கலைஞரிடம் செல்லாமல் உங்கள் முடியின் பிளவுபட்ட முனைகளைச் சரிசெய்யலாம் என்று நம்புகிறவராக நீங்கள் இருந்தால், தலைமுடியை வெட்டுவது ஒன்றுதான் அதற்கான ஒரே தீர்வு என்பதைத் தெரிந்துகொள்ளும்போது நீங்கள் ஏமாற்றமடையக்கூடும்.
பிளவுபட்ட முனை என்பது இறுக்கமான சாக்ஸில் (Tights) ஏற்படும் ஓட்டையைப் போன்றது அதைச் சரிசெய்ய வழி இல்லை என்று ப்ரௌட்மேன் விளக்குகிறார்.
வாக்கர் கூறுகையில்: “ஒரு முடி உடைந்து போவதாக நினைத்து அதை நுண்ணோக்கியின் கீழ் பார்த்தால், அதில் இரண்டு அல்லது மூன்று கிளைகள் இருப்பதைப் போல தெரியும். சந்தையில் கிடைக்கும் பொருட்கள் ஒரு வகையான பசையைப் போலச் செயல்படுகின்றன, அவை முடியை மீண்டும் ஒன்றாக ஒட்டி, அது பார்ப்பதற்கு நன்றாகத் தோன்றும்.”
இவை தற்காலிகத் தீர்வுகள் மட்டுமே என்றும், தீர்வை உறுதியளிக்கும் தயாரிப்புகளுக்காக அதிகப் பணத்தைச் செலவழித்து ஏமாந்து போக வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
உங்கள் முடியை வெட்டுவதால் அது வேகமாக வளரும் என்ற கூற்றுக்களும் உண்மையில்லை என்று ப்ரௌட்மேன் கூறுகிறார்.
“உங்கள் கூந்தலை விரைவாக வளரச் செய்வது சாத்தியமில்லை, எனவே அதைக் கோரும் எந்தவொரு தயாரிப்பும் பொய் சொல்கிறது.”
3. உங்கள் கூந்தல் தானாகச் சுத்தமாகாது
பட மூலாதாரம், Getty Images
சிலர் தங்கள் முடியைத் “தானாகச் சுத்தப்படுத்தப்” பழக்கிவிட்டதாகக் கூறி, அதை எப்போதாவது அல்லது அறவே கழுவாமல் இருக்கிறார்கள்.
ஆனால், இதைச் செய்வது உங்கள் முடிக்கு நல்லதல்ல என்று ப்ரௌட்மேன் கூறுகிறார். “உங்கள் உச்சந்தலையில் 1,80,000 எண்ணெய் சுரப்பிகள் உள்ளன. அவற்றை நீங்கள் தவறாமல் கழுவவில்லை என்றால், அது அழுக்கு மற்றும் குப்பைகளைச் சேகரிக்கிறது.”
வாக்கரும் இதை ஒப்புக்கொள்கிறார். துணிகளில் உள்ள எண்ணெய் அல்லது அழுக்கை சலவை சோப்பு இல்லாமல் தண்ணீரால் மட்டும் அகற்ற முடியாது என்பதுடன் இதையும் ஒப்பிடுகிறார்.
“தலைமுடி எண்ணெய் பிசுபிசுப்பு அதிகரிக்க அனுமதிப்பது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாக அனுமதித்து உச்சந்தலையில் அரிப்பு போன்ற பிரச்னைகள் மோசமடைகின்றன என்பதால் உங்கள் முடியைத் தொடர்ந்து கழுவாமல் இருப்பது துர்நாற்றம், பொடுகு போன்ற உச்சந்தலையில் உள்ள பிரச்னைகளை மோசமாக்கும்” என்றும் அவர் கூறுகிறார்.
உங்கள் முடி மிகவும் எண்ணெய் பசையாக இருந்தாலோ அல்லது நீங்கள் நிறையப் பொருட்களைப் பயன்படுத்தினாலோ, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைமுடியைக் கழுவ வேண்டும் என்று ப்ரௌட்மேன் பரிந்துரைக்கிறார்.
ஹடர்ஸ்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பகுப்பாய்வுப் பேராசிரியர் லாரா வாட்டர்ஸ், மிகவும் எண்ணெய் பசையுள்ள முடியைக் கொண்டவர்கள் வலுவான சுத்தம் செய்யும் ஷாம்பூவைப் பயன்படுத்தலாம் என்றும், அதே நேரத்தில் வறண்ட முடியைக் கொண்டவர்கள் சல்பேட் இல்லாத (sulfate-free) ஷாம்பூவைப் பற்றிச் சிந்திக்கலாம் என்றும் கூறுகிறார். இது சற்று விலை அதிகம் என்றாலும், முடியின் எண்ணெயை முற்றிலும் நீக்காது.
4. ட்ரை ஷாம்பு, தலைக்குக் குளிப்பதற்கு மாற்றாகாது
பட மூலாதாரம், Getty Images
தலைக்குக் குளித்தல், ட்ரை செய்வது மற்றும் ஸ்டைல் செய்வது என தலைமுடிக்கு முழுமையாக நேரம் ஒதுக்குவது எப்போதும் சாத்தியமில்லை. எனவே வேலை, உடற்பயிற்சி மற்றும் சமூகத் திட்டங்களுக்கு இடையில், நம்மில் பலர் எண்ணெய் பசையுள்ள வேர்களைச் சரிசெய்யவும், குளிக்காமல் தலைமுடியை புத்துணர்ச்சி பெறச் செய்யவும் ட்ரை ஷாம்புவைப் பயன்படுத்துகிறோம்.
ட்ரை ஷாம்பு “நிச்சயமாகப் பயன்படுத்தலாம்” என்று ப்ரௌட்மேன் கூறுகிறார். ஆனால், தலைக்குக் குளிப்பதற்கு இடையேயான நாட்களில் ஒரு முறை மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும்.
அதைச் சுத்தம் செய்யாமல், தொடர்ந்து பல நாட்களுக்குப் பயன்படுத்துவதுதான் சிக்கலை ஏற்படுத்துகிறது.
“உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய் ஷாம்புவில் மூழ்கி, பூஞ்சை அந்தப் படிவங்களை உணவாக எடுத்துக் கொள்ளும்,” என்று ப்ரௌட்மேன் கூறுகிறார்.
“நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், உங்களுக்கு அரிப்புடன் கூடிய, செதில் செதிலான உச்சந்தலை (Itchy and flaky scalp) ஏற்பட வாய்ப்புள்ளது.”
முடிவில், உங்கள் முகத்தை நீங்கள் கவனித்துக் கொள்வதைப் போலவே உங்கள் உச்சந்தலையையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரது அறிவுரை. நீங்கள் முகத்தில் உள்ள அலங்காரப் பொருட்களை அகற்றாமல், முதலில் கழுவாமல் தொடர்ந்து அடுக்கடுக்காக மேக்கப் போட மாட்டீர்கள் அல்லவா?