சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான தனது உறவுகள் “முன்னெப்போதும் இல்லாத மட்டத்தில்” இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். இருவரும் பீஜிங்கில் மாபெரும் ராணுவ அணிவகுப்புக்கு முன்னதாக சந்தித்தனர்.
ஷி ஜின்பிங்கை தனது நெருங்கிய நண்பர் என்று புதின் குறிப்பிட்டார். இந்த உறவுகள் முன்மாதிரியானவை என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா சீனாவுக்கு எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க உள்ளது. அதே நேரத்தில், பீஜிங் ஒரு வருட கால சோதனையாக ரஷ்யர்களுக்கு விசா இல்லாத பயணம் செய்ய அனுமதிக்கும்.
யுக்ரேன் போரில் இரு ஆக்கிரமிப்பாளர்களுடனும் ஒற்றுமையைக் காட்டும் வகையில், வட கொரியாவின் கிம் ஜாங் உன்னை வரவேற்கவும் ஷி ஜின்பிங் தயாராகி வருகிறார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானியர்கள் அதிகாரபூர்வமாக சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதன்கிழமை சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை ஷி ஜின்பிங் நடத்துகிறார்.
மே மாதம், நாஜிக்களின் தோல்வியை குறிக்கும் வகையிலான ரஷ்யாவின் கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றிருந்தார்.
ரஷ்யா மற்றும் வட கொரியா தங்கள் பொருளாதாரங்களை முன்னெடுத்து செல்ல சீனாவை நம்பியுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப், யுக்ரேனில் போரை நிறுத்தும் நோக்கில் புதினுடன் ஒப்பந்தம் போட முயலும் நேரத்தில், சீன அதிபர் தனது அதிகாரம் மற்றும் செல்வாக்கின் எல்லையை காண்பிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
புதன்கிழமை சீன தலைநகரில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் அணிவகுத்து செல்லும் நேரத்தில், மூன்று நாட்டு தலைவர்களும் தோளோடு தோள் நிற்பார்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
செவ்வாயன்று சீனாவின் ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ அரங்கில் நடந்த பேச்சுக்களில், புதின் யுக்ரேனில் நடைபெறும் போர் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. அவர் பொதுவான அக்கறை கொண்ட பிரச்னைகளை சீன தலைவருடன் விவாதித்ததாகக் கூறினார்.
“அன்புள்ள நண்பரே, நானும் முழு ரஷ்ய தூதுக்குழுவும் எங்கள் சீன நண்பர்களுடன் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்று புதின் ஜின்பிங்கிடம் கூறியதாக ரஷ்ய அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் செயலியில் வெளியிடப்பட்ட வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் நெருக்கமான தகவல் பரிமாற்றம் ரஷ்யா-சீனா உறவுகளின் மூலோபாய தன்மையை பிரதிபலிக்கிறது, அவை முன் எப்போதும் இல்லாத மட்டத்தில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.
“நாங்கள் எப்போதும் ஒன்றாக இருந்தோம், இப்போதும் ஒன்றாக இருக்கிறோம்.” என்றும் புதின் கூறினார்.
“சீன-ரஷ்ய உறவுகள் சர்வதேச மாற்றங்களின் போதும் நிலைத்து இருந்துள்ளன” என்று ஷி ஜின்பிங் புதினிடம் கூறினார். பீஜிங் “மிகவும் நியாயமான மற்றும் உலகளாவிய நிர்வாக முறையின் கட்டமைப்பை ஊக்குவிப்பதற்கு” மாஸ்கோவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
நெருங்கி வரும் சீனாவும் ரஷ்யாவும்
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மட்டுமல்லாமல், ஒரு ராஜதந்திர வல்லரசாகவும் பீஜிங்கின் அதிகாரத்தை சர்வதேச அரங்கில் முன்னிலைப்படுத்த ஷி ஜின்பிங் முயலும் நேரத்தில் இந்த சந்திப்புகள் நடைபெறுகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிகள் உலகெங்கிலும் உள்ள பொருளாதார உறவுகளை தலைகீழாக மாற்றியுள்ள நிலையில், ஒரு நிலையான வர்த்தக பங்காளியாக சீனாவின் பங்கை ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
இப்போது, யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய தலைவருடனான ஒரு ஒப்பந்தம் டிரம்பிடமிருந்து தொடர்ந்து நழுவி வருகின்ற நிலையில், பீஜிங்குக்கு புதினை ஷி ஜின்பிங் வரவேற்பது அவர்களின் நெருக்கமான உறவுகளை நிரூபிக்கிறது.
இவர்கள் இருவரும் முன்பு தங்கள் நாடுகளின் உறவை “வரம்புகள் இல்லாத நட்பு” என்று கூறியிருந்தனர்.
யுக்ரேன் போர் தொடர்பாக மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால் இழந்த வருவாயை சீனா மற்றும் பிற நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈடுகட்ட முடியும் என்று ரஷ்யா நம்புகிறது.
அனைத்து திட்டங்களும் தொடங்கப்பட்டவுடன், ரஷ்யாவிலிருந்து சீனாவுக்கு அனுப்பப்படும் குழாய் எரிவாயு 106 பில்லியன் கன மீட்டர்கள் அளவில் இருக்கும் என செவ்வாயன்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் அறிவித்தன. இது யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்கு முன்னர் ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பியதை விட மிகக் குறைவு.
ரஷ்ய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஒரு மாத கால விசா இல்லாத பயணத்தை செப்டம்பர் 15 முதல் ஒரு வருடத்துக்கு வழங்குவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
பட மூலாதாரம், Sputnik/Pool via EPA
அமெரிக்காவை மறைமுகமாக சாடிய ஷி
திங்களன்று தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் ஷி ஜின்பிங் மற்றும் புதின் மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்களை விமர்சித்தனர். அதே நேரத்தில், புதின் ரஷ்யாவின் யுக்ரேன் தாக்குதலை ஆதரித்து பேசினார், மோதலைத் தூண்டியதாக மேற்கத்திய நாடுகளை அவர் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவை மறைமுகமாக குறிப்பிட்டு, “பனிப்போர் சிந்தனை, குழு மோதல் மற்றும் கொடுமைப்படுத்தும் நடத்தை ஆகியவற்றை எதிர்க்க” எஸ்சிஓ உறுப்பினர்களை ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.
இந்தியா, இரான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த உலகத் தலைவர்களும் கலந்துகொண்ட இந்த உச்சிமாநாட்டில், “காலாவதியான யூரோசென்ட்ரிக் மற்றும் யூரோ-அட்லாண்டிக் மாதிரிகளுக்கு (ஐரோப்பாவை மையமாக கொண்ட அணுகுமுறை)” பதிலாக ஒரு புதிய முறைக்கு அடித்தளம் அமைத்ததாக புதின் கூறினார்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் புதன்கிழமை ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார். செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது சிறப்பு ரயிலில் சீன எல்லையை கடக்கும் அவருக்கு இது ஒரு முக்கிய பயணமாக இருக்கும்.
கிம்மின் முதல் பலதரப்பு சர்வதேச சந்திப்பு இதுவாகும். பல தசாப்தங்களில் ஒரு வட கொரிய தலைவர் சீன ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஒரு வட கொரியத் தலைவர் சீன ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றது – கிம்மின் தாத்தா, வட கொரியாவின் நிறுவனர் கிம் இல்-சுங் 1959-ல் கலந்து கொண்டபோது நிகழ்ந்தது.
புதினின் ஆட்சிக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை உந்தித்தள்ளிய யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், பெரும்பாலான மேற்கத்திய தலைவர்கள் அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
இருப்பினும், பீஜிங் புதினின் போரை விமர்சிக்கவில்லை. இரட்டை பயன்பாட்டு பொருட்களை வழங்குவதன் மூலமும், ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலமும் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு சீனா உதவுவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், பீஜிங் அதை மறுக்கிறது.
ரஷ்ய படையெடுப்புக்கு ஆயுதங்கள் மற்றும் துருப்புகளை கிம் வழங்கியுள்ளார்.