படக்குறிப்பு, இந்திய நடிகை மற்றும் மாடலான ஷெர்லின் சோப்ராகட்டுரை தகவல்
“இந்தக் கனமான சுமை என் மார்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஒரு செயற்கை மார்பகத்தின் எடை 825 கிராம். நான் இப்போது பட்டாம்பூச்சி போல் இலகுவாக உணர்கிறேன். சமூக ஊடகங்களால் ஈர்க்கப்பட்டு, இளம் தலைமுறையினர் தங்கள் உடலுடன் விளையாட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.”
இவை நடிகையும் மாடலுமான ஷெர்லின் சோப்ராவின் வார்த்தைகள். தான் பொருத்தியிருந்த செயற்கை மார்பகங்களை (breast implants) அகற்றிக் கொண்டதை வெளிப்படுத்தும் ஒரு வீடியோவை அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில், வெளியுலகத்தின் அழுத்தத்தால் தங்கள் உடலைப் பற்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், தங்கள் இயற்கையான உடல் தோற்றத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் இளம் தலைமுறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாகப் பகிரப்பட்ட ஒரு பதிவில், “நான் எந்தவொரு கூடுதல் சுமையுமின்றி என் வாழ்க்கையை வாழும் பொருட்டு, இன்று நான் பொருத்தியிருந்த செயற்கை மார்பகங்களை அகற்றப் போகிறேன்” என்று அவர் கூறியிருந்தார்.
சமூக ஊடகங்களில் மக்கள் அவரது இந்தச் செயலைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், இந்த செயற்கை மார்பகங்கள் எதனால் ஆனவை, அவை உடலில் எப்படிப் பொருத்தப்படுகின்றன என்ற சந்தேகங்களும் எழுகின்றன. அவை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
செயற்கை மார்பகம் என்றால் என்ன?
செயற்கை மார்பகம் என்பது ஒருவர் தனது மார்பகத்தின் அளவை அதிகரிக்கவோ அல்லது மார்பகத்தின் தோற்றத்தை மேம்படுத்தவோ, செயற்கையாக உருவாக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் மார்பினுள்ளே செலுத்தப்படும் ஓர் அழகுப் பராமரிப்புச் செயல்முறை (cosmetic procedure) ஆகும்.
இன்று பயன்படுத்தப்படும் பெரும்பாலான செயற்கை மார்பகங்கள் சிலிகானால் ஆனவை. இவை ஒரு பந்து போல் இருக்கும். மார்பகத்தின் கீழே சிறிதாகக் கீறிவிட்டு, அதன் வழியாகச் செலுத்தப்பட்டு, மார்பினுள்ளே வைக்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, செயற்கை மார்பகங்கள் (சித்தரிப்புப் படம்)
லூதியானாவில் உள்ள ‘ப்ரொஃபைல் ஃபோர்ட்’ (Profile Fort) என்ற கிளினிக்கின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும் உரிமையாளருமான மருத்துவர் விகாஸ் குப்தா “நான் கடந்த 15 ஆண்டுகளாக செயற்கை மார்பக அறுவை சிகிச்சை அளித்து வருகிறேன். முன்னதாக, சலைன் வாட்டர் (உப்பு நீர்) உள்வைப்புகளும் பயன்படுத்தப்பட்டன, ஆனால் அவை உடையும் ஆபத்து இருந்ததால் இப்போது பயன்பாட்டில் இல்லை” என்று கூறுகிறார்.
“இப்போதெல்லாம், செயற்கை மார்பகங்கள் சிலிகானால் தயாரிக்கப்படுகின்றன. அவை எளிதில் பொருத்தப்படுவதால், செயற்கை மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட வாடிக்கையாளர் மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தவிர வேறு யாருக்கும், அவர்கள் ஓர் அழகு பராமரிப்புச் செயல்முறையைச் செய்துள்ளனர் என்பது தெரிவதில்லை.”
ஒருமுறை செயற்கை மார்பகம் வைக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அதை மீண்டும் மாற்ற வேண்டியதில்லை.
லூதியானாவில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (CMC) மற்றும் மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவரும் பேராசிரியருமான மருத்துவர் பிங்கி பர்கல், “கடந்த பத்து ஆண்டுகளில் சமூக ஊடகங்களின் வருகையால் செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது” என்றார்.
“இத்தகைய அழகுப் பராமரிப்புச் செயல்முறைகள் புதியவை அல்ல. ஆனால் சமூக ஊடகங்களின் வருகையால், அவற்றைச் செய்துகொள்ளும் போக்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தச் செயல்முறைகள் அனைத்தும் இப்போது சாதாரண மக்களும் அணுகக் கூடியவையாக வந்துள்ளன. அவை முன்பைவிட மிகவும் மலிவாகிவிட்டன. இதனால் பலர் இந்தச் செயல்முறையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்,” என மருத்துவர் பிங்கி கூறுகிறார்.
படக்குறிப்பு, மருத்துவர் விகாஸ் குப்தாவின் கூற்றுப்படி, செயற்கை மார்பகங்களுக்கான பரிந்துரை தோல் அளவு, வகை, பொருத்திக்கொள்ள விரும்பும் நபரின் உயரம், எடை மற்றும் பிற இயற்கை அமைப்பைப் பொறுத்தது
செயற்கை மார்பகங்கள் மூலம் மார்பக அளவை எவ்வளவு அதிகரிக்க முடியும்?
நடிகை ஷெர்லின் சோப்ரா தனது செயற்கை மார்பகங்களில் ஒன்றின் எடை 825 கிராம் என்று கூறியுள்ளார். ஆனால் பிபிசியிடம் பேசிய நிபுணர்கள், இந்தியாவில் 350 முதல் 400 மில்லிமீட்டர் அளவிலானவை மட்டுமே பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகின்றன என்று கூறுகின்றனர்.
“ஒரு நிபுணத்துவம் வாய்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர், இந்தச் செயல்முறையைச் செய்வதற்கு முன், உடலின் இயற்கையான அமைப்பைச் சோதிப்பார். அந்தப் பரிசோதனையின் அடிப்படையில் செயற்கை மார்பகத்தின் அளவு பரிந்துரை செய்யப்படுகிறது. இந்திய பெண்களின் உடல் அமைப்புக்கு 350 முதல் 400 மில்லிமீட்டருக்கு மேலான செயற்கை மார்பகங்கள் பரிந்துரை செய்யப்படுவதில்லை,” என மருத்துவர் விகாஸ் விளக்கமளித்தார்.
அவற்றுக்கான பரிந்துரை தோள்களின் அளவு, சரும வகை, நோயாளியின் உயரம், எடை மற்றும் பிற இயற்கையான அமைப்பைப் பொறுத்தது என்றும் மருத்துவர் விகாஸ் குப்தா விளக்கினார்.
மருத்துவர் பிங்கி பர்கலும் இதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் “இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத பல நபர்களும் இத்தகைய அழகுப் பராமரிப்புச் செயல்முறைகளைச் செய்கிறார்கள். இதனால் நிபுணர்களால் நிறுவப்பட்ட விதிகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை” என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
பட மூலாதாரம், SherlynChopra/IG
படக்குறிப்பு, நடிகை ஷெர்லின் சோப்ரா தனது செயற்கை மார்பகங்களில் ஒன்றின் எடை 825 கிராம் என்று கூறியுள்ளார்.
“எந்தவொரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவரும் ஒருவரது விருப்பத்தின் பேரில் எந்த அளவையும் செலுத்த மாட்டார்கள். அவர்கள் முதலில் தாங்களாகவே பரிசோதிப்பார்கள், பின்னர் அவர்களுக்கு எந்த அளவிலான செயற்கை மார்பகம் சரியாக இருக்கும் என்று ஆலோசனை வழங்குவார்கள்,” என பிங்கி கூறுகிறார்.
“ஆனால் அங்கீகரிக்கப்படாத மருத்துவர்கள் பணத்திற்காக எந்த அளவிலும் பொருத்துவதற்கு ஒப்புக்கொள்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கை மார்பகங்களை யார் பொருத்திக் கொள்கிறார்கள்?
நிபுணர்களின் கூற்றுப்படி, மார்பகக் குறைபாடு உள்ளவர்கள், தங்கள் மார்பக அளவால் திருப்தி அடையாதவர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரே இவற்றைப் பொருத்திக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.
“பலர் இதை ஓர் அழகுப் பராமரிப்புச் செயல்முறையாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் மார்பகங்கள் இயற்கையாக முழுமையாக வளராத பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,” என மருத்துவர் பிங்கி கூறுகிறார்.
ஆனால் “எந்தப் பெண்ணாக இருந்தாலும், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் மட்டுமே இந்தச் செயல்முறையைச் செய்ய நினைத்தால், ‘இது நிச்சயம் அவசியமா?’ என்ற கேள்வியை அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் பிங்கி.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இளைய தலைமுறையினர் தங்கள் இயற்கையான தோற்றத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று ஷெர்லின் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்
செயற்கை மார்பகம் பொருத்த எவ்வளவு செலவாகும்?
இதற்கான செலவு ரூ. 50,000 முதல் ரூ. 1,50,000 வரை இருக்கலாம் என்று மருத்துவர் பிங்கி கூறுகிறார். விலை அதன் அளவு மற்றும் தரத்தைப் பொறுத்தது.
இது தவிர, அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் கட்டணமும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது.
அதோடு, “இதைச் செய்து முடிக்க ஒரே ஒரு நாள் மட்டுமே ஆகும். ஒரு மாதத்திற்கு மருத்துவர் பரிந்துரைத்த உணவு முறையைப் பின்பற்ற வேண்டும்.
ஒருமுறை செலுத்தினால், அவை வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும். அவை தீங்கு விளைவிப்பதில்லை. அதேவேளையில் வாடிக்கையாளர் அவற்றை அகற்ற விரும்பினாலும் எளிதாக அகற்ற முடியும்,” என மருத்துவர் விகாஸ் கூறுகிறார்.
மற்ற எந்தவொரு அறுவை சிகிச்சையையும் போலவே இதிலும் தொற்று பரவலுக்கான ஆபத்து உள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் விகாஸ்.
“இது புற்றுநோயை ஏற்படுத்தலாம் அல்லது பெண்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல் வரலாம் என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. செயற்கை மார்பகங்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதில்லை. அதோடு குழந்தைக்குப் பாலூட்டுவதிலும் இவை எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்துவதில்லை,” என்று அவர் கூறுகிறார்.
ஷெர்லின் சோப்ரா யார்?
ஷெர்லின் சோப்ரா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார்.
அவர் ஹிந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களின் மூலம் அறியப்படுகிறார். 38 வயதான ஷெர்லின் தனது தொழில்முறை வாழ்க்கையை 2007ஆம் ஆண்டில் ‘ரெட் ஸ்வஸ்திக்’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தொடங்கினார்.
ஷெர்லின் சமூக ஊடகங்களில் தன்னை ஒரு நடிகை, சமூக ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் எல்எல்பி (சட்டப் படிப்பு) பட்டதாரி என்று விவரித்துக் கொள்கிறார்.