பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி இந்தி
-
1961 ஆம் ஆண்டு, ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது, பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்கு எதிராக தனது அரசியல் நடவடிக்கைகளை வேகப்படுத்தினார்.
அவர் ‘ஸ்வாதின் பங்களா பிப்லவி பரிஷத்’ என்ற அமைப்பை நிறுவினார்.
1962 ஆம் ஆண்டு ராணுவச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, டாக்காவில் உள்ள பால்டன் மைதானத்தில் ஒரு பெரிய பேரணி நடைபெற்றது, அங்கு வங்காளிகள் மீதான அயூப் ஆட்சியின் அணுகுமுறையை கிழக்கு பாகிஸ்தான் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.
1962 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அயூப்பை அதிகாரத்திலிருந்து அகற்ற சில துணிச்சலான நடவடிக்கைகள் தேவைப்படும் என்று ஷேக் முஜிபுர் உறுதியாக நம்பினார்.
அவர் தனது நெருங்கிய நண்பர் நாசரை டாக்காவில் உள்ள இந்திய தூதரக துணை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.
“நாசர் இந்தியாவின் உளவுத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். ஷேக் முஜிப் அகர்தலாவில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளைச் சந்திப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.
அச்சமயத்தில் பாதுகாப்பு அவ்வளவு வலுவாக இல்லை, எனவே இந்திய எல்லைக்குள் நுழைவதும் அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால் ஷேக் முஜிப் இந்தியாவுக்கு வர நினைத்த சமயத்தில், சீனா இந்தியாவைத் தாக்கியது. அதனால் அந்த நேரத்தில் அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது, ஆனால் அவர் இந்தியாவுக்கு வரும் எண்ணத்தை கைவிடவில்லை” என்று சையத் அன்வாருல் கரீம் தனது ‘ஷேக் முஜிப்: ட்ரையம்ப் அண்ட் ட்ராஜெடி’ (‘Sheikh Mujib: Triumph and Tragedy’) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், University Press Limited
திரிபுரா முதலமைச்சருடன் ஷேக் முஜிபுர் சந்திப்பு
இறுதியாக, ஜனவரி 27, 1963 அன்று, ஷேக் முஜிபுர் தனது சில நண்பர்களுடன் அகர்தலாவுக்குப் புறப்பட்டார்.
இந்த வருகை குறித்து அவர் தனது கட்சியினருக்கும், அதன் தலைவர் ஹுசைன் சுரவர்திக்கும் கூட தெரிவிக்கவில்லை.
அவர் இந்தப் பயணத்தின் போது ரயிலிலும், ஜீப்பிலும், நடந்தும் சென்றுள்ளார்.
“ஷேக் முஜிபுர் 1963 ஜனவரி 29 அன்று அகர்தலாவை அடைந்தார். அங்கு உமேஷ் லால் சின்ஹா அவரை தனது சகோதரர் சச்சிந்திர லால் சின்ஹாவை சந்திக்க அழைத்துச் சென்றார். பின்னர் முதலமைச்சர் சச்சிந்திர லால் அவரை தனது சகோதரியின் வீட்டில் தங்க வைத்தார்.
ஷேக் முஜிபுருடன் பேசிய பிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்திக்க முதலமைச்சர் சின்ஹா டெல்லி சென்றார். ஆனால் இந்த உரையாடல் குறித்து நேரு அதிக ஈடுபாட்டை வெளிப்படுத்தவில்லை.
எந்தவொரு ஜனநாயக இயக்கத்திற்கும் அரசியல் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் சின்ஹாவிடம் கூறினார். இதை விட நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று ஃபைஸ் அகமது தனது ‘அகர்தலா மேட்டர்: ஷேக் முஜிபுர் ஓ பங்களார் பித்ரோ’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான வேறொரு சதி
பட மூலாதாரம், Getty Images
1967 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் ரவீந்திரநாத் தாகூரின் இசை மற்றும் இலக்கியங்களை பாகிஸ்தான் அரசு தடை செய்தது.
கிழக்கு பாகிஸ்தானில் ஷேக் முஜிபுரின் புகழ் அதிகரித்து வருவதைக் கண்ட பாகிஸ்தானின் ராணுவ அரசாங்கம், அகர்தலா சதி வழக்கில் அவரைச் சிக்க வைத்தது.
ஆனால், இந்த முடிவுக்கும் ஜனவரி 1963 இல் ஷேக் முஜிபுரின் அகர்தலா பயணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இந்த சதித்திட்டம் பாகிஸ்தான் கடற்படையின் உயரதிகாரி மோஸாம் உசேன் உடன் தொடர்புடையது.
பாகிஸ்தான் ராணுவத்தில் வங்கதேச மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் மோஸாம் அதிருப்தி அடைந்தார்.
பின்னர் 1964ஆம் ஆண்டில், ஷேக் முஜிபுரைத் தொடர்பு கொண்டு, ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கான தனது திட்டம் குறித்து விவாதித்தார் மோஸாம்.
“ஷேக் முஜிபுர் மோஸாமின் திட்டத்தை நிராகரித்தார், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியை, வங்கதேச ராணுவ ஆட்சி மாற்றுவதை விரும்பவில்லை என்று கூறினார், ஆனால் மோஸாம் தனது திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பர்மாவின் கரேன் கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஆயுதங்களை வாங்கினார்” என்று சையத் அன்வாருல் கரீம் தனது ஷேக் முஜிபுரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அதன் பிறகு, மோஸாம் சிறிது பணத்தை சேமித்து, அதை தனது கடற்படை நண்பரான அமீர் ஹுசைன் மியானுக்குக் கொடுத்தார்.
ஆனால் அந்தப் பணத்தை அமீர் ஹுசைன் மோசடி செய்துவிட்டார். இந்தத் துரோகத்திற்காக ஆமீரை ஒழிக்க மோஸாம் திட்டமிட்டார்.
“அமீரைக் கொல்லும் பணிக்காக அவர் நியமித்த நபர் அமீரின் நண்பராக மாறிவிட்டார். அவர் அமீரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரிடம் கூறினார். பின்னர் 1967ம் ஆண்டில், அமீர் முழு திட்டத்தையும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-க்கு அம்பலப்படுத்தினார்” என்று கரீம் எழுதுகிறார்.
இரண்டாவது முறை கைதான ஷேக் முஜிபுர்
1965 போரில் ஐ.எஸ்.ஐ கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
“இந்தத் திட்டம் குறித்து ஐ.எஸ்.ஐ அறிந்ததும், அதை அம்பலப்படுத்துவதன் மூலம், இழந்த நம்பகத்தன்மையை மீண்டும் பெற முடியும் என அவர்கள் நினைத்தார்கள்” என்று பத்திரிகையாளர் சையத் பத்ருல் அஹ்சன் ஷேக் முஜிபுரின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார்.
சதித் திட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் டிசம்பர் 1967இல் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டபோது, ஷேக் முஜிபுர் தான் முழு சதித்திட்டத்திற்கும் மூளையாக செயல்பட்டார் என்று ஒப்புக்கொண்டனர்.
“ஜனவரி 1968ல், இந்தியா உதவியுடன் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து செல்ல சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் 28 வங்கதேச ராணுவத்தினரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஷேக் முஜிபுர் ஏற்கனவே சிறையில் இருந்தார். ஜனவரி 17-18 அன்று இரவு, அவரை எழுப்பி விடுவிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு டாக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என உயரதிகாரி ஆர்.பி. சிங் மற்றும் ஹிதேஷ் சிங் ஆகியோர் தங்களது ‘கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் வரை 1971 விடுதலைப் போரின் நினைவுகள்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்கள்.
பின்னர் ஷேக் முஜிபுர் 6 மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
குடும்ப உறுப்பினர்கள் உட்பட யாரையும் சந்திக்க அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. விசாரணை தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, அதாவது ஜூன் 18 அன்று, அவரது வழக்கறிஞர் அப்துஸ் சலாம் கானை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.
சாட்சியம் அளித்தவர் தனது கருத்தை திரும்பப்பெற்றார்
பட மூலாதாரம், Getty Images
ஜெனரல் யாஹ்யா கான் இந்த முழு சம்பவத்தையும் அதிபர் அயூப் கானுக்குத் தெரிவித்த போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஷேக் முஜிபுரின் பெயரைச் சேர்ப்பதற்கு அவர் ஆட்சேபனை தெரிவித்தார், ஆனால் யாஹ்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
ஷேக் முஜிபுரின் பெயர் சதிகாரர்களின் பட்டியலில் முதலிடத்தில் வைக்கப்பட்டது.
இந்த வழக்கிற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. ரஹ்மான் தலைமையில் ஒரு சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் உறுப்பினர்களில் இருவர் டாக்கா உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்தனர்.
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான மன்சூர் காதிர் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
“டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் முதல் செயலாளர் ஜி.என். ஓஜாவை, அவரது அலுவலகத்திலும், சிட்டகாங்கில் உள்ள அதிகாரி மோஸாமின் வீட்டிலும் சதிகாரர்கள் பலமுறை சந்தித்ததாக அரசு தரப்பு குற்றம் சாட்டியது.
ஆனால் விசாரணை தொடங்கியவுடன், பல சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களை மாற்றியதால் அரசு தரப்பு வழக்கு பலவீனமடையத் தொடங்கியது.
அது மட்டுமின்றி, ஷேக் முஜிபுருக்கு எதிராக சாட்சியளிக்க ராணுவ உளவுத்துறை அதிகாரிகளால் தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவரது வாக்குமூலம் ஒரு அதிகாரியுடைய கட்டளையின் கீழ் அளிக்கப்பட்டதாகவும் சாட்சி கூற வந்த ஒருவர் கூறினார்” என எஸ்.ஏ. கரீம் எழுதியுள்ளார்.
ஷேக் முஜிபுரின் புகழ் அதிகரிப்பு
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், அக்டோபர் 1968 முதல், மேற்கு பாகிஸ்தானில் அயூபிற்கு எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
பெஷாவரில் நடந்த ஒரு கூட்டத்தில் அவரைக் கொல்லவும் முயற்சி செய்யப்பட்டது.
“அகர்தலா சதி வழக்கை விளம்பரப்படுத்துவதன் மூலம், ஷேக் முஜிபுர் ரஹ்மானை அரசியல் ரீதியாக அவதூறு செய்வார்கள் என்று ராணுவ ஆட்சி நினைத்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்தது. ஒரே இரவில் அவர் வங்காள தேசியவாதத்தின் அடையாளமாக மாறினார். பிரிட்டனில் கிழக்கு பாகிஸ்தானிய குடியேறிகள் ஒரு நிதியை உருவாக்கி, ஷேக் முஜிபுர் ரஹ்மானைப் பாதுகாக்க வழக்கறிஞர் சர் தாமஸ் வில்லியம்ஸை டாக்காவிற்கு அனுப்பினர்” என்று உயரதிகாரி ஆர்.பி. சிங் மற்றும் ஹிதேஷ் சிங் எழுதியுள்ளனர்.
வில்லியம்ஸ் டாக்கா சென்ற போது, அவரை பாகிஸ்தான் காவல்துறை அதிகாரிகளும் உளவாளிகளும் பின்தொடர்ந்தனர்.
ஒருநாள் அவரது அறைக்குள் நுழைந்து அவரது உடைமைகள் மற்றும் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை சர்வதேச பத்திரிகைகளில் பெரும் கவனத்தைப் பெற்றது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று முழு உலகமும் உணர்ந்தது.
அதனைத் தொடர்ந்து, அப்பாவி மக்களைத் தண்டிக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் ராணுவ அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது.
விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த போது, ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு ஆதரவான பொது இயக்கம் தொடர்ந்து வளர்ந்தது.
முஜிப்பிற்கு ஆதரவாக களமிறங்கிய மௌலானா பசானி
அவாமி லீக்கின் அனைத்து உயர்மட்டத் தலைவர்களும் சிறையில் இருந்ததால், ஷேக்கிற்கு ஆதரவாக எழுந்த அனுதாப அலையை கட்சியால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
நாட்டில் மக்கள் இயக்கத்தை வழிநடத்த ஒரே ஒரு தலைவரால் மட்டுமே முடியும் என்பதை ஷேக் முஜிபுர் புரிந்து கொண்டார், அவர் தான் மௌலானா பசானி.
“அரசியல் எதிர்ப்பு இருந்த போதிலும், மௌலானா பசானி, ஷேக் முஜிபுர் ரஹ்மானை தனது மகனைப் போலவே நடத்தினார். ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஒரு பத்திரிகையாளர் மூலம் மௌலானா பசானியைத் தொடர்பு கொண்டார்.
பசானி, முஜிபுர் ரஹ்மானின் செய்தியைப் பெற்றவுடன், ‘ஷேக் விரும்பினால் நான் இந்த இயக்கத்தை வழிநடத்துவேன்’ என்று கூறினார்” என ஃபைஸ் அகமது குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மௌலானா பசானி தனது கிராமத்திலிருந்து டாக்காவிற்கு பேரணியைத் தொடங்கினார்.
டாக்காவில் உள்ள பால்டன் மைதானத்தில் நடைபெற்ற பேரணியில், அவர் அயூப் அரசாங்கத்தின் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார்.
ஜனவரி 1969 இல், கிழக்கு பாகிஸ்தான் முழுவதும் அகர்தலா சதி வழக்கைத் திரும்பப் பெறவும், ஷேக் முஜிபுரை விடுவிக்கவும் கோரி, மாணவர்கள் வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர்.
பாகிஸ்தான் அரசாங்கம் இறுதி விசாரணைக்கான தேதியாக 1969ம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதியை நிர்ணயித்தது.
வட்டமேசை மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அயூப்
பட மூலாதாரம், Getty Images
ஜனவரி 5, 1969 அன்று, சர்பத்லியா சத்ரா சங்கிராம் பரிஷத் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு, அரசாங்கத்திடம் அவர்களின் 11 கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.
இதில் ஷேக் முஜிபுரின் 6 அம்ச கோரிக்கைகளும் சேர்க்கப்பட்டன. மாணவர் சங்கத்தின் கோரிக்கைகள் அரசாங்கத்திற்கு எதிரான இயக்கத்தை மேலும் தூண்டின.
அதன் பிறகு ஜனவரி மாதம், ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் அஸ்கர் கான் கிழக்கு பாகிஸ்தானுக்கு பயணம் செய்தார்.
அவர் ஷேக் முஜிபுரின் மனைவி ஃபாஸிலதுன்னிசாவை சந்தித்தார், அதைத் தொடர்ந்து ஒரு அரசியல் பேரணியிலும் கலந்து கொண்டார்.
கிழக்கு பாகிஸ்தான் முழுவதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய பல சம்பவங்கள் நடந்தன, இதில் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், ஷேக்கின் கூட்டாளி கமல் ஹொசைன், அரசு வழக்கறிஞரும் அயூப் கானின் அரசியலமைப்பு ஆலோசகருமான மன்சூர் காதிரை சந்தித்து, பொது மக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மன்சூர் காதிர் அந்தச் செய்தியை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாக உறுதியளித்தார்.
1969-ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி, அயூப் கான் ஒரு வானொலி செய்தியில், பிப்ரவரி 17 அன்று ராவல்பிண்டியில் நடைபெறும் வட்டமேசை மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைப்பதாகக் கூறினார்.
ஷேக் முஜிபுர் விடுவிக்கப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என்று அவாமி லீக் அறிவித்தது.
தொடர் வேலைநிறுத்தங்கள் மற்றும் பேரணிகள்
பின்னர் பிப்ரவரி 14, 1969 அன்று நடந்த ஒரு சம்பவம் நிலைமையை மேலும் பதற்றமாக்கியது.
இந்த வழக்கில் தொடர்புடைய விமானப்படை அதிகாரி ஜாகூர்-உல்-ஹக், சிறையில் ஒரு பாகிஸ்தான் ஹவில்தாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்குப் பிறகு, கிழக்கு பாகிஸ்தான் முழுவதும் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள், பேரணிகள் மற்றும் கடையடைப்புகள் தொடங்கின.
அந்த போராட்டங்கள் நிறுத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
ஜஹூர்-உல்-ஹக்கின் இறுதி ஊர்வலத்தில் சுமார் பத்து லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
அந்த அனுதாப அலை ஒரு வெகுஜன இயக்கமாக மாறியது. இறுதியில் மக்கள் அகர்தலா வழக்கை திரும்பப் பெறவும், அதிபர் அயூப் கானின் ராஜினாமாவையும் கோரத் தொடங்கினர்.
ஜஹூர்-உல்-ஹக்கின் இறுதி ஊர்வலம் வன்முறையாக மாறியது. அகர்தலா வழக்குக்கு தலைமை தாங்கிய நீதிபதி எஸ்.ஏ. ரஹ்மானின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. நீதிபதி ரஹ்மான் எப்படியோ உயிர் பிழைத்துவிட்டார்.
பரோலுக்கு விண்ணப்பிக்க முஜிப் மறுப்பு
பட மூலாதாரம், Reuters
தான் ஒருங்கிணைத்த வட்டமேசை மாநாட்டின் வெற்றிக்காக, அவாமி லீக் எப்படியாவது அதில் பங்கேற்க வேண்டும் என்று அயூப் கான் விரும்பினார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாஜுதீன் அகமது தலைமையில், அவாமி லீக்கின் ஒரு குழு ராவல்பிண்டியை அடைந்தது.
அங்கு அவர் சட்டத்துறை அமைச்சர் எஸ்.எம். ஜாஃபரிடம் பேசினார்.
சட்டத் தடைகள் காரணமாக, ஷேக் முஜிபுரை பரோலில் மட்டுமே விடுவிக்க முடியும் என்று அயூப் அவர்களிடம் கூறினார்.
“அவாமி லீக் குழு லாகூர் மற்றும் கராச்சி வழியாக டாக்காவுக்குத் திரும்பியது. லாகூரில், விமானப்படை உயர் அதிகாரி அஸ்கர் கான் அவர்களைச் சந்தித்து அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
குழு உறுப்பினர்கள் டாக்காவுக்குத் திரும்பி வந்து ஷேக் முஜிபுரிடம் சட்ட அமைச்சரின் பரோல் திட்டத்தைப் பற்றித் தெரிவித்த போது, அவர் தனது மனைவி ஆலோசனையின் பேரில் அதை முற்றிலுமாக நிராகரித்தார்” என்று பிரபல தூதர் குலாம் வாஹீத் சவுத்ரி தனது ‘தி லாஸ்ட் டேஸ் ஆஃப் யுனைடெட் பாகிஸ்தான்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஏனென்றால், அவர் பரோலுக்கு விண்ணப்பித்தால், அவரது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படும் என்று அவரது மனைவி அவரிடம் கூறியிருந்தார்.
அது மட்டுமின்றி, நிபந்தனையற்ற விடுதலைக்கான தனது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினால், முஜிபுரை அயூப் கான் விடுதலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஷேக் முஜிபுர் விடுதலை
பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 22, 1969 அன்று, அயூப் கான் அகர்தலா சதி வழக்கை வாபஸ் பெற்றார்.
உடனடியாக ஷேக் முஜிபுர் மற்றும் பிறரை விடுவிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
“டாக்காவில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. கிழக்கு கட்டளைத் தளபதி ஜெனரல் முசாபருதீன், உயரதிகாரி ராவ் ஃபர்மான் அலியிடம் தனது தன்மண்டி இல்லத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஷேக் முஜிபுர் கேட்டுக் கொண்டார்.
முஜிபுர் தனது வீட்டை அடைந்தவுடன், அங்கு கொண்டாட்டங்கள் தொடங்கின. ராவ் ஃபர்மான் அலியும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்” என்று எஸ்.ஏ. கரீம் எழுதியுள்ளார்.
பிப்ரவரி 23, 1969 அன்று, மாணவர் தலைவர் துஃபைல் அகமது தலைமையில் ஷேக் முஜிபுர் ரஹ்மானை கௌரவிக்கும் வகையில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
அதே கூட்டத்தில், இனி ஷேக் முஜிபுர் ‘வங்க தேசத்தின் நண்பர்’ என்று அழைக்கப்படுவார் என்று துஃபைல் அகமது அறிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு