பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்திய மாணவர்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். தேசிய குடிமக்கள் கட்சி (என்சிபி) என பெயரிடப்பட்ட இந்த புதிய கட்சி குறித்த அறிவிப்பு, நாட்டின் அரசியலில் பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த கட்சியால் எந்த தொலைநோக்கு திட்டத்தையோ அல்லது செயல்திட்டத்தையோ முன்வைக்க முடியவில்லை என பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மறுபக்கம், தேர்தல் மூலம் அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி அதன் பின் நாட்டிற்கு புதிய அரசமைப்பு சட்டத்தை இயற்றுவது, இரண்டாவது குடியரசு குறித்த பேச்சு மற்றும் கட்சியின் “இன்குலாப் ஜிந்தாபாத்,” என்ற முழக்கம் போன்றவை அந்த கட்சி எதிர்காலத்தில் என்ன செய்ய விரும்புகிறது என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
தாங்கள் முன்வைத்துள்ள இலக்குகள், வங்கதேசத்தின் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் என்ற செய்தியை அளிப்பதாக கட்சியின் மூத்த இணை ஒருங்கிணைப்பாளர் ஆரிஃபுல் இஸ்லாம் ஆபித் பிபிசி வங்காள சேவையிடம் தெரிவித்தார்.
“வங்கதேசத்தின் அரசமைப்பு, சர்வாதிகாரத்தை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. பல அரசியல் கட்சிகளில் அனைத்து அதிகாரங்களும் ஒரு நபரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. நீங்கள் கவனித்துப் பார்த்தால், கடந்த பதினைந்து ஆண்டுகளில் உருவான இயக்கங்கள் அனைத்தும் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டவை. எனவே தற்போது உள்ள அரசியல் முறையை உடைத்து, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் செய்தியை அளித்துள்ளோம்,” என அவர் கூறினார்.
பாரம்பரிய அரசியலையும், மாற்றத்தையும் ஒருங்கிணைக்கும் நடுத்தர மக்களுக்கான கட்சியாக என்சிபி உருவாவதாக சில அரசியல் ஆய்வாளர்கள் நம்பினாலும், இதை செய்துகாட்டுவதற்கான தெளிவான திட்டத்தை முன்வைக்க அந்த கட்சி தவறிவிட்டது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
“இரண்டாவது குடியரசை அறிவித்திருப்பவர்கள் அதை தங்களது கொள்கை குறித்த அறிக்கையில் சேர்த்திருக்க வேண்டும்,” என பிஎன்பி கட்சியின் தேசிய நிலைக்குழு உறுப்பினர் சலாலுதின் அகமது டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
“அரசியல் நிர்ணய சபை மூலம் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க விரும்புகிறவர்கள் அதை எப்போது முடிகிறதோ அப்போது செய்யவேண்டும். ஆனால் ஜனநாயக நடைமுறையை நோக்கி நகருவதில் மக்கள் மேலும் தாமதத்தை சந்திக்காமல் இருக்க, நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.”
அதே நேரம், இரண்டாவது குடியரசுக்கான கோரிக்கையையும், அரசியல் நிர்ணய சபை மூலம் புதிய அரசியலமைப்பை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் நாடளுமன்றத் தேர்தலை தாமதப்படுத்தும் ஒரு செய்தியாகத்தான் பார்ப்பதாக வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பிஎன்பி உணர்த்தியுள்ளது.
புதிய கட்சி தனது நோக்கங்களையும், குறிக்கோள்களையும் தெரிவித்திருப்பதாக கூறும் அரசியல் ஆய்வாளர்கள் அது அவர்களது உரிமை என கூறுகின்றனர். இருப்பினும் இந்த இலக்குகளை அடைய அவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
என்சிபி தனது அறிவிப்பில் தெரிவித்தது என்ன?
டாக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் தொடக்க விழாவில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம் நிகழ்த்திய உரையில் இரண்டாவது குடியரசை உருவாக்கவேண்டும் என அடிக்கடி குறிப்பிடப்பட்டது.
2024ஆம் ஆண்டு நடந்த புரட்சி இரண்டாவது குடியரசை உருவாக்குவதற்கான போராட்டத்தை தொடங்கிவைத்திருப்பதாக கூறினார்.
“புதிய ஜனநாயக அரசமைப்பை எழுதுவதன் மூலம் அரசமைப்பு சர்வாதிகாரம் மீண்டும் உருவாக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் நாம் தடுக்கவேண்டும்.”
“நமது முதல் இலக்குகளில் ஒன்று, தேர்வு செய்யப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் மூலம் புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது. இது இரண்டாவது குடியரசை உருவாக்கும்,” என்றார் அவர்.
இரண்டாம் குடியரசு என்ற கருத்துரு முதலில் பிரெஞ்சு புரட்சியிலிருந்து தோன்றியது. ஒரு நாட்டின் பழைய நிர்வாக முறையில் பெரும் மாற்றங்களை கொண்டுவந்து புதிய ஆட்சிமுறையை உருவாக்குவது என்பதுதான் இதன் பொருள். இத்தகைய மாற்றங்கள் புரட்சி உள்ளிட்ட பல வழிகளில் ஏற்படலாம்.
கட்சியின் தொடக்கவிழாவின் போது கட்சி தலைவர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு முழக்கங்களில் “இன்குலாப், இன்குலாப்,இன்குலாப் ஜிந்தாபாத்,” என்ற முழக்கம் மக்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனால் தங்கள் கட்சி எந்த முழக்கத்தையும் இன்னமும் இறுதி செய்யவில்லை என்கிறார் ஆரிஃபுல் இஸ்லாம் ஆதீப்.
“மாணவர் இயக்கத்தின் போது ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்பது எதிர்ப்பின் மொழியாக பயன்படுத்தப்பட்டது. வலுவான சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் நின்றனர். இந்த முழக்கம் அங்கிருந்து வந்தது. நாங்கள் இன்னமும் எங்கள் கட்சியின் முழக்கம், அமைப்பு, திட்டம், மற்றும் கட்சியின் கொடி ஆகியவற்றை முடிவு செய்யவில்லை”என பிபிசி வங்காள சேவையிடம் தெரிவித்தார் ஆதீப்
“இன்குலாப் ஜிந்தாபாத் என்பது முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழக்கமாக இருந்தது. இது வங்கதேசத்திற்கு புதியது. அது பலரை காயப்படுத்தக்கூடும் என்றாலும் அது எதிர்மறையானது என நான் நினைக்கவில்லை. அது புரட்சி அல்லது மாற்றத்திற்கான முழக்கம்,” என்கிறார் அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் மஹ்பூப் உல்லா.
பட மூலாதாரம், Student movement against discrimination
புதிய அரசியல் கட்சியின் செய்தியை நிபுணர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
“தியாகிகளின் தியாகத்தின் மூலம் பெற்ற புதிய சுதந்திரம் ஒரு அரசை கவிழ்த்துவிட்டு மற்றொரு அரசை நிறுவுவதற்கானது அல்ல” என்றார் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம்
“நாட்டில் உருவான பாசிச அமைப்பை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் உரிமை அடிப்படையிலான நாட்டை உருவாக்கும் ஒரு புதிய அரசியல் முறையை நிறுவவேண்டும் என்ற விருப்பத்தினால்தான் மக்கள் இதை செய்துள்ளனர்.”
பிஎன்பி உட்பட வங்கதேசத்தில் சில அரசியல் கட்சிகள் விரைவில் தேர்தல் நடத்தவேண்டும் என முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு புதிய அரசியல் கட்சியின் தலைவர்கள் பதிலளித்துள்ளதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அதனால்தான் அந்த கட்சி, ஒரு அரசை கவிழ்த்துவிட்டு மற்றொரு அரசை நிறுவுவதற்காக புதிய சுதந்திரத்தை அடையவில்லை என கூறியுள்ளது.
“இரண்டாவது குடியரசு என்பது பொதுவாக பழைய அரசிற்கு பதிலாக புதிய அரசை நிறுவுவதுதான். ஆனால் வங்கதேசத்தில் பிஎன்பி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லாமல் இது சாத்தியமில்லை.” என அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான மொஹியுதின் அகமது நம்புகிறார்.
“அரசியல் நிர்ணய சபை என்றால் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் எனப் பொருள். இதன் பொருள் அடுத்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவார்கள். அந்த அரசியல் நிர்ணய சபை மீண்டும் நாடாளுமன்றமாக செயல்படும். ஆனால் இதற்கு தேவையான ஒற்றுமை அரசியல் கட்சிகள் மத்தியில் வரும் சாத்தியக்கூறு இருப்பதற்கான வாய்ப்பு தற்போது இருப்பதாக நான் நினைக்கவில்லை.”
பட மூலாதாரம், Getty Images
நாட்டின் முக்கிய கட்சியான பிஎன்பி புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு எதிராக இருப்பதுடன் தேவையான மாற்றங்களை நாடாளுமன்ற விவாதங்களின் மூலம் அரசமைப்பு திருத்தங்களாக கொண்டு வரலாம் என கருதுகிறது. புதிய அரசமைப்பு முன்பே விவாதிக்கப்பட்ட போது பிஎன்பி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
“தற்போதைய அரசமைப்பு ஜனநாயகத்திற்கு பொருத்தமானதாக இல்லை என்பது உண்மைதான். இது போன்ற சூழ்நிலையில், அதில் பெரும் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என சொல்லலாம்,” என பிபிசி வங்காள சேவையிடம் கூறினார் பேராசிரியர் மஹபூப் உல்லா .
“ஆனால் விரைவில் தேர்தலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் வேண்டும் என விரும்புவோருக்கு இது ஒரு நெருக்கடியாக இருக்கிறது. இது ஒரு அரசியல் சமரசம் என்பதால் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயலாற்றவேண்டும்.”
இதைத் தவிர, என்சிபியால் தனது கருத்துக்களையும், தன் நிலைப்பாட்டையும் விளக்கமுடியவில்லை என பலரும் நம்புகின்றனர். மாறாக அவாமி லீக் கட்சியின் கொள்கைக்கு எதிராக இந்த புதிய கட்சியின் கொள்கை இருப்பது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம் உள்ளிட்ட அனைவரின் பேச்சிலும் தெளிவாக தெரிகிறது.
அவருடைய கருத்துகள் தனது சொந்த கட்சி எப்படி முன்னேறும் என்பதை போதிய அழுத்தத்துடன் சொல்லவில்லை.
எனவே, அவாமி லீக் மற்றும் இந்தியா எதிர்ப்பு போன்றவற்றில் பிஎன்பி மற்றும் ஜமாத் உள்ளிட்டவற்றின் நிலைப்பாடு என்னவோ அதே நிலைப்பாட்டில் தான் தங்கள் நிலைப்பாடும் இருக்கும் என்ற செய்தியை புதிய கட்சி உணர்த்துவதாக சிலர் நம்புகின்றனர்.
‘உண்மையான அரசியல் குறித்து தெளிவு இல்லை’
இந்தக் கட்சியின் அரசியல் மற்றும் பொருளாதார திட்டம் இறுதி செய்யப்பட்ட பின்னர்தான் இதன் தனித்தன்மையும், நாட்டு மக்களுக்கான அதன் செய்தியும் தெளிவாகும் என சிலர் நம்புகின்றனர்.
“அவாமி லீக் கட்சிக்கு எதிரான அவரது நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. ஆனால் அவர் புதிதாக என்ன செய்யவிருக்கிறார் என்பதை அவரால் கூற முடியவில்லை.”என்கிறார் ஜனநாயக உரிமை கமிட்டியின் உறுப்பினரான பேராசிரியர் அனு முகமது
அவரைப் பொறுத்தவரை, புதிய வங்கதேசத்திற்கு இந்த கட்சி என்ன செய்ய விரும்புகிறது, பொருளாதாரம், நாட்டின் கொள்கை, மத ஒற்றுமை போன்றவற்றில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக இல்லை.
புதிய கட்சியின் சில உறுப்பினர்கள் 1971ஆம் ஆண்டு அரசமைப்பு சட்டத்தை மாற்ற இரண்டாவது குடியரசு அல்லது 2024 அரசியல் நிர்ணய சபை தேர்தல் மூலம் முயற்சி செய்யலாம் என பலரும் நம்புகின்றனர்.
ஆனால் 1971ஐ அடிப்படையாக வைத்துக்கொண்டு, 2024 ஆம் ஆண்டின் உணர்வுகளை பிரதிபலிக்கும் புதிய வங்கதேசத்தை உருவாக்க விரும்புவதாக கட்சியின் தலைவர்கள் முன்னதாக கூறியிருந்தனர்.
“அவாமி லீக் கட்சியை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் அவர் அழைத்துள்ளார். இது ஒருங்கிணைக்கும் அரசியலுக்கான செய்தியாகச்த் தெரிகிறது. ஆனால் அவர்களில் சிலருக்கு ஜனநாயகம் வேண்டும், சிலருக்கு சமவுடைமை வேண்டும். இந்த விஷயத்தில் அவர்களது நிலைப்பாடு தெளிவாக இருப்பதை என்னால் காணமுடியவில்லை.” என்கிறார் எழுத்தாளரும் ஆய்வாளருமான மொஹியுதின் அகமது
அந்த கட்சி மேலும் முன்னேற எவ்வளவு விரும்புகிறதோ அவ்வளவு தூரம் அது அரசியல் சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியதிருக்கும் என்கிறார் பேராசிரியர் மெகபூர் உல்லா.
சில விஷயங்களின் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதன் மூலம் தங்களை ஒரு முற்போக்கான கட்சி என்ற செய்தியை அவர்கள் தந்திருப்பதாக மற்றொரு ஆய்வாளாரும் ‘நயா திகன்தரா’வின் செயல் ஆசிரியருமான சலாவுதீன் பாபர் சொல்கிறார்.
“அவர்கள் இதை உண்மையில் நம்பினால் அது அவர்களது எதிர்கால செயல்பாடுகளில் தெரியும். இருப்பினும் முதல் நாளில் ஒரு தெளிவான கருத்தும், செயல் திட்டமும் வெளியிட்டிருந்தால், அந்த கட்சி உண்மையில் எப்படி தனது இலக்குகளை அடைய விரும்புகிறது என்ற தெளிவான செய்தியை மக்களிடம் கொண்டு சென்றிருக்கும்,” என பிபிசி வங்காள சேவையிடம் அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, ”புதிய கட்சி தற்போது ஆட்சிக்கு வரும் நிலையில் இல்லை, ஆனால் அந்த கட்சி ஒரு பெரிய அரசியல் சக்தியாக மாறுவதற்கான திறன் இருப்பதாக தோன்றுகிறது”
“ஆனால் இன்னமும் நிறைய புகை மறைத்துள்ளது, எதிர்காலத்தில் அவர்களை அதை தெளிவாக்கவேண்டும்,” என்றார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு