0
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைத் திருப்பி ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரியுள்ளது.
78 வயதுடைய ஹசீனாவுக்கு, பங்களாதேஷ் சிறப்பு நீதிமன்றம் நேற்று (17) மரண தண்டனை விதித்தது.
கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களை வன்முறையால் ஒடுக்கும்படி ஹசீனா உத்தரவிட்டிருந்தார் என்று கூறப்பட்டது. அதில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
பங்களாதேஷின் முன்னாள் உள்துறை அமைச்சர் அசதுஸ்ஸமான் கான் கமலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் இந்தியாவில் தலைமறைவாக இருப்பதாகப் பங்களாதேஷ் கூறுகிறது.
இருவரையும் உடனடியாகப் பங்களாதேஷ் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அது இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. அது இந்தியாவின் கடமை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷ் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்தது
குறித்த இருவருக்கும் இந்தியா அடைக்கலம் கொடுத்தால் அது இரு நாட்டு நட்பைப் பாதிக்கலாம் என்றும் அது நீதிக்கு அவமானம் என்றும் பங்களாதேஷ் எச்சரித்துள்ளது.
இதேவேளை, பங்களாதேஷ் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை ஹசீனா பேகம் நிராகரித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், பங்களாதேஷில் விரைவில் பொதுத் தேர்தல் வருகிறது. அதில் போட்டியிட ஹசீனா பேகமின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.