பட மூலாதாரம், Getty Images
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார்.
இந்த ஓராண்டில் வங்கதேசத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பது இவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவையும் சிக்கலாக்கியிருக்கிறது.
நவம்பர் 17-ஆம் தேதி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இந்த முடிவுக்கு முன் பிபிசிக்கு கொடுத்த நேர்காணலில் பேசியிருந்த ஷேக் ஹசீனா, “இந்த விசாரணை ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒரு திசையில் தான் செல்கிறது என்று நான் நினைக்கிறேன். இது, என் அரசியல் எதிரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு ‘கங்காரு நீதிமன்றம்’ (மக்களைத் தவறாகத் தண்டிக்கும் சட்டவிரோத நீதிமன்றத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாடல்) நடத்தும் நாடகம்” என்றார்.
“எனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். ஆயுதமற்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த நானோ வேறு எந்த அரசியல் தலைவருமோ உத்தரவு வழங்கவில்லை” என்றும் அவர் கூறினார்.
ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தண்டனை, இந்தியாவுக்கு கடுமையான அரசியல் மற்றும் ராஜ்ஜிய ரீதியலான சவால்களை உருவாக்கக் கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, தற்போது இந்திய தலைநகர் டெல்லியில் வாழ்ந்து வருகிறார். அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் முறைப்படி கேட்டிருக்கிறது.
அவரை வங்கதேசத்துக்கு ஒப்படைக்கும் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும், அவரை ஒப்புடைக்குமாறு இந்தியா கட்டாயப்படுத்தப்படும் ஒரு சூழ்நிலை எழாது என்றும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
அதேசமயம், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வழக்கப்பட்டுள்ள தீர்ப்பு, சட்டம், அரசியல், பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்கள் சார்ந்து இந்தியாவுக்கு பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
கேள்விக்குள்ளாகும் வங்கதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு
வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICT – ஐசிடி) தீர்ப்பு எந்த அளவுக்கு செல்லுபடியாகும் என்று சட்டரீதியான கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்த தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஐநா மனித உரிமைகள் அலுவலகமும், மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் கீழ் நடைபெற்ற இந்த விசாரணை சர்வதேச நீதித்துறையின் தரநிலைகளுக்கு ஒத்துப்போகவில்லை என்று கூறியுள்ளன.
வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு எதிராக வழங்கிய தீர்ப்புகள் கடந்த ஆண்டின் போராட்டங்களின்போது நடைபெற்ற அடக்குமுறைகள் மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக முக்கிய தருணம் என்று ஒரு அறிக்கையில் கூறியிருந்தார் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் ரவீனா ஷம்தசானி.
அதேசமயம் இந்த மரண தண்டனையை ஐநா சபை எதிர்த்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க், தான் எந்தச் சூழலிலும் மரண தண்டனைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்செயலாளரும், “எந்தச் சூழலிலும் மரண தண்டனைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

அதேசமயம், வங்கதேசம் உண்மை, நீதி உள்ளடங்கிய முழுமையான செயல்முறையுடன் முன்செல்லும் என்று தான் நம்புவதாக வோல்கர் டர்க் கூறினார். நல்லிணக்கமே முன்னோக்கி செல்லும் வழி என்றும் அவர் கூறினார்.
ஷேக் ஹசீனா ஆட்சியில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. வங்கதேச விடுதலைப் போரின்போது நடந்த குற்றங்களுக்குக் காரணமானவர்களை தண்டிப்பதே இதன் நோக்கமாக இருந்தது.
தற்போது ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அதே சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்தான் வங்கதேச இடைக்கால அரசு வழக்கு பதிவு செய்திருக்கிறது.
சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்’, இந்த விசாரணை ‘நியாயமானதும் அல்ல, நெறியானதும் அல்ல’ என்று கூறியுள்ளது.
இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாகக் கூறி, இந்தியா ஷேக் ஹசீனாவை ஒப்படைப்பதற்கு மறுப்பு தெரிவிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச விவகார நிபுணர் டாக்டர் சஞ்சய் பாரத்வாஜ், “இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக இருந்தால், ஷேக் ஹசீனாவை ஒப்படைப்பதில்லை என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது” என்று கூறினார்.
இந்தியாவும் வங்கதேசமும் 2013-சூம் ஆண்டு நாடு கடத்தல் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இப்போது ஷேக் ஹசீனா விவகாரத்தில் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் வங்கதேசக்கும் இடையே ராஜ்ஜிய ரீதியிலான பிரச்னையின் மையமாக மாறக்கூடும்.
ஷேக் ஹசீனாவையும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸமான் கான் கமாலையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் வங்கதேசம் முறைப்படி கேட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின்படி இது இந்தியாவின் கடமை என்று வங்கதேசம் வாதிடுகிறது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தில் நாடு கடத்தல் கோரிக்கையை நிராகரிப்பதை அனுமதிக்கும் ஒரு முக்கிய வரையறையும் உள்ளது. ஒப்பந்தத்தின் 6(1) பிரிவின் கீழ், குற்றச்சாட்டுகள் அரசியல் தன்மை கொண்டதாக இருந்தால் நாடு கடத்தலை மறுக்கலாம்.
ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிட்யூட்டின் ஆய்வாளர் மற்றும் சர்வதேச விவகார நிபுணரான டாக்டர் ரிஷி குப்தா, “இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை எனக் கூறி இந்தியா ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க மறுக்கலாம். இந்த விதி இவ்விரு நாடுகளுக்கிடையேயும் உள்ள நாடு கடத்தல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுதான்” என்று கூறினார்.
ஆனால், இதற்கும் சில வரம்புகள் உள்ளன. ஒப்பந்தத்தின் 6(2) பிரிவு, கொலை, பயங்கரவாதம், கடத்தல் போன்ற தீவிர குற்றங்களை அரசியல் குற்றங்களின் பிரிவிலிருந்து விலக்குகிறது.
ஆனால், ஒப்பந்தத்தின் 8(3) பிரிவின் கீழும் இந்தியா நாடு கடத்தலை மறுக்க முடியும். இந்த பிரிவின்படி, “கோரிக்கை நல்ல நம்பிக்கையுடன் செய்யப்படாவிட்டால் அல்லது நீதியின் நலன்களுக்கு ஒவ்வாததாக இருந்தால்” நாடு கடத்தலை மறுக்கலாம்.
ஷேக் ஹசீனா மீதான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டதாக ஆய்வாளர்க்ள் நம்புகிறார்கள். 2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்னர் ஷேக் ஹசீனா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இதைக் கருத்தில் கொண்டுதான் அவருக்கு எதிரான விசாரணை பார்க்கப்படும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்தியா என்னபதிலளித்தது?
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் அதிகாரபூர்வமாக பதிலளிக்கவில்லை. தீர்ப்பை கவனத்தில் கொண்டதாக மட்டுமே இந்தியா தெரிவித்துள்ளது.
“முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது” என்று மட்டுமே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“அண்டை நாடான இந்தியா, வங்கதேச மக்களின் நலன்களைக் காப்பதில் உறுதியாக உள்ளது. அமைதி, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மை ஆகியவை இதில் அடங்கும். நாங்கள் எப்போதும் அனைத்து தரப்பினருடனும் நேர்மறையாக செயல்படுவோம்” என்றும் இந்தியா கூறியிருக்கிறது.
ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையை இந்தியா நிராகரிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
டாக்டர் சஞ்சய் பாரத்வாஜ், “இந்த விஷயத்தில் இந்தியா சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்ளவில்லை. ஏனெனில் 2013-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட நாடு கடத்தல் ஒப்பந்தம் தெளிவாகவே வழக்கின் சட்டபூர்வத்தன்மையை (legality) ஆய்வு செய்யப்படும் என்று குறிப்பிடுகிறது. வழக்கு அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக இருந்தால், இந்தியா அதன் சட்டபூர்வத்தன்மையை நிச்சயமாக ஆய்வு செய்யும்” என்று கூறினார்.
“முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக உள்ளார்; அரசியலமைப்பு சாசனத்தின்படி அவருக்கு அதிகாரப்பூர்வ பொறுப்பு இல்லை. இந்தியா இந்த வழக்கை நிச்சயமாக பரிசீலிக்கும். இந்த குற்றச்சாட்டுகள் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் ஷேக் ஹசினா அரசின் தலைவராக இருந்தார்; அரசின் தலைவர்கள் இத்தகைய குற்றங்களில் நேரடியாக ஈடுபடுவதில்லை. எனவே, இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டதாகவே இந்தியா பார்க்கும். முடிவெடுப்பதற்கு முன் இந்தியா வழக்கை முழுமையாக மதிப்பீடு செய்து, நெறியான, நேர்மையான மதிப்பாய்வையும் மேற்கொள்ளும்” என்றும் அவர் கூறினார்.
டாக்டர் ரிஷி குப்தாவும் இதே கருத்தைத்தான் முன்வைக்கிறார். “இந்த முடிவு இந்தியாவை விட வங்கதேசத்தின் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தும். ஏனெனில், நாடு கடத்தல் குறித்து இந்தியாவுக்கென்று தனி அணுகுமுறை உள்ளது. இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டிருந்தால், அவர்கள் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் சட்டபூர்வத்தன்மை மீதும் கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன. “முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு எந்த அரசியலமைப்பு சாசன அதிகாரமும் இல்லை” என்று குறிப்பிடுகிறார் டாக்டர் சஞ்சய் பாரத்வாஜ்.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதும் ஒரு பிரச்னையாக மாறலாம். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மற்றும் ஒரு வகையில் இந்தியாவும் மரண தண்டனையை எதிர்க்கின்றன.
இப்படியான சூழலில், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை நாடு கடத்தினால், அது சர்வதேச அரங்கில் இந்தியா மீதும் விமர்சனங்களை ஏற்படுத்தும்.
வங்கதேசம் சார்ந்த இந்தியாவின் கவலைகள் காரணமாக, ஷேக் ஹசீனா விஷயத்தில் இந்தியா ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இது இந்தியாவுக்கு ஒரு இக்கட்டான நிலைமை. ஏனெனில் வங்கதேசத்தின் நாடு கடத்தல் கோரிக்கை வலுப்பெற்றால், சட்டரீதியான மற்றும் மனிதாபிமான ரீதியான கோணங்களில் இந்தியா மிகவும் சிந்தித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டி வரும்.
சவாலை எதிர்கொள்ளும் இந்தியா
வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பும், ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என்ற அந்நாட்டின் கோரிக்கையும், ஏற்கனவே பதற்றமாக உள்ள இந்தியா–வங்கதேச உறவுகளை மேலும் சிக்கலாக்கவோ அல்லது மோசமடையச் செய்யவோ வாய்ப்புள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பதவியிலிருந்து நீக்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்றதிலிருந்து, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு பதற்ற நிலையை எட்டியுள்ளது. வங்கதேச அரசு, ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா தஞ்சம் வழங்கியதைக் கண்டித்தது. அதே நேரத்தில், வங்கதேசத்தில் நடந்த வன்முறைகள் குறித்து இந்தியா கவலை வெளியிட்டதுடன், மத சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியது.
இந்தியா வங்கதேசத்துடன் நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவின் மூலோபாய (strategic) மற்றும் பாதுகாப்பு நலன்கள் வங்கதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. புதிய வங்கதேச நிர்வாகத்தையும் இந்தியா சமாதானப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
பட மூலாதாரம், AFP via Getty Images
டாக்டர் சஞ்சய் பரத்வாஜ், “கடந்த ஒன்றரை ஆண்டாக இந்தியா மற்றும் வங்கதேசம் நம்பிக்கையான பரஸ்பர உறவில் உள்ளன என்று நான் நம்புகிறேன். இந்த நிலைமை மேலும் மோசமடையாது. ஏனெனில் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் சிக்கலான பரஸ்பர சார்பு உள்ளது. எந்த நாடும் மற்றொன்றை புறக்கணிக்க முடியாது. இரண்டு நாடுகளுக்கிடையேயான நிலைமை தற்போதுள்ளபடி நீடிக்கும். அரசியல் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னேறும்” என்று கூறினார்.
ஆனால், சமீபத்தில் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் வங்கதேசம் நெருக்கமாகியிருக்கிறது. இந்த சூழல் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். இருந்தாலும் இந்தியாவால் இந்த சூழலை சமாளிக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
இதுபற்றிப் பேசிய டாக்டர் பரத்வாஜ், “வங்கதேசத்துடனான உறவை இந்தியா மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கையாள்கிறது. ஷேக் ஹசீனா அதிகாரத்தில் இருந்தபோது இந்தியா வங்கதேசத்துடன் நெருங்கிய உறவுக்கு முன்னுரிமை தந்தது. ஆனால், இனி அப்படி இருக்காது. வங்கதேச அரசின் தலைவர் சீனா சென்று, ‘இந்தியாவின் வடகிழக்குப் பகுதி வங்காளதேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. அங்கு சீனா வியாபாரம் செய்யலாம்’ என்றும் கூறி ராஜதந்திர ரீதியில் அழுத்தம் கொடுக்க நினைக்கலாம். ஆனால், இவ்வாறு பிராந்திய சக்திகளை கொண்டு வருவதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில், இந்தியாவுக்கு வங்கதேசம் எவ்வளவு தேவையோ, அதே அளவுக்கு வங்கதேசத்துக்கும் இந்தியா தேவை” என்று கூறினார்.
வங்கதேசத்தில் இப்போது ஒரு புதிய தலைமை இருப்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும் என்றும், இந்தியா அதை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
“புதிய பங்குதாரர்களுடன் ஒரு புதிய வங்கதேசம் உருவாகி வருகிறது. எனவே, இந்தியா வங்கதேசத்துடன் நேர்மறையான மற்றும் பயனுள்ள உறவைப் பேண வேண்டும். கடந்த 50 ஆண்டுகால வரலாறு இனி அதிகம் பொருள்படுத்தப்படப் போவதில்லை என்பதை இந்தியா உணர வேண்டும். புதிய அரசியல் கட்சிகளுடனும் இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதும் மிக முக்கியமானது.” என்று டாக்டர் ரிஷி குப்தா கூறினார்.
‘இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் வங்கதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா வங்கதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்’ என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
“வங்கக் கடல் வரையிலான சீன கடற்படையின் விரிவாக்கம் இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியிலான சிக்கல். அதனால் வங்கதேசத்துடனான ஒத்துழைப்பை இந்தியா அதிகரிக்க வேண்டும்” என்று டாக்டர் ரிஷி குப்தா கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு