பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுப்ஜோதி கோஷ்
- பதவி, பிபிசி வங்க மொழி சேவை
-
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விமானம் டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, இது அவரது பயணத்தில் ஒரு ‘இடை நிறுத்தம்’, அதாவது அதிகபட்சம் ஆறு முதல் ஏழு மணி நேரம் மட்டுமே இங்கே தங்குவார் என்று இந்தியா முதலில் எண்ணியது.
ஆனால், விரைவிலேயே இந்தியாவின் இந்த தவறான கணிப்பு குறித்து தெளிவு கிடைத்தது.
ஏழு மாதத்துக்கு மேலாக அவர் இன்னும் இந்தியாவில் ஒரு அரசு விருந்தினராகவே தங்கியுள்ளார்.
பெரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் இங்கு இவ்வளவு காலம் தங்கியிருந்தாலும், ஷேக் ஹசீனாவின் விவகாரத்தில் இந்தியா என்ன செய்ய விரும்புகிறது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.
ஷேக் ஹசீனா அரசு விருந்தினராக இந்தியாவில் இருந்தாலும், இந்தியாவில் அவருக்கு இன்னும் அரசியல் ரீதியான தஞ்சம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷேக் ஹசீனா தனது கட்சித் தலைவர்களிடமும், தொண்டர்களிடமும் சமூக ஊடகங்கள் மூலம் உரையாற்ற அனுமதிக்கப்படுவது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில், கடந்த மாதத்திலிருந்து இந்தியா அவரது கருத்துக்களில் இருந்து விலகியே இருக்கிறது.
மேலும், ஷேக் ஹசீனா என்ன கூறினாலும், அது அவரது தனிப்பட்ட கருத்துதான் என்றும், அவரது கருத்துக்கள் இந்தியாவின் நிலைப்பாட்டுடன் தொடர்பு கொண்டவை அல்ல என்றும் இந்தியா கூறியுள்ளது.
மறுபுறம், வெளியுறவுத்துறை அமைச்சகமும், அதன் அமைச்சர் ஜெய்சங்கரும், இந்தியா வங்கதேசத்துடன் சிறந்த உறவுகளை பேண விரும்புவதாக பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் சில ‘தயக்கங்களும்’ உள்ளன.
ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு வங்கதேச அரசாங்கம் சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இந்தியா இதுவரை அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
தனது ஆதரவாளர்களை வங்கதேசத்துக்குத் திரும்புமாறு ஷேக் ஹசீனாவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், வங்கதேசத்தில் அவரின் அரசியல் மறுவாழ்வுக்கு இந்தியா உதவும் என்பதற்கான எந்த அறிகுறியையும் இந்தியா இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் ஷேக் ஹசீனா குறித்து இந்தியா என்ன நினைக்கிறது அல்லது திட்டமிடுகிறது?
அதாவது, ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா எது வரை ஆதரவளிக்க முடியும்?
பட மூலாதாரம், Getty Images
‘வலுக்கட்டாயமாக எங்கும் அனுப்பப்பட மாட்டார்’
வங்கதேசத்துக்கான முன்னாள் இந்தியத் தூதர் பினாக் ரஞ்சன் சக்கிரவர்த்தி, இந்தியா தனது நீண்டகால நண்பர் ஷேக் ஹசீனாவை எந்த சூழ்நிலையிலும் எந்த ஆபத்திலும் சிக்க வைக்காது என்று உறுதியாக நம்புகிறார்.
“‘ஹசீனாவின் எதிர்காலம் என்ன?’ என்று நீங்கள் கேட்டால், அவர் எங்கேயும் செல்ல மாட்டார் என்பதுதான் என் நம்பிக்கை,” என்று பினாக் ரஞ்சன் பிபிசி வங்காள சேவையிடம் தெரிவித்தார்.
மேலும், “அவரை வேறு இடத்துக்கு அனுப்புவதில் சிக்கல்கள் இருக்கலாம். அவர் இந்தியாவில் இருக்கிறார், இங்கேயே இருப்பார். அவர் இதற்கு முன்பும் இங்கு இருந்திருக்கிறார். ஹசீனா 1975 முதல் 1981 வரை இங்கு இருந்தார்” என்றார்.
எந்தவொரு வெளிநாட்டு அரசியல்வாதியும் எந்தவொரு காரணத்துக்காகவும் இந்தியாவுக்கு வந்தால், அவரை வலுக்கட்டாயமாக தனது நாட்டுக்கு திருப்பி அனுப்புவது இந்தியாவின் கொள்கையாக இருந்ததில்லை என்பதை அவர் நினைவுபடுத்துகிறார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் தூதர் பினாக் ரஞ்சன், “எந்தவொரு அரசியல்வாதியையும் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புவது இந்தியாவின் கொள்கையாக இருந்ததில்லை. தலாய் லாமா கூட இன்னும் இந்தியாவில் இருக்கிறார்” என்றும் கூறினார்.
“இங்கு அடைக்கலம் தேடி வருபவர்களின் விஷயத்தில் ஒரு கலாசார அல்லது கொள்கைப் பிரச்னை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்தியா, அவர்களை வேறு எங்காவது வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பாது. ஷேக் ஹசீனாவின் விஷயத்திலும் இதுதான் நிலைமை என்று நான் நினைக்கிறேன்.”
நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள, ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கைக்கு எந்தவொரு நடைமுறை சாத்தியமும் இல்லை என்று முன்னாள் தூதர் சக்கிரவர்த்தி கருதுகிறார்.
பினாக் ரஞ்சன் சக்கிரவர்த்தியின் கூற்றுப்படி, “இந்த வழக்கில் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாகத் தோன்றினால், அத்தகைய கோரிக்கையை நிராகரிக்க, இரு நாடுகளுக்கிடையேயான ‘ஒப்படைப்பு ஒப்பந்தத்திலேயே’ ஒரு விதி உள்ளது, மேலும் அந்த விதியை நாடுவதன் மூலம் இந்தியா வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரிக்க முடியும்.”
மோதி மற்றும் தோவலுடன் மட்டுமே நிகழ்ந்துள்ள சந்திப்பு
ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஜெத்தின் அலுவலகமும் டெல்லியில்தான் உள்ளது. அவர் உலக சுகாதார அமைப்பில் (WHO) தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
தாயும் மகளும் எப்போது விரும்பினாலும், தவறாமல் சந்தித்துக் கொள்கிறார்கள்.
ஆனால், அவர்கள் ஒரே வீட்டில் வாழ்வது சாத்தியமில்லை. இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதும் கடினம் அல்ல.
சைமா வாஜெத், ஐ.நா சபையில் ஒரு முக்கியப் பதவி வகிக்கிறார். மறுபுறம், இந்தியாவின் அரசியல் முடிவின் காரணமாக ஷேக் ஹசீனா இங்கு விருந்தினராக தங்கியுள்ளார்.
இந்தியா தனது அரசியல் விருந்தினரை ஐ.நா. பிரதிநிதியுடன் சேர்த்து தனது நாட்டில் வைத்திருக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல.
இருப்பினும், டெல்லியில் உள்ள மூத்த ராஜ்ஜீய பத்திரிகையாளர் நயனிமா பாசு, இந்தியாவின் உயர்நிலை அரசியல் தலைவர்கள் அவ்வப்போது ஷேக் ஹசீனாவை சந்திப்பார்கள் என்றார்.
“இந்த ஏழு மாதங்களில் ஷேக் ஹசீனா சமூக ஊடகங்களில் உரையாற்ற பலமுறை அனுமதிக்கப்பட்டிருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அவர் இங்கே அமைதியாக அமர்ந்திருக்கிறார் என்று அர்த்தமில்லை” என நயனிமா பிபிசி வங்காள சேவையிடம் கூறுகிறார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால், அரசாங்கம் ஷேக் ஹசீனாவை சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அனுமதித்திருப்பதைக் பார்க்கிறோம். அது எக்ஸ் வலைதளமாக இருக்கட்டும் அல்லது ஃபேஸ்புக் ஆகட்டும்.
இவற்றின் மூலம், அவர் வங்கதேச குடிமக்களிடையே, குறிப்பாக அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களிடம் உரையாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினாலும், ஹசீனாவால் தனக்குத் தெரிந்தவர்களுடன் இயல்பாகப் பழக முடியவில்லை.
“அவர் இங்கு பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்பது எங்களுக்குத் தெரியும். மிகச் சிலரே அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள்” என்று நயனிமா பாசு கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகிய இருவர் மட்டுமே அவரைச் சந்தித்ததாகக் கேள்விப்பட்டுள்ளோம், மேலும் எங்கள் வட்டாரங்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளன”என்றார்.
‘தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டால் எந்த ஆச்சரியமும் இல்லை’
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், ஷேக் ஹசீனா டெல்லியில் ஒரு பங்களாவில் வசித்து வருவதாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அவரது காலை நடைப்பயிற்சி தொடர்பான செய்திகள் கூட தலைப்புச் செய்தியாகியுள்ளது.
இருப்பினும், லோதி கார்டனுக்கு தினமும் வரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள ஒருவர், எந்த சூழ்நிலையிலும் அங்கு காலை நடைப்பயிற்சிக்குச் செல்ல முடியாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
லண்டனை சேர்ந்த எழுத்தாளரும் வங்கதேச ஆராய்ச்சியாளருமான பிரியாஜித் தேவ் சர்க்கார், தேவைப்பட்டால், ஷேக் ஹசீனாவை சுற்றியுள்ள ரகசியத் திரையை இந்தியா படிப்படியாகத் தளர்த்த முடியும் என்கிறார்.
“பாதுகாப்புடன் ஷேக் ஹசீனாவின் அனைத்துப் பொறுப்புகளையும் இந்தியா கவனித்துக்கொள்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், “அதிகாரத்தில் உள்ள கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஷேக் ஹசீனா எங்கள் விருந்தினர் என்றும் அவர் விரும்பும் வரை இந்தியாவில் தங்கலாம் என்றும் ஒருமனதாக கூறியுள்ளன.”
“ஆனால், ஹசீனா பயங்கரவாதிகளின் இலக்காக இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவரது பாதுகாப்புக்கான பொறுப்பு இந்தியாவின் தோள்களில் உள்ளது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில், அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் (இந்தியா) பார்த்துக் கொள்ள வேண்டும்.”
பட மூலாதாரம், Getty Images
இதனால்தான் ஷேக் ஹசீனாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பிரியாஜித் நம்புகிறார்.
“நான் இங்கே ஒரு உதாரணம் கொடுக்க விரும்புகிறேன். கோவிட் தொற்றுநோய் காலத்தில், ‘தளர்வுகள்’ அதாவது ஊரடங்குக்குப் பிறகு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைக் கண்டோம். அதேபோல், ஷேக் ஹசீனா தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆடியோ உரைகளை வழங்கி வருகிறார்”
“யாருக்குத் தெரியும், ஒருவேளை எதிர்காலத்தில், விஷயங்கள் சிறிது தளர்த்தப்பட்ட பிறகு, வேறு ஏதேனும் ஊடகம் மூலமாகவோ அல்லது வீடியோ மூலமாகவோகூட நாம் அவரை பார்க்க முடியும்.” என்கிறார்.
அதே சமயம், ஏழு மாதங்களுக்குப் பிறகும், ஷேக் ஹசீனா எங்கே வசிக்கிறார் என்ற கேள்விக்கான பதில் நமக்குத் தெரியவில்லை என்பதும் உண்மைதான்.
ஒருவேளை மீரட்டில் உள்ள ராணுவ முகாமுக்குள் ஏதாவது பாதுகாப்பான வீட்டில் இருக்கலாம் அல்லது அங்கே இல்லாமலும் இருக்கலாம்.
உண்மையில், ஷேக் ஹசீனாவின் இருப்பிடம் குறித்து இவ்வளவு நீண்ட காலமாக இந்தியா ரகசியம் காப்பது ஒரு பெரிய விஷயம் என்று கூறலாம்.
மக்கள் அவரை மீண்டும் அவாமி லீக்கின் தலைவராக ஏற்றுக்கொள்வார்களா?
ஷேக் ஹசீனா எதிர்காலத்தில் வங்கதேசத்துக்குத் திரும்பி வந்து தனது கட்சியான அவாமி லீக்கை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்ற கேள்வி தற்போதும் பொருத்தமானதாக உள்ளது.
ஆனால் ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்ரீராதா தத்தா, இந்த பணி சாத்தியமற்றது எனும் அளவுக்குக் கடினமானது மட்டுமல்ல, இந்த விவகாரத்தில் அவர்களுக்கு உதவுவது இந்தியாவுக்கே மிகவும் கடினமான ஒன்றாகும் என்கிறார்.
”மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்தும் விவாதங்கள் நடக்கின்றன. இந்திய அரசு இதைப் பற்றி என்ன யோசிக்கிறதென்று நமக்கு தெரியவில்லை. ஆனால், அவாமி லீக் இதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பது உறுதி. ஆனால், இப்போது வங்கதேசத்தில் அத்தகைய சூழ்நிலை அமைய வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன்” என்று பிபிசி வங்காள சேவையிடம்கூறினார் ஸ்ரீராதா தத்தா.
பட மூலாதாரம், Getty Images
ஷேக் ஹசீனாவின் பூர்வீக வீடு மற்றும் பல பகுதிகளில் நடந்த தாக்குதல்கள் நிச்சயமாக அவாமி லீக்குக்கு ஆதரவாக “அனுதாபத்தை” உருவாக்கியுள்ளன என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.
ஆனால், இது ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு வழிவகுக்கும் என்று சொல்ல முடியாது.
“அவாமி லீக் கட்சி நிச்சயமாக ஒரு வரலாற்று சிறப்புள்ள அரசியல் கட்சி. வங்கதேசத்தின் அரசியல் வரைபடத்தில் அதற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அதனால் இத்தனைக்குப் பிறகும், அனைவரும் அவரை அவாமி லீக்கின் தலைவராக ஏற்றுக்கொள்வார்கள் என்று அர்த்தமல்ல. இந்தக் கேள்விக்கான பதில் கடினம் என நான் நினைக்கிறேன்” என்று ஸ்ரீராதா தத்தா கூறுகிறார்.
டெல்லியில் உள்ள பார்வையாளர்களின் கருத்துக்களிலிருந்து ஒரு விஷயம் முற்றிலும் தெளிவாகிறது.
அதாவது, ஷேக் ஹசீனா தனது ஆதரவாளர்களிடம் சமூக ஊடகங்கள் மூலம் உரையாற்ற அனுமதிக்கப்படுகிறார்.
ஆனால் இதன் அர்த்தம், இந்தியா அவரை வங்கதேச அரசியல் களத்தில் மீண்டும் நிலைநிறுத்த விரும்புகிறது என்பதல்ல.
உண்மை என்னவென்றால், தற்போது வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை இந்தியா மதிப்பீடு செய்தபோது, இதைச் செய்யும் ஆவலும், ஆற்றலும் இந்தியாவுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் யதார்த்தம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு