பட மூலாதாரம், Sippy Films
இந்தியாவின் மிக பிரம்மாண்டமான பொழுதுபோக்குத் திரைப்படங்களில் ஒன்றான ‘ஷோலே’ வெளியாகி ஐம்பதாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இந்தத் திரைப்படம் ஏன் இந்தியாவின் மகத்தான படங்களில் ஒன்றாக இருக்கிறது?
இந்தியாவில் வெளியான திரைப்படங்களிலேயே மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்றான ‘ஷோலே’-வுக்கு பிறகு இந்தியாவில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும்கூட, இந்தப் படம் ஏற்படுத்திய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகம்தான்.
1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், ஹேமமாலினி, ஜெயாபாதுரி, அம்ஜத்கான் ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்தின் கதையை சலீம் கான் – ஜாவேத் அக்தர் ஜோடி இணைந்து உருவாக்க, ரமேஷ் சிப்பி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தி சினிமாவின் மகத்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஆர்.டி. பர்மன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
’60 திரையரங்குகளில் பொன்விழா கண்ட திரைப்படம்’
பட மூலாதாரம், Sippy Films
இந்தப் படம் வெளியாகி, ஐம்பதாண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும்கூட, இந்தியாவின் மிகப் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகவே இந்தப் படம் நீடிக்கிறது. மும்பையில் இருந்த மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றான மினர்வாவில், இந்தப் படம் மூன்று ஆண்டுகளுக்கு எல்லா காட்சிகளும் ஓடியது. மதியக் காட்சி மட்டும் இரண்டு ஆண்டுகள் ஓடியது.
பிபிசி இந்தியா நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பில் “Film of the Millennium” ஆகவும் தேர்வுசெய்யப்பட்டது. ஆர்.டி. பர்மன் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அடங்கிய ஐந்து லட்சம் கேஸட்டுகள் விற்பனையாகின. 60 திரையரங்குகளில் பொன்விழா கண்ட இந்தத் திரைப்படம், 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெள்ளிவிழாக் கண்டது.
‘ஷோலே’ படத்தின் ஒன் -லைன் என்று பார்த்தால், ஒரு பயங்கரக் கொள்ளையனை இரு இளைஞர்கள் எப்படி வீழ்த்துகிறார்கள் என்பதுதான். இந்த ஒன் – லைனுக்குள் காதல், சாகசம், சண்டைகள், பழிவாங்கும் உணர்வு, துக்கம், அற்புதமான இசை என எல்லாம் கலக்கப்பட்டு ஒரு மகத்தான திரைப்படம் உருவாக்கப்பட்டது.
படத்தின் விரிவான கதை இதுதான் (Spoiler Alert): வீருவும் (தர்மேந்திரா) ஜெய்யும் (அமிதாப்பச்சன்) சிறு சிறு குற்றங்களைச் செய்பவர்கள். அந்தப் பிராந்தியத்தில் மிகவும் தேடப்படும் குற்றவாளியான கப்பர் சிங்கை (அம்ஜத்கான்) பிடித்துத் தந்தால், அரசு அறிவித்துள்ள பணத்தைவிட கூடுதல் பணத்தைத் தருவதாகச் சொல்கிறார் முன்னாள் இன்ஸ்பெக்டரான தாகூர் பல்தேவ் சிங் (சஞ்சீவ் குமார்). அதை ஏற்கும் இருவரும் தாகூர் வசிக்கும் ராம்கர் கிராமத்திற்குச் செல்கின்றனர்.
அங்கே, குதிரை வண்டி ஓட்டும் பசந்தியை (ஹேமமாலினி) வீரு காதலிக்கிறான். தாகூரின் மருமகள் ராதா (ஜெயாபாதுரி) கணவனை இழந்தவள். அவளைக் காதலிக்க ஆரம்பிக்கிறான் ஜெய். ஒரு ஹோலி பண்டிகையின்போது கப்பர் சிங்கின் கும்பல் கிராமத்தைத் தாக்குகிறது. வீருவும் ஜெய்யும் கஷ்டப்பட்டு சண்டையிட்டு அவர்களை விரட்டுகிறார்கள்.
ஆனால், அந்தத் தருணத்தில் தாகூர் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது இவர்களை வருந்தச் செய்கிறது. பிறகுதான் தாகூரின் குடும்பத்தினர் அனைவரும் கப்பர் சிங்கால் கொல்லப்பட்ட தகவலும் தாகூரின் கைகள் இரண்டும் வெட்டப்பட்ட தகவலும் தெரியவருகிறது. இதற்குப் பிறகு, ஜெய்யும் வீருவும் எப்படி கப்பர் சிங்கையும் அவன் கூட்டத்தையும் ஒழிக்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.
பட மூலாதாரம், Sippy Films
தணிக்கை கட்டுப்பாடுகளால் மாற்றப்பட்ட இறுதிக்காட்சி
இந்தத் திரைப்படம் இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்த காலகட்டத்தில் வெளியானது. அதனால், தணிக்கையின்போது இந்தப் படம் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வில்லன் கப்பர் சிங்கை தாகூர் கொன்றுவிடுவதைப் போலத்தான் முதலில் க்ளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை அதிகாரிகள் இதற்கு ஆட்சேபணை தெரிவித்ததால் படத்தின் முடிவை மாற்றுவதைத் தவிர, தயாரிப்பாளர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.
ஆகவே, படப்பிடிப்பு நடந்த ராமநகரம் பகுதிக்கு மீண்டும் வந்து, கப்பர் சிங் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவதாக காட்சிகள் எடுக்கப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டன. இதற்குப் பிறகே தணிக்கைச் சான்றிதழ் படத்திற்கு வழங்கப்பட்டது.
ஷோலே உருவான பின்னணி
பட மூலாதாரம், Sippy Films
இப்படி ஒரு மகத்தான திரைப்படத்தை உருவாக்கும் முயற்சி எப்படி உருப்பெற்றது? இந்தத் திரைப்படம் உருவான பின்னணியை ‘Sholay: The Making of a Classic’ நூலில் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் அனுபமா சோப்ரா.
“1970கள் இந்தி சினிமாவின் பொற்காலத்தின் இறுதி ஆண்டுகளாக இருந்தன. டிவி, கேஸட்டுகள், செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் ஆகியவற்றால் ரசிகர்களின் கவனம் சிதறடிக்கப்படாமல், அவர்களின் கவனம் முழுவதும் சினிமா மீது மட்டுமே குவிக்கப்பட்டிருந்த யுகத்தின் இறுதி ஆண்டுகள் அவை.
இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் ஜி.பி. சிப்பியும் இயக்குநர் ரமேஷ் சிப்பியும் ஒரு மகத்தான் கனவைக் கண்டனர். தங்கள் உள்ளுணர்வை பின்தொடரும் துணிச்சலும் அவர்களுக்கு இருந்தது. இந்தியத் திரையுலகம் இதுவரை காணாத ஒரு படத்தை எடுக்க அவர்கள் திட்டமிட்டனர்.” என்கிறார் அனுபமா சோப்ரா
“ஹாலிவுட்டில் வெளியான ‘வன்மேற்கு’ திரைப்படங்கள் அவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தன. இந்த யோசனை வந்துவுடனேயே படக்குழுவினருக்கு வன்மேற்கு ஜுரம் பிடித்துக்கொண்டது. தென்னிந்தியாவில் இருந்த ஒரு வறண்ட நிலப்பரப்பை தங்கள் படப்பிடிப்புக்குத் தேர்வுசெய்தனர். அதனை தங்களுக்கு ஏற்றபடி மாற்றினர். அந்தப் படப்பிடிப்புக் குழுவில் இருந்த ஒவ்வொரு உறுப்பினரின் துணிச்சலும் உழைப்பும் ‘ஷோலே’ என்ற அற்புதத்தை நினவாக்கியது”.
பட மூலாதாரம், Penguin India
இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை கொடுக்க நினைத்தார்கள் தயாரிப்பாளரும் இயக்குநரும். அந்த காலகட்டத்தில் இந்திய சினிமாவில் திரைப்படங்கள் 35 எம்எம் வடிவத்திலும் சினிமாஸ்கோப் வடிவத்திலும் வெளியாகிவந்தன.
ஆனால், ஹாலிவுட்டில் வெளியான ‘மெக்கன்னாஸ் கோல்ட்’ போன்ற பிரம்மாண்ட திரைப்படங்கள் 70எம்எம்மில் வெளியிடப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆகவே ‘ஷோலே’ திரைப்படத்தையும் 70 எம்எம் வடிவத்தில் எடுக்க முடிவுசெய்யப்பட்டது. ஆனால், அதற்காக கேமராக்களை இறக்குமதி செய்வதெல்லாம் மிகவும் செலவுபிடிக்கும் காரியமாக இருந்தது என்பதால், 35 எம்எம்மில் படம் பிடித்து 70 எம்எம் அளவுக்கு பெரிதாக ப்ரிண்ட் செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால், அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த பெரும்பாலான திரையரங்குகள் 70 எம்எம் திரைப்படங்களைத் திரையிடும் வசதி கொண்டவையாக இல்லை. ஆகவே 70 எம்எம்மில் சில பிரதிகளும் வழக்கமான 35 எம்எம்மில் மீதப் பிரதிகளையும் ப்ரிண்ட் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
திரைப்படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள்
‘ஷோலே’வைத் திரையிடும் பிரதானமான திரையரங்காக மும்பையின் மினர்வா தேர்வுசெய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் ‘மகாராஷ்டிராவின் பெருமிதம்’ எனக் குறிப்பிடப்பட்ட அந்தத் திரையரங்கு, ஒரு 70 எம்எம் திரையரங்கு.
இந்தத் திரையரங்கில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஷோலேவின் ப்ரீமியர் திரையிடப்பட்டபோது, படம் பார்த்தவர்கள் சிரிக்கவோ, அழுகவோ, கைதட்டவோ இல்லை. அமைதியே நிலவியது எனக் குறிப்பிடுகிறது அனுபமா சோப்ராவின் நூல். படத்தைப் பார்த்த விமர்சகர்களும் எதிர்மறை விமர்சனங்களையே சொன்னார்கள்.
1975 ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் வெளியானபோது, ஞாயிற்றுக்கிழமை வரை திரையரங்குகள் நிறைந்திருந்தாலும் படத்தைப் பற்றி பெரிய உற்சாகமில்லை. அவசர அவசரமாக விவாதித்த படக்குழுவினர், படத்தின் முடிவை மாற்றலாமா என யோசித்தனர். அதாவது ஜெய் மரணமடைவதற்குப் பதிலாக, ராதாவுடன் இணைவதாக காட்டலாமா என யோசித்தார்கள். பிறகு அந்த யோசனை கைவிடப்பட்டது.
இரண்டாவது வாரத்தில் பெங்களூரில் படம் வெளியானது. ஆனாலும் பெரிய பேச்சில்லை. ஆனால், மூன்றாவது வாரத்தில் நிலைமை மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக திரையரங்குகளில் கூட்டம் கூட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போக ஆரம்பித்தது. 15 ரூபாய் பால்கனி டிக்கெட்டுகள் 200 ரூபாய்க்கு கருப்புச் சந்தையில் விற்கப்பட்டதாக குறிப்பிடுகிறார் அனுபமா சோப்ரா.
இந்தியாவில் ஒரு திரைப்பட டிக்கெட் 100 ரூபாயைத் தாண்டி விற்பனையானது அதுவே முதல் முறை என்கிறார் அவர். இதற்குப் பிறகு, நாட்டின் ஒவ்வொரு பகுதியாக படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இந்தியாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது.
இந்தப் படம் வெளியான நாற்பதாம் ஆண்டில் பிபிசியிடம் பேசிய மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன், “இந்தப் படத்தில் வரும் வன்முறைக் காட்சிகள் திடுக்கிட வைப்பவையாக இருந்தன” என்று குறிப்பிட்டார். “இந்தப் படத்தில் வந்த சில காட்சிகள் சாதாரண கற்பனையில் தோன்றக்கூடயவை அல்ல” என்றார் அவர்.
ஆனால், இந்தப் படம் வர்த்தகரீதியாக பெரும் வெற்றிபெற்ற படம் என்பதைத் தவிர, வேறுவகையில் குறிப்பிடத்தக்க படம் அல்ல என்று குறிப்பிட்டார் திரைப்பட விமர்சகரான தியடோர் பாஸ்கரன்.
இருந்தபோதும், 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய சினிமாவில் மறக்க முடியாத ஒரு திரைப்படமாகவே ஷோலே இருந்துவருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு