படக்குறிப்பு, நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவர்ம் என்ற ஒட்டுண்ணி தொற்று மத்திய அமெரிக்காவிலும் மெக்ஸிகோவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது கட்டுரை தகவல்
எழுதியவர், நார்டின் சாத்
பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு மனிதருக்கு தசை திசுக்களை உண்ணும் புழு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல் சால்வடோரில் இருந்து அமெரிக்காவுக்கு திரும்பிய ஒரு நோயாளிக்கு இந்த தொற்று இருப்பது ஆகஸ்ட் 4 அன்று உறுதி செய்யப்பட்டது. இதை அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை அறிவித்தது.
நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவர்ம் (NWS) என்பது ஒரு வகை ஒட்டுண்ணி ஈயால் ஏற்படும் தொற்று. இந்த ஈயின் புழுக்கள் (லார்வாக்கள்) உயிருள்ள திசுக்களை உண்ணுகின்றன. இதை மருத்துவத்தில் “மையாசிஸ்” அல்லது புழு தொற்று என்கிறார்கள்.
இந்த ஒட்டுண்ணி முதன்மையாக கால்நடைகளைப் பாதிக்கிறது. ஆனால், அரிதாக மனிதர்களையும் தாக்கலாம். தற்போது அமெரிக்காவில் பொது சுகாதாரத்துக்கு இதன் ஆபத்து “மிகவும் குறைவு” என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention – CDC) மேரிலாண்ட் சுகாதாரத் துறையுடன் இணைந்து இந்த பாதிப்பை ஆய்வு செய்து வருகிறது.
இது தொற்று பரவிய நாட்டில் இருந்து பயணத்தால் அமெரிக்காவுக்கு பரவிய என் டபிள்யு எஸ் மையாசிஸ் முதல் மனித பாதிப்பு என்று சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ நிக்சன் தெரிவித்தார்.
இந்த அழிவுகரமான ஒட்டுண்ணி பொதுவாக தென் அமெரிக்காவிலும் கரீபியன் பகுதிகளிலும் காணப்படுகிறது.
வடக்கு நோக்கி பரவாமல் இதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மெக்ஸிகோ உட்பட மத்திய அமெரிக்காவின் அனைத்து நாடுகளிலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனிதர்கள், அதிலும் குறிப்பாக திறந்த காயங்கள் உள்ளவர்கள் இந்த தொற்றுக்கு எளிதில் ஆளாகலாம். இந்த ஈக்கள் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்பவர்கள் அல்லது கிராமப்புறங்களில் கால்நடைகளுடன் இருப்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று சிடிசி எச்சரிக்கிறது.
இந்த தொற்றை எதிர்கொள்ள மற்ற வேளாண் அமைப்புகள், மாநிலத் துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் (Food and Agriculture Organization) இணைந்து செயல்படுவதாக யு.எஸ்.டி.ஏ-வின் விலங்கு மற்றும் தாவர சுகாதார ஆய்வு சேவை (USDA’s Animal and Plant Health Inspection Service),தெரிவித்துள்ளது.
“நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவர்ம் ஈயின் லார்வாக்கள் (புழுக்கள்) உயிருள்ள விலங்கின் தசையில் புதைந்து, அந்த விலங்குக்குக் கடுமையான, பெரும்பாலும் மரணத்துக்கு வழிவகுக்கும் சேதத்தை ஏற்படுத்துகின்றன,” என்று யு.எஸ்.டி.ஏ தெரிவிக்கிறது. “என் டபிள்யுஎஸ் கால்நடைகள், செல்லப்பிராணிகள், வனவிலங்குகள், அரிதாக பறவைகள், மற்றும் அரிய சந்தர்ப்பங்களில் மனிதர்களையும் தொற்றலாம்.”
கால்நடைகளில் ஸ்க்ரூவர்ம் தொற்று பரவினால், கால்நடை மற்றும் மாட்டுத் தொழிலுடன் தொடர்புடைய 100 பில்லியன் டாலருக்கு ($73.9 பில்லியன் பவுண்டுகள்) மேற்பட்ட பொருளாதார செயல்பாடுகளை அச்சுறுத்தும் கடுமையான பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்று யு.எஸ்.டி.ஏ இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தது.