பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதன் போட்டியாளரான பாரதி ஏர்டெல் ஆகியவை ஸ்டார்லிங்க் இணைய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் உடன் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
மஸ்க் சமீபத்தில் இரு நிறுவனங்களுடனும் வெளிப்படையாக மோதியதால், இந்த ஒப்பந்தம் துறைசார் நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல், இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கும் வேளையில் இந்த ஒப்பந்தங்கள் நடந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 2-ம் தேதி பதிலடி வரிகளை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் செயற்கைக்கோள் இணைய சேவையை விரிவுபடுத்துவதை, இந்த ஒப்பந்தங்கள் நோக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால், ஸ்பேஸ்எக்ஸ் தன் செயல்பாடுகளைத் தொடங்க இந்திய அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உள்ளது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி ஸ்டார்லிங்க் உலகம் முழுவதும் 4.6 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது என அறியப்படுகின்றது.
ஸ்பேஸ்எக்ஸ் 2021 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் சேவைகளைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆனால் ஒழுங்குமுறைத் தடைகள் அதன் வருகையை தாமதப்படுத்தியுள்ளன.
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள சமூகங்கள் மற்றும் வணிகங்களுக்கு பிராட்பேண்ட் சேவைகளை வழங்க ஸ்டார்லிங்குடன் இணைந்து தங்கள் மொபைல் இணைய சேவையைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றன.
ஜியோ அதன் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்கும் மற்றும் சாதனங்களை நிறுவுவதற்கான ஆதரவை வழங்கும். அதே நேரத்தில் ஏர்டெல்லும் அதனை ஆராய்ந்து வருவதாகக் கூறுகிறது.
ஸ்டார்லிங்கின் போட்டியாளரான யூடெல்சாட் ஒன்வெப்புடன் ஏற்கனவே உள்ள உடன்படிக்கையுடன், புதிய ஒப்பந்தம் இணைந்திருப்பது அதன் இணைப்பை விரிவுபடுத்த உதவும் என்றும் ஏர்டெல் கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஜியோ இயங்குதளங்கள் மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களுடன் ஸ்டார்லிங்க் ஒரே நேரத்தில் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை பலரும் எதிர்பார்க்கவில்லை.
இந்த அறிவிப்பு வரும் வரை, இந்தியாவின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சந்தையில் ஸ்டார்லிங்கின் மிகப்பெரிய போட்டியாளராக ஜியோ காணப்பட்டது.
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களைச் சேர்ந்த கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி மற்றும் சுனில் பாரதி மிட்டல் ஆகியோர், செயற்கைக்கோள் பிராட்பேண்டை நிர்வாக ரீதியாக ஒதுக்க வேண்டும் என்ற மஸ்க்கின் கோரிக்கையை கூட்டாக எதிர்த்தனர்.
இது உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போகும் என்பதால், செயற்கைக்கோள் பிராட்பேண்டை நிர்வாக ரீதியாக ஒதுக்க வேண்டும் என்று மஸ்க் வாதிட்டார்.
அம்பானியும் மிட்டலும் அதனை போட்டி முறையில் ஏலம் விட வேண்டும் என்று விரும்பினர்.
கடந்த அக்டோபரில், மஸ்குக்கு கிடைத்த பெரும் வெற்றியாக, நிர்வாக ரீதியாக பிராட்பேண்ட் ஒதுக்கப்படும் என இந்திய அரசு அறிவித்தது.
இந்த கூட்டணிகள் அந்த கொள்கையின் பின்னணியில் உருவானவை. கடந்த மாதம் வாஷிங்டனில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் ஈலோன் மஸ்க் நடத்திய சந்திப்பின் போது, விண்வெளி தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
“அமெரிக்க அரசின் மீதான மஸ்கின் செல்வாக்கு, “வானளவு உயர்ந்துள்ளது. அதனால்தான் இந்தியா நிர்வாக ஒதுக்கீட்டை தேர்ந்தெடுத்திருக்கலாம். இந்த முடிவு அரிதானது” என்கிறார் தொழில்நுட்ப ஆய்வாளர் பிரசாண்டோ கே ராய்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா உலகில் இரண்டாவது பெரிய இணைய சந்தையாக இருக்கிறது. ஆனால், அதன் 140 கோடி மக்களில் 67 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னும் இணைய வசதியை பெற முடியாமல் உள்ளனர் என்று உலகளாவிய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக அமைப்பான GSMA வெளியிட்ட 2024 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஎஸ்எல் (தொலைபேசி கம்பிகளை பயன்படுத்தி தரவை பரிமாற்றும் இணைப்பு) அல்லது கேபிள் போன்ற பாரம்பரிய சேவைகள் கிடைக்காத தொலைதூர அல்லது கிராமப்புற பகுதிகளில் நம்பகமான தேர்வாக செயற்கைக்கோள் பிராட்பேண்ட் இருக்கும்.
“ஸ்டார்லிங்க் இங்கே ஒரு தெளிவான வெற்றியாளர்,” என்கிறார் கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் ஆய்வாளர் தருண் பதக்.
ஒப்புதல் வழங்கப்பட்டால், இந்த கூட்டணிகளின் மூலமாக இந்தியாவின் மொத்த மொபைல் பயன்பாட்டாளர்களில் 70 சதவீத மக்களை ஈலோன் மஸ்கால் சென்றடைய முடியும்
மஸ்க், “இந்தியாவில் தனது இருப்பை நிறுவ விரும்புகிறார். ஏனெனில், இந்த நாட்டின் பெரிய சந்தை அளவு அவருக்கு பொருளாதார அடிப்படையில் பலன் அளிக்கும்.”
குறிப்பாக உள்நாட்டு இணையவழி சேவைகள் அதிக மதிப்புடையதாக இருப்பதை கருத்தில் கொள்ளும் போது அவருக்கு பலன் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவின் தரவு சார்ந்த உள்ளூர் சட்டங்களை ஸ்டார்லிங்க் விரைவில் பின்பற்ற உதவும் வழியாகவும் இந்த கூட்டணிகள் இருக்கின்றன என்று அவர் கூறுகிறார்.
வாடிக்கையாளர் சேவைக்கு எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன என்பது முக்கியமானதாக அமையும். ஏனென்றால் இந்தியாவில் மொபைல் டேடா கட்டணங்கள் உலகிலேயே மிகவும் மலிவாக உள்ளன.
சேட்டிலைட் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு மாதம் சுமார் 150 டாலர் வரை செலவாகும். அதே சமயம், மொபைல் டேட்டாவுக்கு 150 ரூபாய் ஆகும். (2 டாலர்; 1.33 யூரோ ).
ஆனால் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களுடனும் ஒன்றிணையும் கூட்டணி, விலையை சுமார் 3,000 ரூபாய் வரை குறைக்க உதவும் என்கிறார் ராய்.
“ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை ஒரே போன்ற சேவைகளை வழங்குவதால், மஸ்க்கின் பார்வையில் விலை நிர்ணயம் சிறப்பாக இருக்கலாம், மிகக் குறைவாக இருக்க வாய்ப்பில்லை” என்று அவர் கூறுகிறார்.
ஏர்டெல் மற்றும் ஜியோவைப் பொறுத்தவரை, மஸ்க் உடனான கூட்டணி, தொலைத்தொடர்பு கொள்கை அவர்களுக்கு சாதகமாக இல்லாததன் தெளிவான விளைவாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“ஏல முறைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மற்றவர்கள் உள்ளே நுழைவதற்கான தடைகளை அதிகரிக்க முடியும் என்று ஜியோ எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்காததால், முடிவை மாற்றிக் கொண்டு, அவர்களுடன் ஒப்பந்தம் செய்வது நல்லது என்று அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்,” என்கிறார் ராய்.
மறுபுறம், டிரம்பின் சுங்க வரிகள் மற்றும் விவாதத்தில் உள்ள வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றுடன் இணைந்து, மஸ்குடனும் “போட்டியிடுவதை” விட “ஒத்துழைப்பது” நல்லது என்று இந்திய அரசாங்கம் கருதியிருக்கலாம் என்று பதக் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
ஸ்டார்லிங்க் இணைய வேகம், கட்டணம் எவ்வளவு இருக்கும்?
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகள் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் பூடானில் தற்போதுள்ள ஸ்டார்லிங்க் சேவைகளுக்கான கட்டணத்தில் இருந்து, இந்தியாவில் அதன் விலை என்னவாக இருக்கும் என்று ஒருவர் யூகிக்க முடியும்.
பூடானில் குடியிருப்பு விளக்கு திட்டம் (Residential Light Plan) மாதத்திற்கு பூடான் நாணய மதிப்பில் 3000 நாங்கோங்ட்ரமுக்கு (Ngongtrum) கிடைக்கிறது. இந்தியா மற்றும் பூடானின் நாணயத்தின் மதிப்பு ஏறக்குறைய ஒன்றுதான், எனவே இந்த விலை இந்திய நாணய மதிப்பிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.
பூடானில், அதன் வேகம் 23 Mbps முதல் 100 Mbps வரை இருக்கும். இது பிரவுசர், சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங்கிற்கு ஏற்றது.
25 Mbps முதல் 110 Mbps வரையிலான குடியிருப்பு திட்டத்தின் விலை 4200 நாங்கோங்ட்ரம் அதாவது இந்திய மதிப்பில் ரூ.4,200க்கு சமம்.
தொலைத்தொடர்பு சந்தை நிபுணர்கள் இந்தியாவில் ஸ்டார்லிங்கின் சேவை ரூ.3500 முதல் ரூ.4500 வரை கிடைக்கும் என்று மதிப்பிடுகின்றனர். இருப்பினும், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் உடனான ஒப்பந்தம் காரணமாக இது மலிவாக இருக்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு