கோவை:
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் எம்எல்ஏ, வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது: “ஜிஎஸ்டி வரி மாற்றம் செய்யப்பட்டதால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள கோவை வந்துள்ளேன்.
தமிழ்நாடு முழுவதும் ‘எஸ்ஐஆர்’ பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்துவது ஆச்சரியம் அளிக்கிறது. இந்நடவடிக்கையை பாஜக கொண்டு வந்தது போல் திமுக-வினர் பேசுகின்றனர். கடந்த 1952-ம் ஆண்டு முதல் 13 முறை ‘எஸ்ஐஆர்’ நடைபெற்றுள்ளது. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக எதுவும் செய்யாமல், தற்போது மட்டும் ஏன் போராட்டம் நடத்துகிறது? முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்கிறோம் என புரியாமல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். துணை முதல்வர் ‘எஸ்ஐஆர்’ என்பது என்ன என தெரியாமல் பேசுகிறார்.
தங்களின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க திமுக இதுபோன்ற நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. எதிர்க்கட்சிகளோ, பாஜகவோ வெற்றி பெற்றால் ‘இவிஎம்’ இயந்திரங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். திமுக வெற்றி பெறும்போது எதுவும் எதிர்த்து பேசுவதில்லை. பிஹாரில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்துள்ளது என பேசுகிறார்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினின் கெளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஒரே பெயர், ஒரே சொந்தகாரர்கள் பெயர், ஒரே வயது. இருப்பினும் அட்டை எண்கள் மட்டும் வேறு. மொத்தம் 933 வாக்காளர்கள் போலி முகவரியில் உள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளை நீக்க வேண்டாமா? கொளத்தூர் தொகுதியில் இத்தகைய முறைகேடுகளால் தான் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றாரா என நாங்கள் கேட்கலாமா?
தற்போது கண்டறியப்பட்டுள்ள முறைகேடுகளை நீக்க வேண்டாமா? பிஹாரில் 22 லட்சம் வாக்காளர்கள் இறந்தவர்கள். இருப்பினும் வாக்காளர் பட்டியிலில் இடம்பெற்றுள்ளது. 7 லட்சம் வாக்காளர்கள் ஒரு இடத்தில் மட்டுமின்றி மேலும் வேறு இடத்திலும் பெயர் பதிவு செய்துள்ளனர். 35 லட்சம் பேர் நிரந்தரமாக பிஹாரை விட்டு வெளியேறி விட்டோம் என கூறியுள்ளனர்.
பிஹாரில் மட்டும் 64 லட்சம் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கக் கூடாது. அதற்குத்தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரண்டாவது கட்டமாக தேர்தல் ஆணையம் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் டெரிட்டரிகளிலும் ‘எஸ்ஐஆர்’ பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் தேர்தல் ஆணையத்திற்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் மீது அமெரிக்க அதிபர் 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் சலுகை திட்டங்கள் அறிவிப்பது தொடர்பாக தொழில் துறையினருடன் பேசி வருகிறோம். விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.