• Tue. Feb 25th, 2025

24×7 Live News

Apdin News

ஸ்டாலின் சொன்னால் புதுச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணி! – எதிர்க்கட்சித் தலைவர் சிவா சூசகம் | exclusive mini interview with puducherry opposition leader siva

Byadmin

Feb 25, 2025


தமிழகத்தை ஒட்டியே இருந்தாலும் பெரும்பாலும் புதுச்சேரி மாநில அரசியலானது தமிழகத்தைவிட வித்தியாசமானது. தமிழகத்தில் திமுக, அதிமுக தான் பிரதான கட்சிகள். ஆனால், புதுச்சேரியில் காங்கிரஸ் தான் பிரதான கட்சியாக இருக்கும். இப்போது அங்கிருந்து பிரிந்த என்.ஆர்.காங்கிரசும் பிரதானமாக இருக்கிறது. திமுக-வும் அதிமுக-வும் புதுச்சேரி அரசியலில் இரண்டாம்பட்சம் தான்.

புதுச்சேரியில் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக தான் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் இங்கு காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து ஜெயிக்க வைத்திருக்கிறது திமுக. இந்த நிலையில், அண்மையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சிவா, “இனியும் ஓடாத வண்டியில் ஏறி பயணம் செய்ய திமுக தயாராக இல்லை. 2026 தேர்தலில் திமுக 20 தொகுதிகளை கேட்டுப் பெறும். தனித்து என்றால் 30 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்” என்று பேசியது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் சிவா நமக்களித்த மினி பேட்டியிலிருந்து…

20 தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். தனித்து என்றால் 30 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று சொன்னதற்கு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு தான் காரணமா?

திமுக தலைவரும் தமிழக முதல்​வருமான ஸ்டா​லின், புதுச்​சேரி​யில் மீண்​டும் திமுக ஆட்சி அமைய வேண்​டும் என்று சொல்லி புதுச்​சேரி மாநிலத்​தில் உள்ள 30 தொகு​தி​களி​லும் கட்சி​யின் கட்டமைப்பை வலுப்​படுத்த உத்தர​விட்​டார். அதனடிப்​படை​யில் புதுச்​சேரி மாநிலத்​தில் உள்ள 30 தொகு​தி​களில் குறிப்​பாக, புதுச்​சேரி, காரைக்​கால் மாவட்​டங்​களில் உள்ள 28 தொகு​தி​களில் கட்சி​யின் கட்டமைப்பை வலுப்​படுத்தி உள்ளோம். மாஹே, ஏனாம் தொகு​தி​களில் கிளைக் கழகத்தை பலப்​படுத்​தும் பணி நடந்து வருகிறது.

தமிழகத்​தில் திமுக ஆட்சி​யில் செயல்​படுத்​தப்​படும் மக்கள் நலத்​திட்​டங்​களின் தாக்கம் புதுச்​சேரி​யிலும் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தான் திமுக-​வில் வேட்​பாளர்​களாக நிற்​ப​தற்கு ஒவ்வொரு தொகு​திக்​கும் போட்டி போட்டுக்​கொண்டு வருகிறார்​கள். அவர்கள் எல்லாம் தேர்​தலில் வாய்ப்​புக் கிடைக்​கும் என்ற நம்பிக்கை​யில் மக்களுக்கு சேவை​யாற்றி வருகிறார்​கள். எதுவாக இருந்​தா​லும் கட்சித் தலைவர் எடுக்​கும் முடிவுக்கு கட்டுப்​பட்​ட​வர்கள் நாங்​கள். அவர் காட்டு​கின்ற வழியில் புதுச்​சேரி திமுக தேர்தலை சந்திக்​கும்.

அதேசம​யம், புதுச்​சேரி திமுக-​வில் உள்ளவர்களை ஊக்கப்​படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதனால் எங்கள் கழகத்​தின் செயற்​குழு கூட்​டத்​தில் நிர்​வாகி​களின் ஆலோசனைகளை பெற்​றோம். அதை தலைமைக்கு தெரியப்​படுத்தி தலைவரிடத்​தில் எடுத்​துரைத்து புதுச்​சேரி​யில் இண்டியா கூட்​ட​ணி​யில் 20 தொகு​திகளை பெறு​வோம் என்றும் கூறினோம். செயற்​குழு​வின் முடிவை கட்சித் தலைவரிடத்​தில் வலியுறுத்து​வதற்காக உள்ளரங்​கில் திமுக-​வினர் மத்தி​யில் விவா​தித்து எடுக்​கப்​பட்ட முடிவு. இதற்​கும் காங்​கிரஸ் கட்சிக்​கும் எந்த சம்பந்​த​மும் இல்லை.

20 தொகுதிகளில் போட்டியிடும் அளவுக்கு திமுக புதுச்சேரியில் பலம் பெற்றுள்ளதா?

புதுச்​சேரி​யில் நான்கு முறை ஆட்சி அமைத்து பல்வேறு மக்கள் நலத்​திட்​டங்களை முன்னெடுத்த இயக்கம் திமுக. அந்த இயக்கம் என்றும் வலுவாகத்​தான் இருக்​கும். புதுச்​சேரி மாநிலத்தை சுற்றி 2 கிலோ மீட்டர் தொலை​வில் தமிழ்​நாடு உள்ள​தால் எங்கள் கட்சித் தலைவர் கொண்டு வந்துள்ள புது​மைப் பெண் திட்​டம், நான் முதல்வன் திட்​டம், தொழில் புரட்​சி​யில் அந்நிய முதலீடுகளை ஈர்த்து வேலை​வாய்ப்பை உருவாக்கி கொடுத்​தது, பெண்​களுக்கு பேருந்​தில் இலவச பயணம் போன்ற முன்னோடித் திட்​டங்​களின் தாக்கம் புதுச்​சேரி மக்களிடையே ஏற்பட்​டிருக்​கிறது.

அதனால் புதுச்​சேரி மக்கள் மாற்​றத்தை எதிர்​பார்த்து காத்​திருக்​கிறார்​கள். அவர்​களின் எண்ணத்தை பூர்த்தி செய்​கின்ற பணிகளைத்​தான் திமுக முன்னெடுத்​திருக்​கிறது. அதில் சலசலப்புகள் வரத்​தான் செய்​யும். அதைப்​பற்றி எல்லாம் கவலைப்​ப​டாமல் மக்களுக்கான பணியை திமுக தொடர்ந்து செய்​யும்.

ஓடாத வண்டி என இண்டியா கூட்டணியை சொல்கிறீர்களா… காங்கிரஸ் கட்சியை சொல்கிறீர்களா?

திமுக சமூக நீதி, சமத்து​வம், சகோதரத்துவம் என்ற கொள்கை கோட்​பாட்​டில் தொடர்ந்து பயணம் செய்​யுமே தவிர, கொள்​கையற்​றவர்​களுடன் பயணிக்​காது என்ப​தைத் தான் ஓடாத வண்டி​யில் திமுக பயணிக்​காது என்று சொன்னேன். இந்த கருத்து கூட்​ட​ணி​யில் உள்ள யாரை​யும் குறிப்​பிட்டு அல்ல.

புதுச்சேரியில் 2026 தேர்தலில் திமுக தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறதா?

இண்டியா கூட்​ட​ணி​யில் இருக்​கும் திமுக தமிழ்​நாட்​டில் கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கு​கிறது. அதேபோல் புதுச்​சேரி​யில் கூட்​ட​ணிக்கு காங்​கிரஸ் தலைமை வகிக்​குமா அல்லது தற்போது அதிக எம்எல்​ஏ-க்களை வைத்​துள்ள திமுக தலைமை தாங்​குமா என்றெல்​லாம் கேள்விகளை எழுப்பு​கின்​றனர்.

ஆனால் நான் வழக்​கமாக சொல்வது போல், புதுச்​சேரி மாநில திமுக-​வானது எங்கள் கட்சித்தலைவர் கட்டளைப்படி தான் செயல்​படும். ஒருவேளை, 2026-ல் இண்டியா கூட்​ட​ணிக்கு புதுச்​சேரி​யில் தலைமை தாங்​கும்படி எங்கள் தலைவர் சொன்​னால் அதையும் வெற்றிகரமாக செயல்​படுத்த நாங்கள் தயாராக இருக்​கிறோம்.

ஆளும் என்.ஆர்.காங்கிரசையோ, முதல்வர் ரங்கசாமியையோ திமுக அதிகம் விமர்சிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? 2026-ல் கூட்டணி மாற்றம் ஏதேனும் ஏற்படுமோ?

என்.ஆர்​.​காங்​கிரஸ் தலைவர் ரங்க​சாமி பாஜக கூட்​ட​ணி​யில் இருக்​கும் வரை கூட்டணி மாற்​றத்​திற்கு இடமில்லை. எங்களைப் பொறுத்​தமட்​டில் புதுச்​சேரி​யில் இண்டியா கூட்டணி வலுவாக இருக்​கிறது. இந்த கூட்​ட​ணி​தான் ஆளும் கட்​சி​யின் அவலங்களை மக்​கள் மத்​தி​யில் தோலுரித்து 2024 மக்​கள​வைத் தேர்​தலில் அதிக ​வாக்​கு​கள் ​வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. அதே​போல் 2026 தேர்​தலிலும் இண்​டியா கூட்​டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும்​.



By admin