சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது. கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: ‘25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு கூடாது’ – கூட்டு நடவடிக்கை குழுவின் 7 தீர்மானங்கள் என்னென்ன?
முதல்வர் ஸ்டாலின் பேச்சு: இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்தால் தமிழகம் 8 முதல் 12 இடங்களை இழக்கும். எண்ணிக்கைதான் அதிகாரம். ஒருவேளை நமக்கான தொகுதிகளை நாம் இழந்தால் சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இருக்க நேரிடும்.
இந்த விவகாரத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை. குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது அதனாலேயே முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழகம் ஒன்றிணைந்துள்ளது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்: “மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே, மத்திய அரசு தொகுதி மறுவரையறைக்கு அவசரம் காட்டுவது ஏன்? கடந்த முறை நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேரளாவின் மக்கள் தொகை பெருக்கம் 4 சதவீதமாகத்தான் இருந்தது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும் விகிதாச்சார அடிப்படையின் அர்த்தம் என்ன?
இந்தத் தொகுதி மறுவரையறை கூட்டாட்சியை மறுக்கிறது. பிரிட்டிஷாரின் அதிகார குவிப்புக்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுவே அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்தது. மத்திய அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியக் கலாசாரம் என்பது அதன் பன்முகத்தன்மையில் தான் உள்ளது. அதுதான் இந்தியாவின் அடித்தளம்” என்று அவர் பேசினார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: “நாடு இன்று மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. பாஜக மக்கள் தொகை அபராதக் கொள்கையை அமல்படுத்த நினைக்கிறது. இந்த தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்மாநிலங்கள், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் ஒன்றாக இணைந்து நிற்கின்றன. கடந்த 1976-ம் ஆண்டு நாடு குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பியது. அதனைத் தென்மாநிலங்கள் எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டின. வட இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்கள் அதில் தோல்வியைத் தழுவின.
அதேபோல் தென்மாநிலங்கள் வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. அதிக ஜிடிபி, அதிக தனிநபர் வருமானம், வேலைவாய்ப்புகள் உருவாக்கம், சிறந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, சிறந்த நிர்வாகம் மற்றும் சிறப்பான சமூக நலன் என அடைந்து கவர்ந்திழுக்கும் தெற்காக மாறியுள்ளது. தற்போது மக்களவையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 24 சதவீதம். தொகுதி மறுவரையை நடத்தியே தீர்வது என்று மத்திய அரசு விரும்பினால் மொத்தமுள்ள ஐந்து தென்மாநிலங்களுக்கான மக்களவைப் பிரதிநிதித்துவத்தை 30 சதவீதமாக உயர்த்துங்கள்,” என்று பேசினார்.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பகவந்த் மான்: “தாங்கள் வெற்றி பெரும் மாநிலங்களின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும், தோல்வியைச் சந்திக்கும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதே பாகஜவின் நோக்கமாகும். அதன்படி பஞ்சாப் மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளும் குறைக்கப்படும். ஏனெனில் பாஜக பஞ்சாப்பில் வெற்றி பெறாது. இந்தத் தொகுதி மறுவரையறையால் இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே ஆதாயம் பெறும்” என்றார்.
கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டிகே சிவகுமார்: “மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுமானால், அது தென் மாநிலங்கள் மீதான அரசியல் தாக்குதலாக அமையும். நமது மாநிலங்கள் நீண்ட காலமாக இந்தியாவின் வளர்ச்சியின் தூண்களாக இருந்து வருகின்றன. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக திகழ்கின்றன. சமூக வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கின்றன. மக்கள் தொகை வளர்ச்சியை திறம்பட கட்டுப்படுத்துகின்றன.
இது வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான போர் அல்ல. மாநிலங்களின் ஒன்றியம் என்ற இந்தியாவின் பார்வையை மீட்டெடுப்பதற்கான போராட்டம் இது. நியாயமான பிரதிநிதித்துவத்திற்கு நாங்கள் தகுதியானவர்கள். எங்கள் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க இந்த வரலாற்றுப் போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்” என்று கூறினார்.
காணொலி மூலம் இக்கூட்டத்தில் உரையாற்றிய பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக், “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களில் வாழும் மக்களின் ஜனநாயக பிரதிநிதித்துவத்தையும் உரிமைகளையும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான கூட்டம் இது. மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது. ஒடிசா மக்களின் நலன்களைப் பாதுகாக்க பிஜு ஜனதா தளம் எல்லாவற்றையும் செய்யும். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மத்திய அரசு விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு சந்தேகங்களைப் போக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.
7 தீர்மானங்கள்: ‘1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்’ என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். அதன் விவரம்: ‘25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு கூடாது’ – கூட்டு நடவடிக்கை குழுவின் 7 தீர்மானங்கள் என்னென்ன?