பட மூலாதாரம், Getty Images/@mkstalin
பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை வைத்து அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இது போன்ற வழக்குகள் தேர்தல் அரசியலில் எதிரொலிக்கின்றனவா?
ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விவகாரங்களில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கும் ஒன்று. 2016ம் ஆண்டுக்கும் 2018ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பெண்கள், இளம்பெண்களை மிக மோசமாக வீடியோ எடுத்து, அதனை வைத்து மிரட்டி, மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவகாரம் 2019ம் ஆண்டில் இளம்பெண் ஒருவர் அளித்த புகார் மூலம் வெளிச்சத்துக்கு வந்து மாநிலத்தையே அதிரவைத்தது.
இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை மத்தியப் புலனாய்வு முகமை (சி.பி.ஐ.) விசாரித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. மே 13ஆம் தேதி இந்த வழக்கில் கோயம்புத்தூரில் உள்ள மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய நீதிபதி நந்தினி தேவி, அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
தீர்ப்பு வெளியான உடனேயே, இந்த வழக்கு குறித்து ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் கடுமையாக மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன.
திமுக Vs அதிமுக
பட மூலாதாரம், SPECIAL ARRANGEMENT
இந்த வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு, இது குறித்து கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!” என பதிவிட்டிருந்தார்.
உடனே, முதலமைச்சரின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, “உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் ஸ்டாலின்” என்று ஒரு நீண்ட பதிவை வெளியிட்டார்.
மேலும் அப்பதிவில், “யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?” என கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் இருவரும் பிரியாணி சாப்பிட்டதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் முன்பு வைரலாகியிருந்தது. எனினும், இதுகுறித்து மா. சுப்பிரமணியன் விளக்கம் அளிக்கவில்லை.
இதையும் தன் பதிவில் குறிப்பிட்டு, அமைச்சர் மற்றும் துணை மேயர் மீது நடவடிக்க்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அண்ணா பல்கலை. விவகாரத்தில் சம்பவம் நடந்த சமயத்தில், ஞானசேகர் ‘சார்’ ஒருவரிடம் பேசியதாகவும் அப்போது சர்ச்சை கிளம்பியது.
இதை குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, “#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!” என்று கூறியுள்ளார்.
அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றதையும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதற்குப் பிறகு, இந்த விவகாரம் அ.தி.மு.க. – தி.மு.க. இடையிலான மோதலாக உருவெடுத்தது. எக்ஸ் தளத்தில் அ.தி.மு.கவினரும் தி.மு.கவினரும் இது தொடர்பாக மோதிக் கொண்டனர்.
காவல்துறையின் மீதான கடுமையான விமர்சனங்கள்
பட மூலாதாரம், Special Arrangement
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக கடுமையாக அ.தி.மு.கவை விமர்சிக்க ஆரம்பித்தன. நாடாளுமன்றத் தேர்தல் வேறு நெருங்கிவந்த நிலையில், இந்த விவகாரம் மேற்கு மாவட்டங்களில் மிகச் சிக்கலான விவகாரமாக உருவெடுத்தது.
அப்போது பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரை இந்த விவகாரத்துக்காகக் குரல் கொடுத்தனர். திமுக எம்.பி. கனிமொழி பொள்ளாச்சிக்கே சென்று போராட்டம் நடத்தினார்.
கல்லூரி மாணவர்களும் போராட்டங்களில் இறங்கினர். இந்த விவகாரம் குறித்துப் பதிலளிக்கும்படி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.கவினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
வழக்கு உள்ளூர் காவல் துறையினரிடமிருந்து மார்ச் 12ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றபட்டபோதிலும் போராட்டங்கள் ஓயாத நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றியது அப்போதைய அ.தி.மு.க. அரசு.
இந்த வழக்கைப் பொறுத்தவரை காவல்துறையின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வளவு பெரிய விவகாரம் வெடித்து ஒரு வாரம் ஆன நிலையிலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தாதது, காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இடம்பெற்றது, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக காவல்துறை தனது காவலில் எடுத்து விசாரிக்காதது என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன எதிர்க்கட்சிகள்.
குறிப்பாக, அப்போதைய கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயராம் ஆகியோர் மீது வழக்கை நீர்த்துப்போகச் செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், இந்த வழக்குகளில் ஆளும் அ.தி.மு.க. தொடர்பானவர்களும் சம்பந்தப்பட்டிருந்தது எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராட ஏதுவாக அமைந்தது.
வழக்கில் கைதான ஹேரோனிமோஸ் பால் என்கிற ஹேரோன், அதிமுக சிறுபான்மையினர் அணியில் நிர்வாகியாக இருந்தார். அருள் ஆனந்தம் என்கிற அருள், அதிமுக மாவட்ட மாணவரணி நிர்வாகியாக இருந்து வந்தார்.
தி.மு.கவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி போராட்டம் நடத்தச் சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நாகராஜின் பார் அடித்து நொறுக்கப்படும் அளவுக்கு, அந்தப் பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்திருந்தனர்.
அ.தி.மு.க. வலுவாக உள்ள மேற்கு மாவட்டம் ஒன்றில் வெடித்த இந்த விவகாரம், பொதுமக்களின் கோபம் எதிர்காலத் தேர்தல்களில் எதிரொலிக்குமோ என்ற அச்சம் அ.தி.மு.கவுக்கு ஏற்படும் அளவுக்கு இந்த விவகாரம் உருவெடுத்தது.
சிபிஐ விசாரணைக்கு எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமா?
பட மூலாதாரம், @mkstalin
இவ்வளவு சிக்கலான வழக்கில் தீர்ப்பு வெளியாகியிருக்கும் நிலையில்தான், முதலமைச்சரே இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
“தமிழ்நாட்டில் இது ஒரு திருப்புமுனை வழக்கு. இதனை முதலமைச்சர் அரசியலாக்க விரும்பவில்லையென்றாலும், மற்ற கட்சிகள் இதனை அரசியலாக்க நினைத்தனர். அம்மாதிரி சூழலில் தி.மு.கவும் இதில் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் முதலமைச்சர் பேச வேண்டியிருந்தது” என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன்.
மேலும், இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு எடப்பாடி கே. பழனிசாமி உரிமைகோர முடியாது என்று கூறும் அவர், “இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி புகார் அளித்தார். ஆனால், இதில் முதல் தகவல் அறிக்கை 12 நாட்கள் கழித்து, பிப்ரவரி 24ஆம் தேதிதான் பதிவு செய்யப்பட்டது. 12 நாட்கள் ஏன் காலதாமதம் செய்யப்பட்டது?” என கேள்வியெழுப்புகிறார்.
“பாதிக்கப்பட்டு, புகார் அளித்தவரின் சகோதரனை சிலர் மிரட்டினார்கள். அந்த மிரட்டல் விவகாரம் வெளியில் வந்து, எல்லோரும் போராட ஆரம்பித்த பிறகுதான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த முதல் தகவல் அறிக்கையில் வெறும் 3 பேர் மட்டுமே குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். சி.பி.ஐ. வழக்கை கையில் எடுத்த பிறகுதான் மற்றவர்கள் சேர்க்கப்பட்டனர்.” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.
தொடர்ந்து பேசிய அவர், “இப்போது இதில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. முந்தைய அ.தி.மு.க. அரசுதான் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முறைப்படி மேற்கொண்டது என்றால், 9 பேரையும் குற்றவாளிகளாகச் சேர்த்திருக்க வேண்டாமா?” என அவர் கேள்வியெழுப்பினார்.
மார்ச் 10ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றன. “இந்த நிலையில்தான், இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றுவதாக எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.”
ஆகவே, “எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களால்தான் இந்த வழக்கு, சி.பி.ஐயிடம் கொடுக்கப்பட்டு, தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. ஆகவே, இதில் அவர் உரிமை கோருவதில் எந்த நியாயமும் இல்லை” என்கிறார் கான்ஸ்டைன்டீன்.
அ.தி.மு.க கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
பிபிசியிடம் பேசிய அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், “எல்லா விவகாரங்களையும் பிரசாரமாக்குவதில் தி.மு.க. தீவிரமாக இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் பலனிருக்காது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் வந்தால், இவர்கள் பேரணி நடத்துகிறார்கள். அதைப்போலத்தான் இதுவும்.” என்று கூறினார்.
மேலும், “இந்த விவகாரம் வெடித்த பிறகு, உடனடியாக வழக்குப் பதிவுசெய்யச் சொன்னது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிதான். இந்த நிலையில், அ.தி.மு.கவினர் சிலர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. தன் கட்சிக்காரர் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், உண்மை வெளிவரட்டும் என்று துணிந்து முடிவெடுத்தார் எடப்பாடி கே. பழனிசாமி. அதனால்தான் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதே தவிர இவர்கள் அழுத்தமெல்லாம் காரணமல்ல” என்றார்.
இத்தகைய வழக்குகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பட மூலாதாரம், Getty Images
ஆனால், தமிழ்நாட்டில் இதுபோன்ற வழக்குகள் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.
“பாலியல் வழக்குகள், ஆணவக் கொலைகள் ஆகியவை மக்களின் மனசாட்சியை உலுக்கக்கூடியவை என்பது உண்மைதான். ஆனால், தேர்தலில் வாக்களிக்கும் போதும் இந்த விவகாரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. தேர்தல் என்று வரும்போது பல்வேறு விவகாரங்களை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்கிறார்கள்.
ஆகவே, அந்தத் தருணத்தில் சம்பந்தப்பட்ட கட்சியைக் குற்றம்சாட்ட இது ஒரு வாய்ப்பளிக்கிறது அவ்வளவுதான். அதைத் தாண்டி இதில் பெரிதாக அரசியல் செய்ய முடியாது” என்கிறார் ஷ்யாம்.
இந்த விவகாரம் வெடித்த பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியைத் தவிர்த்து அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது என்றாலும், 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சியை உள்ளடக்கிய மேற்கு மாவட்டப் பகுதிகளில் இந்த வழக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டின.
சேலத்தில் மொத்தமுள்ள 11 இடங்களில் 10 இடங்களையும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்த தலா எட்டு இடங்களில் தலா ஐந்து இடங்களையும் கோயம்புத்தூரில் பத்து இடங்களையும் அ.தி.மு.க. கூட்டணியே கைப்பற்றியது. இந்தச் சம்பவம் நடந்த பொள்ளாச்சி தொகுதியிலேயே அ.தி.மு.கவின் பொள்ளாச்சி வி. ஜெயராமன் வெற்றிபெற்றார்.
ஆனால், இந்தக் கருத்தை கான்ஸ்டைன்டீன் ஏற்கவில்லை. “பொள்ளாச்சி ஜெயராமன் ஜெயித்திருக்கலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களில் இந்த விவகாரமும் ஒன்று” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Shyam
இப்போது மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் இதுபோன்ற குற்ற வழக்குகள், ஊழல் வழக்குகள் தேர்தல்களில் உதவியதில்லை என்கிறார் ஷ்யாம்.
“1980களின் துவக்கத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைரவேல் காணாமல் போனதாகவும் இது குறித்து கேள்வியெழுப்பிய இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை கொல்லப்பட்டதாகவும் கூறி, ஆளும் அதிமுகவுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களைத் தி.மு.க. நடத்தியது.
1982 பிப்ரவரியில் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடும்பயணம் என்ற பெயரில் நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் கருணாநிதி. ஆனால், 1983ல் திருச்செந்தூர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், அ.தி.மு.கவே வெற்றிபெற்றது. 1984லும் அந்தத் தொகுதியில் அ.தி.மு.கவே வெற்றிபெற்றது” என நினைவுகூர்கிறார் அவர்.
அதேபோல, மறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் குற்றத்தை உறுதிசெய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அக்கட்சித் தொண்டர்கள், 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி நடத்திய ஒரு போராட்டத்தின்போது கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் கோயம்புத்தூரில் உள்ள தமிழக வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் உயிரிழந்தனர்.
“இந்தச் சம்பவம் மாநிலம் தழுவிய அளவில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவே வெற்றிபெற்றது. மேலும் சம்பவம் நடந்த தருமபுரி மாவட்டத்தின் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே வெற்றிபெற்றன” என்று கூறும் ஷ்யாம்,
“குற்ற மனம் படைத்தவர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருப்பார்கள் என வாக்காளர்கள் புரிந்துகொள்வதுதான் இதற்குக் காரணம்” என்கிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு