3
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதிக் கொண்டு தடம்புரண்ட விபத்தில் 39 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து, கொர்டோபா நகருக்கு அருகே உள்ள அடாமுஸ் பகுதியில் நிகழ்ந்துள்ளது. மலாகா நகரிலிருந்து மட்ரிட் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு அதிவேக ரயில், திடீரென தடம்புரண்டு, பக்கத்து தடத்தில் சென்றுகொண்டிருந்த மற்றொரு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து பேசிய காவல்துறை பேச்சாளர், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். விபத்து நேரத்தில் அந்த ரயிலில் சுமார் 400 பேர் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்த ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் Óscar Puente, தடம்புரண்ட ரயில் கிட்டத்தட்ட புதியது என்றும், அந்த பாதையும் சமீபத்தில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். இதனால் விபத்திற்கான காரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
விபத்தைத் தொடர்ந்து, மட்ரிட் நகரிலிருந்து அண்டலூசியா வட்டாரத்துக்குச் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் விசாரணை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த கோர விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ஸ்பெயின் பிரதமர் Pedro Sánchez, அடாமுஸ் பகுதியில் ஏற்பட்ட இந்த ரயில் விபத்து முழு நாட்டிற்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு முழு ஆதரவு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.