0
ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘Els Enfarinats’ எனப்படும் உணவுச் சண்டை இந்த ஆண்டும் (2025) உற்சாகமாக நடைபெற்றது. அலிகாந்தே மாகாணத்தில் உள்ள இபி (Ibi) நகரம் முழுவதும் மாவும் உடைந்த முட்டைகளும் பரவிய காட்சிகள் காணப்பட்டன.
இந்த நிகழ்வில் பங்கேற்பவர்கள் இராணுவ உடைகளை அணிந்து, முட்டை, மாவு மற்றும் பட்டாசுகளை பயன்படுத்தி ஒரு போலியான ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்வை நாடக வடிவில் நடத்துவர் என BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்கள் ஊரின் பல பகுதிகளுக்குச் சென்று, உள்ளூர் மக்களிடம் அறநிறுவனங்களுக்கு வழங்க நன்கொடைகள் சேகரிப்பதும் இந்த விழாவின் ஒரு பகுதியாகும். நன்கொடை வழங்க மறுப்பவர்களுக்கு முட்டை அல்லது மாவு வீசப்படலாம் என்பதும் இந்த நிகழ்ச்சியின் தனித்துவமான அம்சமாகும்.
சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 28ஆம் திகதி நடைபெறுகிறது. அந்த நாள் ஸ்பெயினில் ‘April Fools’ Day’ போல கேலி மற்றும் கிண்டல் நிறைந்த நாளாகக் கருதப்படுவதாக BBC குறிப்பிட்டுள்ளது.
இந்நிகழ்வில் உணவு வீணடிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனம் தெரிவித்தாலும், பயன்படுத்தப்படுவது கெட்டுப்போன முட்டைகளும் பயன்பாட்டுக்குத் தகாத மாவும்தான் என ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

