ஸ்பேடெக்ஸ் (SpaDex) திட்டத்தின் கீழ், பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட 2 விண்கலங்களையும் இணைப்பதற்கான முதல் கட்ட பரிசோதனைகளை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து பார்த்துள்ளது.
அந்த 2 விண்கலங்களையும் 15 மீட்டர் வரை நெருங்கி வரச் செய்து பரிசோதிக்க திட்டமிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள், தற்போது அதையும் தாண்டி 3 மீட்டர் வரை இரு விண்கலங்களையும் வெற்றிகரமாக நெருங்கி வரச் செய்துள்ளனர். அதன் பிறகு இரு விண்கலங்களும் பாதுகாப்பான இடைவெளிக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனையில் கிடைத்த தரவுகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் இணைப்பு செயல்முறை (Docking) செயல்முறை மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இரு விண்கலங்களும் நெருங்கி வந்த காட்சியையும், ஒன்றையொன்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
‘ஸ்பேடெக்ஸ்’ என்பது Space Docking Experiment (விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணி) என்பதன் சுருக்கம்.
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் நோக்கம் விண்கலத்தை ‘டாக்’ (Dock- இணைப்பு) மற்றும் ‘அன்டாக்’ (Undock- இணைப்பைத் துண்டிப்பது) செய்வதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை செயல்படுத்துவதாகும்.
பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் இவை விண்ணில் ஏவப்பட்டன.
ஸ்பேடெக்ஸ் திட்டம் என்றால் என்ன?
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் இரண்டு சிறிய விண்கலங்களை சுமந்து செல்கிறது. இந்த இரண்டு விண்கலங்களும் தோராயமாக 220 கிலோ (தனித்தனியாக) எடை கொண்டவை.
இவை பூமியில் இருந்து 470 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, புவியின் சுற்று வட்டப்பாதையில் பயணிக்கும். இவற்றில் ஒன்றின் பெயர் சேசர் (Chaser- SDX01), மற்றொன்று டார்கெட் (Target- SDX02).
இந்த திட்டத்தின் நோக்கங்கள் என்பது,
- வெற்றிகரமாக விண்கலன்களை ஒருங்கிணைப்பது (Docking),
- இணைக்கப்பட்ட விண்கலங்களுக்கு இடையேயான ஆற்றல் பரிமாற்றம்,
- இணைப்பைத் துண்டித்த பிறகு பேலோட் (Payload- ஒரு விண்கலம் சுமந்து செல்லக்கூடிய பொருட்கள் அல்லது அதன் திறன்) தொடர்பான நடைமுறைகளை கையாளுதல்.
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ், ஒரு விண்கலத்தை ‘டாக்’ மற்றும் ‘அன்டாக்’ செய்வதற்கான திறன் நிரூபிக்கப்படும்.
ஒரு விண்கலத்தை மற்றொரு விண்கலத்துடன் இணைப்பது ‘டாக்கிங்’ (Docking) என்றும், விண்வெளியில் இணைக்கப்பட்ட இரண்டு விண்கலங்களைப் பிரிப்பது ‘அன்டாக்கிங்’ (Undocking) என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்பேடெக்ஸ் திட்டம் ஏன் மிகவும் முக்கியமானது?
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் மற்றொரு நோக்கம் குறைந்த செலவில் தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்துக்காட்டுவதாகும்.
இந்தியாவின் விண்வெளி தொடர்பான எதிர்கால லட்சியங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் அவசியம். விண்வெளியில், இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்கி, அதை செயல்படுத்துவது, இந்திய விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவது போன்றவை இந்த எதிர்கால திட்டங்களில் அடங்கும்.
ஒரு பொதுவான திட்டத்திற்காக பல ராக்கெட்டுகளை ஏவ வேண்டியிருக்கும் போது ‘இன்-ஸ்பேஸ் டாக்கிங்’ (In-space docking) தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.
உதாரணத்திற்கு, ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்படும் இரண்டு செயற்கைக்கோள்களில் ஒன்று சேசர் (Chaser- SDX01) மற்றும் மற்றொன்று டார்கெட் (SDX02), இவை இரண்டுமே அதிவேகத்தில் பூமியைச் சுற்றி வரும்.
அவை இரண்டும் ஒரே சுற்றுப்பாதையில் ஒரே வேகத்தில் நிலைநிறுத்தப்படும். ஆனால் இரண்டுக்கும் இடையே சுமார் 20 கிலோமீட்டர் இடைவெளி இருக்கும். இந்த உத்தி ‘ஃபார் ரெண்டெஸ்வஸ்’ (Far Rendezvous) என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு இத்திட்டம் ஏன் முக்கியமானது?
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, விண்வெளி டாக்கிங் (Docking) தொழில்நுட்பத்தைக் கொண்ட உலகின் நான்காவது நாடாக இந்தியா திகழும்.
விண்வெளியில் இந்த டாக்கிங் என்பது மிகவும் சிக்கலான ஒரு பணி. அதாவது விண்கலன்களை இணைப்பது விண்வெளியில் அவ்வளவு சுலபமல்ல.
தற்போது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த டாக்கிங் தொழில்நுட்பம் உள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்டம் மூலம் விண்வெளித் துறையின் டாக்கிங் தொழில்நுட்பத்தில் இந்தியாவும் கால் பாதிக்கிறது.
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் கூறுகையில், “டாக்கிங் தொழில்நுட்பத்தில் நாம் நிபுணத்துவம் பெறுவதன் மூலம், விண்வெளித்துறையில் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்” என்று கூறினார்.
‘சந்திரயான் -4’ போன்ற இந்தியாவின் நீண்ட கால விண்வெளித் திட்டங்களுக்கும், எதிர்காலத்தில் இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கும் இந்த ஸ்பேடெக்ஸ் திட்டம் முக்கியமானது என்று ஜிதேந்திர சிங் கூறினார்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்திற்கும் இந்த ‘டாக்கிங்’ தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
வேறு என்ன நடக்கும்?
இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று, ‘டாக்கிங்’ தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்படும் விண்கலங்களுக்கு இடையேயான ஆற்றல் பரிமாற்றத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது.
இது ஸ்பேஸ் ரோபோடிக்ஸ் (Space robotics- விண்வெளித் திட்டங்களில் மனிதர்களுக்கு மாற்றாக பிரத்யேக ரோபோக்களைப் பயன்படுத்துவது) போன்ற எதிர்கால ஆய்வுத் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும்.
இதுதவிர, விண்கலத்தை முழுமையாக கட்டுப்படுத்துவது மற்றும் இணைப்பைத் துண்டித்த பிறகு (Undock) பேலோட் தொடர்பான நடைமுறைகளை கையாள்வது போன்ற விஷயங்களும் இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒரு பகுதியாகும்.
ஸ்பேடெக்ஸ் பிஎஸ்எல்வி-இன் நான்காவது கட்டத்தை, அதாவது POEM-4 (PSLV Orbital Experimental Module) என்பதை சோதனைகளுக்குப் பயன்படுத்தும்.
இந்த கட்டத்தில், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட 24 பேலோடுகள் எடுத்துச் செல்லப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், மணிக்கு 28,800 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இரண்டு செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த இஸ்ரோ முயற்சிக்கும். இது மிகவும் சவாலான ஒரு பணியாக இருக்கும். எனவே இதை மிகவும் எச்சரிக்கையாகவும் கையாள வேண்டியது அவசியம்.
சந்திரயான்-4 திட்டம் என்றால் என்ன?
சந்திரயான்-4 திட்டத்தின் கீழ் எல்எம்வி-3 மற்றும் பிஎஸ்எல்வி ஆகிய இரண்டு ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி, நிலவுக்கு வெவ்வேறு கருவிகளின் இரண்டு தொகுப்புகள் அனுப்பப்படும்.
இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கி, மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து, ஒரு பெட்டியில் வைத்து நிலவில் இருந்து பூமிக்கு திரும்பும்.
இதில் ஒவ்வொரு செயலையும் நிறைவேற்ற பல்வேறு கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வெற்றி பெற்றால், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா மேலும் ஒருபடி முன்னோக்கிச் செல்லும்.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, 2104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
2040ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்கும் இலக்கை நோக்கிய இந்தியாவின் அடுத்தபடியாக இது பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முன்னர் பிபிசி தமிழிடம் பேசிய மொஹாலி இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், “முதலில் நமக்கு கிடைத்த தகவல்கள், நிலவை சுற்றி வந்த விண்கலத்திடம் இருந்து வந்தன. அதன் பின், நிலவில் தரையிறங்கிய போது, ஏற்கெனவே கிடைத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நமது புரிதலை மேம்படுத்திக் கொண்டோம். இப்போது அடுத்தக்கட்ட விரிவான ஆய்வுக்காக நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரிக்கவுள்ளோம்.” என்று கூறியிருந்தார்.
சந்திரனின் மேற்பரப்பு மாதிரிகளை சேகரிப்பது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என்றும் த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
“1967 முதல் சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ள சந்திரன் ஒப்பந்தத்தின்படி, எந்தவொரு தனி நாடும் சந்திரனுக்கு உரிமை கோர முடியாது. அந்த ஒப்பந்தத்தின்படி, சந்திரனில் இருந்து கொண்டு வரப்பட்ட மாதிரிகள், பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.” என்று கூறியிருந்தார் த.வி.வெங்கடேஸ்வரன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.