பட மூலாதாரம், JioStar
இது யாருமே எதிர்பாராத ஒரு நிகழ்வு…
முன்னாள் அமைச்சர் ஸ்மிரிதி இரானி நடிக்கும் இந்தி தொலைக்காட்சி நாடகத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தோன்றியதை அப்படித்தான் பெரும்பாலான இந்தியர்கள் விவரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘க்யூன்கி சாஸ் பி கபி பாஹு தி’ (ஏனெனில் மாமியாரும் ஒரு காலத்தில் மருமகள்) என்ற அந்த நாடகத்தின் வியாழக்கிழமை எபிசோடில் தோன்றிய பில் கேட்ஸ், இரானியோடு தாய் சேய் நலன் பற்றிப் பேசினார்.
தாய் சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்க உத்திர பிரதேசம் மற்றும் பிஹார் அரசுகளோடு ‘தி கேட்ஸ் அறக்கட்டளை’ பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறது. பெரிய மக்கள் தொகை கொண்டிருந்தாலும் வசதிகள் குறைவான மாநிலங்களாக அவை இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநிலங்கள் உள்பட மொத்தமாகவே தாய் சேய் நலனில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாக அரசு தரவுகள் சொல்கின்றன. ஆனால், ஆணாதிக்கம் நிறைந்த இந்த நாட்டில் சவால்கள் இருக்கவே செய்கின்றன.
அத்தகைய சூழலில், சமூகப் பழக்கவழக்கங்களை மாற்றி, பெண்குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் நலனை பாதுகாப்பதன் தேவையை மக்களிடம் அதிகமாக உணர்த்துவதற்கு தொடர்ச்சியான தகவல் பரிமாற்றம் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதை செய்ய ஒரு சிறந்த வாய்ப்பாக ‘க்யூன்கி சாஸ் பி கபி பாஹு தி’ நாடகத்தைப் பயன்படுத்திக்கொண்டார் கேட்ஸ்.
2000-ஆம் ஆண்டு ஜூலையில் முதல் முறையாகத் தொடங்கப்பட்ட இந்தத் தொடர் நீண்ட காலம் வெற்றிகரமாக ஓடியது. ஸ்டார் பிளஸ் சேனலில் சுமார் எட்டரை ஆண்டுகள் தினமும் வெற்றிகரமாக ஓடிய இந்தத் தொடர் சில ஆயிரம் எபிசோட்கள் கடந்ததாகக் கூறுகிறார் ‘பிரிண்ட்’ இணையதளத்தில் கட்டுரையாளர் மற்றும் வாசகர்களின் ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் சைலஜா பாஜ்பாய்.
2025 ஜூலை மாதம் இந்தத் தொடரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.
இரானி நடிக்கும் துளஸி கதாபாத்திரத்துக்கும் அவரது மாமியாருக்கும் இடையேயான சிக்கலான குடும்ப உறவை மையமாகக் கொண்ட இந்தத் தொடர் இந்திய பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. கடமைமிகுந்த புதிய மணப்பெண் சந்திக்கும் சோதனைகளும் துன்பங்களும் இந்திய குடும்பங்கள் ஒவ்வொரு எபிசோடையும் தவறவிடாமல் பார்க்க உறுதி செய்வதாக அமைந்தன.
இத்தொடரில் தோன்றும் விரானி குடும்பத்தின் மையக் கதாப்பாத்திரம் இரானியின் துளசி தான். இதன் முதல் எபிசோடில், ஒரு பணக்கார குடும்பத்தின் வாரிசை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பட மூலாதாரம், JioStar
கால் நூற்றாண்டு கழித்து, இப்போது துளசியின் குழந்தைகள் அனைவரும் வளர்ந்துவிட்டனர். இப்போது அவரே ஒரு மாமியார் ஆகப்போகிறார்.
இருந்தாலும் அவர் இன்னும் பொறாமை நிறைந்த, தவறாக நடந்துகொள்ளும் குடும்பத்தினரோடு போராடிக்கொண்டிருப்பதால், இன்னும் அந்த பழைய டிராமா அதிகமாகவே நிறைந்திருப்பதாக பாஜ்பாய் தெரிவித்தார்.
“செல்போன், லேப்டாப் போன்ற உபகரணங்களை, அலங்காரங்களை நீக்கிவிட்டால், இது அதே கதைதான். கொஞ்சம் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
ஆனால் தற்போது சமூக கருத்துகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். “ஏனெனில் இப்போது அவருக்கு இது பொருத்தமானதாக இருக்கிறது. அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அதனால் இந்தத் தொடர் இப்போது விவாகரத்து, தாய் சேய் நலன் மற்றும் பல சமூகம் சார்ந்த பிரச்னைகள் பற்றிப் பேசுகிறது.” என்றார்.
இந்த வியாழக்கிழமை ஒளிபரப்பான எபிசோடில் பில் கேட்ஸ் நான்கு நிமிடங்கள் வருகிறார். அமெரிக்க உச்சரிப்பில் ஹிந்தி பேசிய அவர், “நமஸ்தே துளசி ஜி” என்று கூறிவிட்டு அதை தான் சரியாக சொன்னேனா என்றும் கேட்டார்.
“ஆம். ரொம்ப சரியாக” என்று சொல்லி சிரித்தார் துளசி.
ஒரு வளைகாப்பு நிகழ்வில் அந்தப் பெண்ணுக்கு துளசி சுகாதார ஆலோசனை வழங்கிய வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து பில் கேட்ஸிடம் இருந்து அந்த அழைப்பு வந்தது.
தன் அம்மா பேசிய வீடியோவை இணையத்தில் பதிவிட்ட துளசியின் மகன், பில்கேட்ஸை ‘டேக்’ (tag) செய்து துளசியோடு வீடியோ காலில் பேச அவருக்கு ஆர்வமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு பில் கேட்ஸ் சம்மதம் தெரிவித்ததாக அவர் மகிழ்ச்சியோடு கூறினார்.
கொஞ்சம் பதற்றமடைந்த துளசி, “அவரிடம் நான் என்ன பேசுவேன்? நான் உங்களிடமும், மளிகைப் பொருள் வாங்குவது பற்றி உங்கள் தந்தையிடமும் மட்டும்தான் வீடியோ கால் பேசுவேன்.” என்கிறார் துளசி.
ஆனால், லேப்டால் ஆன் செய்யப்பட்டு பில் கேட்ஸ் தோன்றியதும் இயல்பு நிலைக்கு வந்த துளசி, அந்த பாரம்பரிய நிகழ்வுக்கான காரணத்தை அவருக்கு விளக்கினார்.
“ஒரு இளம் கர்ப்பிணித் தாயை ஆசீர்வதிப்பதற்காக நாங்கள் ஒன்றுகூடுகிறோம், அவளுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கப் பிராத்திக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், JioStar
மேலும், “பெண்கள் தங்களது ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பழக்கங்களைப் பாதுகாப்பது எவ்வளவு அவசியமென நாங்கள் கூறுகிறோம். மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி, பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லவும் அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.” என்றும் அவர் கூறினார்.
தாய்மார்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது குழந்தைகள் நன்கு வளர்வதாகவும், உலகமும் நல்ல முன்னேற்றம் காண்பதாகவும் இருவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
இந்தத் தொடரின் தயாரிப்பாளர்களான ஜியோஸ்டார் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், தாய் சேய் நலன் சுற்றியுள்ள முக்கிய பிரச்னைகளை வெளிச்சமிடுவதற்காக கதை சொல்லும் உத்தியை அந்தத் தொடர் பயன்படுத்துவதாக பி.பி.சி-க்கு கொடுத்த அறிக்கையில் தெரிவித்தது.
“கதை சொல்லும் உத்தி என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அதனால் மக்களுக்கு அறிவூட்டவும், ஊக்கமளிக்கவும், முக்கியமான பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” எனக் கூறினார் ஜியோஸ்டாரின் சுமந்தா போஸ்.
“சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எங்களது கதைகளில் சேர்ப்பதன் மூலம், திரையைத் தாண்டி மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்,” என்றும் அவர் கூறினார்.
பில் கேட்ஸ் மூன்று எபிசோட்களில் தோன்றுவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஓ.டி.டி தளங்களில் இருக்கும் பல தொடர்கள், படங்களோடு போட்டியிடத் தடுமாறிக்கொண்டிருந்த இந்தத் தொடருக்கு, பில் கேட்ஸின் தோற்றம் மீண்டும் வெளிச்சம் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார் பாஜ்பாய்.
அந்த எபிசோடின் விளம்பரம் ஒன்று, ஒரு நாளுக்குள்ளாகவே இன்ஸ்டாகிராமில் ஆறு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதனால் தாங்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்ததாக ஆயிரக்கணக்கானவர்கள் கமென்ட்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு