படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா – பலாஷ் முச்சல் திருமணம் நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற இருந்தது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பாடகர் பலாஷ் முச்சல் உடனான தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
பாடகர் பலாஷ் முச்சலும் தனது சமூக ஊடக பக்கத்தில் அடுத்த கட்டம் நோக்கி நகர்வதாகப் பதிவிட்டுள்ளார்.
இவர்கள் இருவரின் திருமணமும் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டது.
நவம்பர் 23-ஆம் தேதி ஸ்மிருதி மந்தனாவின் தந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால் திருமணம் தள்ளிவைக்கப்படுவதாக அவரின் மேலாளர் தெரிவித்திருந்தார்.
அப்போதிலிருந்து இவர்களின் திருமணம் தொடர்பாக பல்வேறு யூகங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று முதல்முறை இது தொடர்பாக இருவரும் பொது வெளியில் பேசியுள்ளனர்.
முதல் நபராக பதிவிட்ட ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு திருமணம் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
“கடந்த சில வாரங்களாக எனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பல யூகங்கள் உலவி வருகின்றன. தற்போது அதைப்பற்றி தெளிவாக பேச வேண்டும் என உணர்ந்தேன். நான் தனியுரிமையை விரும்பும் நபர், அவ்வாறே இருக்க விரும்புகிறேன். ஆனால் திருமணம் இனி நடக்காது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்றார்.
குடும்பங்களின் தனியுரிமை மதிக்குமாறு கூறிய ஸ்மிருதி மந்தனா, “இந்த விவகாரம் இத்துடன் முடிவடைய விரும்புகிறேன். இதை மேலும் எடுத்துச் செல்ல வேண்டாம் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தச் சூழலைப் புரிந்து கொண்டு எங்கள் வழியில் முன் நகர்ந்து செல்ல அவகாசம் கொடுங்கள்.” என்றும் தெரிவித்தார்.
மேலும் தனது பதிவில், “நாம் அனைவரும் உயரிய நோக்கத்திற்காக முயல வேண்டும். எனக்கு அந்த நோக்கம் என்பது எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதுதான். எனக்கு இந்தியாவிற்காக விளையாடி, வென்று என்னால் முடிந்த வரையில் அணிக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்ய வேண்டும். என் கவனம் அதில்தான் உள்ளது.” என்றார்.
பலாஷ் முச்சல் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பலாஷ் முச்சலும் தனது தரப்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பலாஷ் முச்சலும் தனது தரப்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“வாழ்க்கையில் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து தனிப்பட்ட உறவுகளிலிருந்து விலக நிற்க முடிவு செய்துள்ளேன். எனக்கு மிகவும் புனிதமாக இருந்த ஒன்றைப் பற்றி பரவும் ஆதாரமற்ற வதந்திகள் மீது மக்கள் எளிதாக கருத்து தெரிவிப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது,” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில், “இது எனது வாழ்க்கையின் கடினமான காலகட்டம். எனது நம்பிக்கைகளின் மீது உறுதியாக நின்று அதனை கையாள்வேன். உறுதிசெய்யப்படாத வதந்திகளை அடிப்படையாக வைத்து ஒருவரை மதிப்பிடுவதற்கு முன்பு ஒரு சமூகமாக நாம் நிறுத்தி, யோசிப்போம் என நம்புகிறேன்,” என்றார்.
“நமக்கு புரியாத வழிகளில் கூட நமது வார்த்தைகள் காயப்படுத்தலாம். இவை எல்லாவற்றையும் பற்றி யோசிக்கின்றபோது உலகில் பலரும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,” என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதோடு தவறான மற்றும் அவதூறான விஷயங்களைப் பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பலாஷ் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் தன்னை ஆதரித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.