ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் 63-வது ஆண்டாக முத்தம்மாள்(92) என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கைகளால் அப்பம் சுட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியன்று கைகளால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்து, சுவாமிக்கு படைக்கும் விஷேச நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு ஊரணிபட்டியைச் சேர்ந்த முத்தம்மாள் (92) என்ற மூதாட்டி தொடர்ந்து 63-வது ஆண்டாக கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார். மேலும், நெய்யால் பக்தர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்கினார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாட்கள் விரதமிருந்த முத்தம்மாள், அம்மனுக்கு சாற்றிய புடவையை அணிந்து, கொதிக்கும் நெய்யில் வெறும் கையை விட்டு அப்பம் செய்தார். அந்த அப்பம் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.